பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

இதயவுறை அழற்சி

இதயவுறை அழற்சி பற்றிய தகவல்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

இதயத்தைச் சுற்றி இருக்கும் பாய்மம் (Fluid) நிறைந்த இதயவுறையில் ஏற்படும் அழற்சி இது. ஒரு தனித்துவமான நெஞ்சு வலி பொதுவாக ஏற்படும். இது ஒரு பரவலான இதய நோய்.

இதில் மூன்று முக்கிய வகை உண்டு:

 • கடும் இதயவுறையழற்சி – நோயறிகுறிகள் மூன்று மாதங்களுக்குள் மறையும் (சிகிச்சை அளித்தால் பொதுவாக ஒரு வாரத்திலேயே குணமடையும்).
 • தொடர்ந்துவரும் இதயவுறையழற்சி – சிலருக்கு மீண்டும் மீண்டும் கடும் இதய உறை அழற்சி ஏற்படலாம்.
 • நீடித்த இதயவுறையழற்சி – இதய உறை அழற்சியில் உண்டாகும் ஒரு சிக்கலால் நோயறிகுறிகள் மூன்று மாதத்துக்கு மேலும் நீடிக்கும்.

நோயறிகுறிகள்

முதுகுப் பகுதியில், தோள்பட்டை எலும்பின் அடியில் பரவும் கடுமையான, குத்தும், நெஞ்சு வலியே கடும் இதயவுறையழற்சியின் மிகப் பொதுவான அறிகுறியாகும். உட்கார்ந்த நிலையில் முன்புறம் குனிந்தால் இவ்வலி குறையும். படுக்கும் போது அல்லது மல்லாந்து படுக்கும்போது அல்லது மூச்சை உள்ளிழுக்கும் போது வலி அதிகரிக்கும்.

பிற அறிகுறிகளில் அடங்குவன:

 • அதிகக் காய்ச்சல்
 • மூச்சடைப்பு
 • களைப்பு
 • குமட்டல்
 • வறட்டு இருமல்
 • கால்கள் அல்லது வயிறு வீங்குதல்

காரணங்கள்

இதயவுறையழற்சியின் சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. ஆனால் பெரும்பாலும் கீழ்வரும் தொற்றுக்களுடன் தொடர்புடையதாக இருக்கும்:

 • நெஞ்சுச் சளி அல்லது நிமோனியாவை உண்டாக்கும் எக்கோவைரஸ் (echovirus) அல்லது காக்சேக்கி வைரஸ் (coxsackie) போன்றவையால் ஏற்படும் தொற்றுக்கள் (சிறுவர்களிடம் பரவலாகக் காணப்படும்), இன்ஃபுளுயன்சா ஆகியவை.
 • பாக்டீரியாவால் உண்டாகும் தொற்றுக்கள் (சிறுபான்மை)
 • சில பூஞ்சைத் தொற்றுக்கள் (மிகச் சிறுபான்மை)

பிற காரணிகளில் அடங்குவன:

 • உள்பரவும் செம்முருடு நோய் போன்ற நோய்த்தடுப்பாற்றல் சார்ந்த நிலைகள் (பெண்களிடம் பரவலாகக் காணப்படும்) அல்லது வாதக்காய்ச்சல்
 • இதயக் காயம், (உ.ம்) துளையினால் தொற்று அல்லது அழற்சி உண்டாகுதல்.
 • புற்று
 • மருந்துகளின் பக்க விளைவு (உ.ம்) வார்ஃபாரின் (warfarin), ஐசோநியாசிட் (isoniazid), ஹெப்பாரின் (heparin) மற்றும்  சைக்ளோஸ்போரின் (cyclosporine).

நோய்கண்டறிதல்

 • அறிகுறிகள், உடல்பரிசோதனை மற்றும் அண்மைக்கால நோய் வரலாறு ஆகியவற்றின் மூலம் இதயவுறை அழற்சியா இல்லையா என்பது உறுதி செய்யப்படும்.
 • மின்னிதயமானி மூலம் நோய் உறுதிசெய்யப்படும், மின்னிதயமானி சோதனையில் மின்முனைகள் தோலின் மீது வைக்கப்பட்டு இதயத்தின் மின் செயல்பாடு அளக்கப்படுகிறது.

பிற சோதனைகளில் அடங்குவன:

 • நெஞ்சு எக்ஸ்-கதிர் படம்
 • காந்த அதிர்வு பிம்பம் (எம்.ஆர்.ஐ) ஊடுகதிர்
 • கணினி வரைவி ஊடுகதிர் (சி.டி.ஸ்கேன்)
 • எதிரொலி இதய மானி – இது கேளா ஒலி சோதனை போன்றதே. இதன் மூலம் இதயம் மற்றும் இதயவுறையின் விவரமான படம் ஒலியலைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது.

நோய் மேலாண்மை

பெரும்பாலும் ஊக்கமருந்தற்ற எதிர் அழற்சி மருந்துகள் (NSAIDs) மூலம் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவை அழற்சியைக் குறைக்கின்றன. நெஞ்சுவலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கின்றன. கடுமையான நோயாளிகளுக்குக் கீழ்க்கண்ட மருத்துவம் தேவைப்படும்:

 • இதயவுறை குத்துவடிப்பு: இதயவுறை கசிவு/நெறிப்பு ஆகியவற்றிற்கான சிகிச்சை.
 • ஊக்க மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் மீண்டும் மீண்டும் இதயவுறை அழற்சி ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இவை பரிந்துரைக்கப்படுவதில்லை.
 • இறுக்கமான இதயவுறை அழற்சிக்கு, இதயவுறை அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சிக்கல்கள்

நீடித்த இதயவுறை அழற்சியில் இரு முக்கிய வகைகள் உள்ளன:

 • நீடித்த இதயவுறைக் கசிவு – இதயவுறையின் உட் பகுதியில் மிகையாகப் பாய்மம் சேர்தல்
 • நீடித்த இதயவுறை இறுக்கம் – வடுக்களினால் இதயவுறைத் திசுக்கள் கெட்டியாதால்.

இதய நெறிப்பு: அழற்சியின் காரணமாக இதயவுறைக்குள் அதிகமாகப் பாய்மங்கள் தேங்கலாம். இதனால் இதய நெறிப்பு ஏற்பட்டு இதயத்தால் இரத்தத்தை உடலின் பாகங்களுக்கு தகுந்த முறையில் செலுத்த இயலாமல் போகலாம். இதுவே இதய நெறிப்பு என அழைக்கப்படுகிறது.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

Filed under:
3.16326530612
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top