பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / சிறுநீரகம் / சைக்ளோபாஸ்மைட் ஊசி மருந்து செலுத்துதல்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சைக்ளோபாஸ்மைட் ஊசி மருந்து செலுத்துதல்

சைக்ளோபாஸ்மைட் (Cyclophosphamide) ஊசி மருந்து செலுத்துதல் பற்றிய குறிப்புகள்

சில வகை சிறுநீரக வியாதிகள் உடலிற்குள்ளேயே ஏற்படும் சில எதிர்மறை விளைவுகள் சிறுநீரகங்களை பாதிப்பதால் ஏற்படுகின்றன. இது ஒரு வகை ஒவ்வாமையாகும். அதாவது நம் இரத்தத்தில் உள்ள நோய்க் கிருமி எதிர்ப்பு அணுக்களான வெள்ளை அணுக்கள் அவை உண்டாக்கும் ஆன்டிபாடி (Antibody) எனப்படும் எதிர் சத்துக்கள் என்பவை சில சமயம் நம் உடலின் சில உறுப்புகளையே கிருமி போல பாவித்து சேதப்படுத்துவதால் சில வகை நோய்கள் உண்டாகின்றன. இவைகளை ஆங்கிலத்தில் ஆட்டோ இம்யூன் (Autoimmune) வியாதிகள் என்பர். தமிழில் இவற்றை தன்திசு எதிர்ப்பு வியாதி எனலாம். இவ்வகை வியாதிகள் பல வகைப்படும். இவை உடலில் எந்த உறுப்பையும் பாதிக்காமல். சிறுநீரகங்களை பாதிக்கும் சில வியாதிகள் லூப்பஸ் சிறுநீரக வியாதி (Lupus Nephritis) வாஸ்குலைடிஸ் - இரத்தக் குழாய் அழற்சி(Vasculities) IgA  சிறுநீரக பாதிப்பு (IgA Nephropathy)  என்பன இவற்றில் சில. இவ்வகை வியாதிகளுக்கு சிகிச்சை செய்ய  உபயோகப்படுத்தப்படும் மருந்துகள் பொதுவாக இரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்களான வெள்ளை அணுக்களின் வீரியத்தையும், எண்ணிக்கையையும் அவை உண்டாக்கும் எதிர்சத்துக்களின் அளவை கட்டுப்படுத்தும் மருந்துகளாகும். இவைகளிலும் பல வகை மருந்துகள் உள்ளன. சைக்ளோபாஸ்பமைட் எனப்படும் மருந்து இவற்றில் சில வகை சிறுநீரக பாதிப்புக்களுக்கு நல்ல மருந்தாகும்.

உதாரணமாக லூப்பஸ் சிறுநீரக வியாதி வாஸ்குலைடிஸ் சிறுநீரக பாதிப்பு ஆகியன. குழந்தைகளுக்கு வரும் நெப்ராடிக் சிண்ட்ரோம் எனப்படும் சிறுநீரக பாதிப்பிற்கும் சில சமயம் உபயோகமானவை. பெரும்பாலும் மாத்திரைகளாகவே இவை கொடுக்கப்படும். சில பிரத்யேக சமயங்களில் இவை நரம்பு வழியாக ஊசிமருந்தாக கொடுக்கப்படும். இதைப் பற்றி இங்கு இனிக் காண்போம்.

வேலை செய்யும் முறை

இந்த மருந்து வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையையும் அவை உண்டாக்கும் வீரியம் மிக்க எதிர்ப்பு சத்துக்களையும் குறைக்கின்றன. இதனால் சிறுநீரகங்கள் பாதிப்பிலிருந்து தப்பிக்கின்றன. அதே சமயம் இதனால் பக்க விளைவுகளும் உண்டாகலாம்.

