பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / மன நலம் / குழந்தைகளுக்கும் கூட மனச்சோர்வு வரலாம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

குழந்தைகளுக்கும் கூட மனச்சோர்வு வரலாம்

குழந்தைகளை தாக்கும் மனச்சோர்வு பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

உடல் சோர்வு அடைவது எல்லோருக்கும் தெரிந்தது. மனமும் சோர்வு அடையலாம்! களைத்துப் போகலாம்! தளரலாம்! Mental Depression என்ற நோயை மனச்சோர்வு என்கிறோம். ஆம்! மனச் சோர்வு என்பது மன நலத்தைப் பாதிக்கும் ஒரு நோய்!

உலக மக்கள் தொகையில் 5% மனச்சோர்வு நோயாளிகள் உள்ளனராம். இந்தியாவின் ஜனத்தொகையில் 30% மனச்சோர்வு நோயாளிகள் உள்ளனர். தைரியமாக இருந்தால், நோயாளி முயற்சி செய்தால் மனச்சோர்வு வராது என்பதெல்லாம் தவறான கருத்து. உடலில் ஏற்படும் பல நோய்களைப் போல மனநலப் பாதிப்புகளும் நோய்கள்தான். இதற்கு மருத்துவமும் மன நல ஆலோசனைகளும் தேவை. மொத்த மனச்சோர்வு நோயாளிகளில் 2% குழந்தைகளும் 4-8% வளர் இளம் பருவத்தினரும் கடுமையான மனச்சோர்வால் (Severe Depression) பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது நம்மை அச்சமூட்டுவதாக உள்ளது. சுமார் 20% இளைஞர்களுக்கு மனச்சோர்வு உள்ளதாம்.

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 7-ம் தேதி உலக சுகாதார நாள் ஒரு மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு அனுசரிக்கப்படுகிறது. 2017 ஆம் வருடத்தின் கருத்து: “Depression : Let us talk’’ “மனச்சோர்வு - நாம் பேசுவோம்’’ என்பதாகும்.

மனச்சோர்வு என்றால் என்ன?

எப்போதும் வருத்தம், சாதாரணமாக ஒருவரை மகிழ்விக்கும் செயல்களில் ஆர்வமின்மை, தினசரி செயல்பாடுகளில் ஈடுபாடு குறைதல், அல்லது செய்யப் பிடிக்காமல் இருத்தல் போன்றவை 2-வாரங்களுக்கு மேல் தொடர்ந்து நீடித்தால் அது ‘மனச் சோர்வு’ என்று குறிக்கப்படுகிறது. தினமும், எப்போதும் ஒரு எரிச்சலான மனநிலையும் இத்துடன் கை கோர்க்கும்.

மனச்சோர்வின் மற்ற அறிகுறிகள்

1. தூக்கமின்மை அல்லது அதிக தூக்கம்.

2. பசியின்மை அல்லது அதிகப் பசி.

3. ஞாபக மறதி.

4. கவனச்சிதறல்.

5. சுய மதிப்பை இழந்து எதற்கும் உதவாதவன் என்ற எண்ணம்.

6. குற்ற உணர்வு.

7. படபடப்பு.

8. களைப்பு - உடல் எல்லா சக்தியையும் இழந்தது போன்ற உணர்வு.

9. யோசித்து செயல்பட முடியாத நிலை.

10. சரிவர முடிவுகள் எடுக்க முடியாத நிலை.

11. எடை குறைவது அல்லது அதிகரிப்பது.

12. எந்த வேலையையும் செய்ய தோன்றாத நிலை.

13. நண்பர்களைக் கூட சந்திக்க, பேசப் பிடிக்காத நிலை.

14. தற்கொலை எண்ணம்.

இந்தப் பட்டியலில் 5 அல்லது அதற்கு மேல் அறிகுறிகள் இருந்தால் மனச் சோர்வு நோய் என்று முடிவு செய்யலாம்.