மருந்து கொடுக்கப்படும் முறை

மாத்திரைகளாக கொடுக்கப்படும் போது இதை நீங்கள் வெளி நோயாளியாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் வாரம் 2 முறை இரத்தத்தில் இரத்த அணுக்களின் எண்ணிக்கையை பரிசோதித்து அவை மிகவும் குறைந்து விடாமல் உள்ளனவா  என்பதை உங்கள் சிறுநீரக மருத்துவரிடமோ அல்லது குடும்ப மருத்துவரிடமோ பார்த்துக் கொள்ள வேண்டும். நரம்பு வழி ஊசி மருந்தாக கொடுக்கப்படும்போது பொதுவாக 3 மாதங்களுக்கு ஒரு முறை  மருத்துவமனையில் வைத்து கொடுக்கப்படும்.

மருத்துவமனைக்கு வரும் போதே நீங்கள் நன்கு நீர் குடித்து விட்டு வர வேண்டும். இந்த மருந்து க்ளுக்கோஸ் எனப்படும் மருத்துவ திரவத்தில் கலந்து நரம்பு எனப்படும் இரத்த தமனி வழியாக ஊசி பொறுத்தப்பட்டு கொடுக்கப்படும் இதற்கு 1 – 2 மணி நேரம் ஆகும். இம்மருந்து உள்ளே செல்லும் போது ஏதேனும் வலி எரிச்சல் ஊசி உள்ள இடத்தில் உண்டானால் உடனே மருத்துவரிடம் தெரிவிக்கவும். அது முடிந்தவுடன் நீங்கள் வீடு திரும்பலாம். இம்மருந்து செலுத்தியபின் ஒருவாரம்  கழித்து இரத்த பரிசோதனைகளுக்காக நீங்கள் மீண்டும் ஒரு முறை மருத்துவமணை வரவேண்டியிருக்கும்.

பக்க விளைவுகள் மற்றும் சிகிச்சை

  1. இம்மருந்து ஊசியாக எடுக்கும் போது உமட்டல், வாந்தி ஆகியவற்றை உண்டாக்கலாம். இதைத் தடுக்க இம்மருந்து கொடுக்கப்படும் முன்பே வாந்தி மருந்து கொடுக்கப்படும். வீட்டிற்கு செல்லும் போதும் வாந்தி வராமல் இருக்க மாத்திரைகள் கொடுக்கப்படும்.  அப்படியே இருந்தாலும் உமட்டல் போன்றவை ஓரிரு நாட்களில் சரியாகி விடும்.
  2. சைக்ளோபாஸ்பமைட் இரத்த வெள்ளை அணுக்களை குறைப்பதால் அவைகளால் தடுக்கப்படும் நோய் கிருமிகளால் வரும் நோய்கள் வர வாய்ப்பு அதிகம். எனவே நீங்கள் காய்ச்சல், தொண்டைவலி, தோல்புண், வாய்ப்புண் ஆகியவை வந்தால் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகவும். இதனை தவிர்க்கவே இந்த ஊசி போட்ட பின்னர் ஒரு வாரம் கழித்து இரத்த அணுக்களின் எண்ணிக்கையை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் எண்ணிக்கை மிகவும் குறைந்திருந்தால் அதற்குரிய சிகிச்சையை உடனே செய்து கொள்ள வேண்டும்.
  3. சில சமயம் சைக்ளோபாஸ்பமைட் சிறுநீரகப்பையில் அழற்சி (புண்) உண்டாகலாம். இதனால் சிறுநீரில் இரத்தம், சிறுநீர் கழிக்கையில் வலி, எரிச்சல் ஆகியன உண்டாகலாம். இதனைத் தவிர்க்க இந்த ஊசி போடும் முன்பு நன்றாக நீர் குடிக்க வேண்டும். தவிர உங்களுக்கு  இவ்வாறு வந்தால் மெஸ்னா என்ற ஊசி சைக்ளோபாஸ்பமைட் ஊசி போடும் முன்பு போட்டு விட்டு வீட்டிற்கு போகும் முன்பும் அதையே இரண்டு மாத்திரைகள் எடுத்துக் கொள்ள சொல்லிச் அனுப்பப்படுவீர்கள். வீட்டிலும் நீங்கள் நன்கு நீர் குடிக்க வேண்டும். இது இருந்தாலும் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும். உங்கள் சிறுநீர் கருப்பாகவோ அல்லது இரத்தம் கலந்தது போல போனாலோ உடனே மருத்துவரிடம் தெரிவியுங்கள்.
  4. சில சமயம் சைக்ளோபஸ்பமைட் எடுத்துக் கொள்வதால் முடி கொட்டுவது அதிகமாகும். ஆனால் இம்மருந்தை நிறுத்தும் போது மீண்டும் வளர்ந்து விடும்.
  5. சில சமயம் இரத்த அணுக்கள் அனைத்தையும் பாதித்து சிவப்பணுக்கள் குறைவதால் இரத்தசோகை, தட்டணுக்கள் குறைவதால் காயம்பட்டால் இரத்தம் உறையாமல் இருப்பது என்று வரலாம். லேசாக அடிபடும் இடத்திலும் கன்றியது போல் இரத்தக் கட்டு ஏற்பட்டாலோ அல்லது வாய், மூக்கிலிருந்து இரத்தம் வந்தாலோ உடனே சிறுநீரக மருத்துவரிடம் தெரிவியுங்கள்.
  6. ஆண்களுக்கும் பெண்களுக்கும் விந்து மற்றும் கருமுட்டை அணுக்களை இம்மருந்து பாதிக்கக் கூடும். பெண்களுக்கு இவ்வாறு நேர்ந்தாலும் மூன்று மாதங்களில் கருமுட்டைகள் மீண்டும் எண்ணிக்கை பொதுவாக கூடிவிடும். ஆண்களுக்கு பல சமயம் நிரந்தரமாக மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பு உண்டு.
  7. இந்த மருந்து எடுக்கும் போது கர்ப்பம் ஏற்பட்டால் (ஆண், பெண் இருவருக்கும்), கருவிற்கு குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே இம்மருந்து எடுத்துக் கொள்ளும் போது கர்ப்பத்தடை அவசியம்.
  8. மிகச் சிலருக்கு பிற்காலத்தில் புற்று நோய் வர வாய்ப்பு சிறிது அதிகம். ஆனால் தற்போது உபயோகிக்கும் குறைந்த அளவு மருந்திற்கு அவ்வாறு வர வாய்ப்பு இல்லை என்றே சொல்லலாம்.

இவ்வளவு பக்க விளைவுகள் மருந்தை எதற்காக எனக்கு தர வேண்டும்? என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் இந்த மருந்தை எடுத்துக் கொள்ளாவிட்டால் உங்கள் நோயினால் சிறுநீரகங்கள் முழுவதும் செயலிழந்து அடுத்து சிறுநீரக மாற்று சிகிச்சையோ அல்லது ஆயுட்காலம் முழுக்க டயாலிசிஸ் சிகிச்சை தான் மாற்று எனும்போது இந்த பக்க விளைவுகள் பெரிதல்ல என்று அறியலாம். மேலும் எல்லோருக்கும் இந்த பக்க விளைவுகள் வருவதில்லை. சிலருக்கு மட்டுமே வர வாயப்பு உண்டு. எனவே இந்த மருந்தை முறையாக அனுபவம் மிக்க சிறுநீராக மருத்துவரின் கண்காணிப்பில் எடுத்துக் கொள்ளும் போது பக்க விளைவுகள் வரும் வாய்ப்பும் குறைவு. வந்தாலும் ஆரம்பத்திலே கண்டுபிடிக்கப்பட்டு எளிதில் சரி செய்து கொள்ளலாம். எனவே இந்த உயிர் காக்கும் மருந்தை எடுத்துக் கொள்வது முக்கியம் என்பதை நீங்கள் உணர வேண்டும்.

ஆதாரம் : பத்மா கிட்னி சென்டர், ஈரோடு

3.04705882353
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top