தலைவலி, நெஞ்சுவலி, வயிற்றுவலி, உடல்வலி, கைகளில் நடுக்கம் போன்ற உடல் சார்ந்த அறிகுறிகளும் சேர்ந்து இருக்கலாம்.

மனச்சோர்வு நோய் ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் ஏற்படலாம். பிறந்த குழந்தை வீரிட்டு அழும்! தாய் வாரி எடுத்து அணைத்து முகம் பார்த்து பேசினால் அழுகை நின்றுவிடும். குழந்தை அன்புக்கும் அரவணைப்புக்கும் ஏங்குகிறது என்பதையும் கிடைக்காவிட்டால் பதட்டத்தில் அழுகிறது என்பதையும் இது உணர்த்துகிறது.

தாயின் அரவணைப்பு கிடைக்காத சிறு குழந்தை,

1. மந்தமாக இருக்கும்

2. எடை அதிகரிக்காது

3. வளர்ச்சிப் பருவங்கள் தாமதமாகும்

4. Stimulus-Response குறையும்.

மனச்சோர்வு நோயின் அறிகுறிகள் சில உடல் நோய்களிலும் காணப்படும்.

1. அதிக இரத்தசோகை

2. ஊட்டச்சத்துக் குறைபாடு

3. தைராய்டு குறைபாடு நோய்

4. மூளை சார்ந்த நோய்(உ-ம்)மூளையில் கட்டி

5. சிறுநீரக நோய்கள்

சில மருந்துகளால் கூட இந்நோயின் அறிகுறிகள் தோன்றலாம்.

1. இதய நோய்க்கான மருந்துகள்.

2. புற்று நோய்க்கான மருந்துகள்

3. ஸ்டீராய்டு சார்ந்த மருந்துகள்.

4. போதை மருந்துகள்.

மனச்சோர்வின் 3 வகைகள்

1)   மிதமானது (mild) குறைந்த அறிகுறிகள் - நடைமுறை வாழ்க்கையில் சிக்கல் குறைவு.

2)   நடுத்தரமானது (moderate) இரண்டுக்கும் இடைப்பட்டது.

3)   கடுமையானது (severe) நிறைய அறிகுறிகள் - தினசரி வாழ்வில் கடுமையான சிக்கல்கள்.

கடுமையான மனச்சோர்வில் தற்கொலை எண்ணம் அதிகம் வரும். தற்கொலை செய்து கொள்ளும் ஆபத்தும் உள்ளது. உலகளவில் 15-29 வயதினரிடையே தற்கொலை தான் இறப்பிற்கான இரண்டாவது காரணமாக உள்ளது.

குழந்தைகளுக்கு மனச்சோர்வு ஏன் ஏற்படுகிறது?

1.மரபியல் (Genetics) காரணங்கள்.

2.சுற்றுச்சூழல் காரணங்கள்.

மரபியல் காரணங்கள்

பெற்றோர்களுக்கு அல்லது குடும்பத்தில் யாருக்காவது மனச்சோர்வு நோய் இருந்தால் குழந்தைக்கு ஏற்படலாம்.

சுற்றுச்சூழல் காரணங்கள்

குழந்தைகளிடையே மனச்சோர்வு ஏற்பட இவை முக்கிய காரணமாக அமைகிறது.

1. பெற்றோர்களின் கவனிப்பு இல்லாதது.

2. பெற்றோர்களின் / குடும்பத்தினரின் சண்டைகளுக்கு இடையே வளரும் குழந்தை.

3. பெற்றோர்களை இழந்த குழந்தைகள்.

4. மனதிற்கு நெருக்கமானவர்களை இழத்தல்.

5. ஏழ்மை

6. சமூகத்தில் ஒதுக்கிவிடப்படுதல்

7. ஆதரவு அற்ற நிலை

8. ஆதரவற்றோர் இல்லங்களில் வாழும் குழந்தைகள்

9. காதல் தோல்வி-பிரிவு.

இந்நோயை எப்படிக் கண்டறியலாம்?

1) பெற்றோர் – குடும்பத்தினர் - ஆசிரியர்கள் குழந்தைகளின் அன்றாட செயல்களை உற்று கவனித்தால் மாறுதல் புரியும்.

2) பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு தனித்தனியாகவும், இருவருக்கும் சேர்த்தும் நோய் கண்டறிய அளவீடுகள் (Assessment scales) இருக்கின்றன. குழந்தையின் நடவடிக்கையில் மாறுதல் தெரிந்தால் இந்த அளவீடுகளைப் பயன்படுத்தலாம். அருகில் உள்ள மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெறலாம்!

மனச்சோர்வின் பின் விளைவுகள்

1. கடுமையான மனச்சோர்வு நோய் இளைஞர்களை தற்கொலைக்கு ஆளாக்கி விடுகிறது.

2. போதை மருந்து, மது போன்ற பழக்கங்கள் ஏற்படும்.

3. கல்வியில் மந்த நிலை.

4. குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பழகுதல் குறைகிறது.

5. பிரச்சனைகளை கையாளும் திறன் குறைகிறது.

6. உடல் நோய்களைத் தாங்கும் குணமும் குறைகிறது.

மனச்சோர்வுக்குச் சிகிச்சைகைள்

1. நோயைச் சரியாக புரிந்து கொண்டு வகைப்படுத்துதல் (correct diagnosis and grading)

2. மருத்துவரின் ஆலோசனைப்படி மாத்திரைகள் உட்கொள்ளுதல்.

3. மற்ற சிகிச்சை முறைகள்:

 • பெற்றோர்களுக்கும் குடும்பத்தினருக்கும் மனநலம் சார்ந்த விழிப்புணர்வு.
 • பெற்றோர்களுக்கான வழிக்காட்டுதல்.
 • சுற்றுச்சூழலை குழந்தையின் நோயின் தன்மைக்கு ஏற்றவாறு மாற்றுதல்.
 • ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டுதல்.
 • பாதிக்கப்பட்ட குழந்தைக்கு கல்வி முறையை எளிதாக்குதல்.
 • தினசரி வாழ்க்கையில் மாறுதல்கள். உதாரணமாக, குறிப்பிட்ட நேரம் சாப்பிடுவது, தூங்குவது, குளிப்பது போன்றவற்றை செய்ய முயற்சித்தல்.
 • மனதிற்கு நெருங்கியவர்களிடம் மனம் விட்டு பேசுதல்.
 • தேவையான உடற்பயிற்சி.
 • மனதிற்கு பிடித்த விளையாட்டு, நுண்கலைகளில் ஈடுபடுதல்.
 • தியானம்.
 • பாதிக்கப்பட்ட குழந்தையின் சுய மதிப்பீட்டீனை அதிகப்படுத்தும் வழிமுறைகள் (உ-ம்) ஏற்றுக்கொள்ளுதல், பாராட்டுதல்.

என்ன செய்யலாம்?

Let us talk! மனச்சோர்வு உள்ள குழந்தைகளிடம் பெற்றோர்கள், நண்பர்கள் அதிகம் பேச வேண்டும்! அவர்கள் பிரச்சனைகளைப் பற்றி அல்ல! அவர்களை ஆற்றுப்படுத்தி, பாராட்டி, சுய மதிப்பைக் கூட்டும் வகையில் பேசி அவர்களை நோயிலிருந்து மீள வழி வகுக்க வேண்டும்.

நோயுற்றவர்களைப் பேச வைக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் மன உணர்வுகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்ப மாட்டார்கள்.

மனச்சோர்வு உடையவர்கள் அவர்களுக்கு நம்பிக்கையானவர்களுடன் மனம் விட்டுப் பேசுவதே நோயிலிருந்து வெளிவர முதல் வெற்றிப்படி.

ஆதாரம் : Dr.N.கங்கா. M.D., D.C.H.,DNB,PGDAP, குழந்தைகள் மருத்துவ நிபுணர், கும்பகோணம்

2.68965517241
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top