பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

போபால் விபத்து - நடந்ததும் நடப்பதும்!

போபால் விபத்தைப் பற்றிய மேலோட்டமான தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

முப்பது ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால், இன்றுவரை மீதைல் ஐசோ சயனேட் வாயுவால் 1984 டிசம்பர் 2ஆம் தேதி இரவில் தாக்கப்பட்ட போபால் நகரம் அந்தத் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகளுடன் மட்டுமல்லாமல் அதற்குச் சரியான மாற்று மருத்துவம் என்ன என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த இடைவெளியில், டஜன் கணக்கில் மருத்துவர்களும், மருந்து ஆராய்ச்சியாளர்களும், போபாலுக்கு வந்து போய்விட்டார்கள். பாதிக்கப்பட்டவர்களைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டனர். பல மருத்துவ மாநாடுகளும், கருத்தரங்கங்களும் நடைபெற்றுவிட்டன.

பல மருத்துவர்கள் போபாலிலிருந்து மாதிரிகளைப் பரிசோதனைக்குத் தத்தம் நாடுகளுக்கு எடுத்துச் சென்றார்கள். பரிசோதனை நடத்தி மாற்று மருந்து கண்டுபிடிக்கிறோம் என்று தொடர்ந்து ஆய்வுகள் செய்கிறார்கள்.

விபத்து நடந்து இரண்டு நாள்களுக்குப் பிறகுதான் சற்று தெளிவே பிறந்தது. அதற்குள் போபால் நகரமே பிணவாடையால் திணறத் தொடங்கிவிட்டிருந்தது. மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. மருத்துவர்களோ என்ன செய்வது என்றே தெரியாமல் தவித்தனர்.

ஆயிரக்கணக்கான நோயாளிகளை எதிர்கொள்ளும் அளவுக்கு மருத்துவப் பணியாளர்களோ, மருத்துவ வசதிகளோ போபாலில் அப்போது இல்லை. முறையான பட்டம் பெறாத பயிற்சி மருத்துவர்கள்தான் 70% மருத்துவர்கள். ஆங்காங்கே தாற்காலிக மருத்துவக் கூடங்கள் அமைக்கப்பட்டன. விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 32 சிறப்பு வார்டுகளும் நிறுவப்பட்டன.

விஷவாயுவால் பாதிக்கப்பட்ட பகுதியில் வாழ்ந்தவர்கள் ஏறத்தாழ 7 லட்சம் பேர். 2006-இல் அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதிவின்படி, பாதிக்கப்பட்டவர்கள் 5,58,125. தாற்காலிக பாதிப்புக்கு உள்ளானவர்கள் 34,478. நிரந்தர ஊனம், கடுமையான பாதிப்புக்கு உள்ளானவர்கள் 3,900. இன்றுவரை, எத்தனை பேர் இறந்தனர், எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பதற்கான முறையான, முழுமையான புள்ளிவிவரம் தெரியவில்லை.

மனிதர்கள் மட்டுமல்ல, மிருகங்களும்கூட விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டன. ஏறத்தாழ 2,000 மாடுகள், எருதுகள், ஆடுகள் தொடங்கி இன்னபிற பிராணிகளின் சடலங்கள் தேடி எடுக்கப்பட்டு எரியூட்டப்பட்டன. அப்படி எரியூட்டப்பட்டு, எழுந்த புகையை சுவாசித்து அதனால் பாதிப்புக்கு உள்ளான ராணுவத்தினரும், காவல் துறையினரும், தன்னார்வத் தொண்டர்களும் பலர் என்றால் விஷவாயுவின் தாக்கம் எப்படிப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு உயிர் வாழ்பவர்கள் அனைவருமே கண் பார்வை மங்கியும், நுரையீரல் பழுதடைந்தும்தான் காணப்படுகிறார்கள். பலர் பார்வையை முற்றிலுமாக இழந்து விட்டிருக்கிறார்கள். போதாக்குறைக்கு மூட்டு வலியும், அடிக்கடி ஏற்படும் நெஞ்சு வலியும் அவர்களை வாழவும் விடாமல் மரிக்கவும் விடாமல் துன்புறுத்துகின்றன.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மட்டுமல்ல, அவர்களது பெண் குழந்தைகளுக்கும் சரி, குறைப்பிரசவ விகிதம் 300%-மாகவும், சிசு மரணம் 200%-மாகவும் அதிகரித்திருக்கிறது.

அதுமட்டுமல்ல, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளில் பெரும்பான்மையானவர்கள் உடல் ஊனமுற்றவர்களாகவும், மூளை வளர்ச்சி குறைந்தவர்களாகவும், கண் பார்வை அற்றவர்களாகவும், பிறவியிலேயே காசநோய், மூச்சிரைப்பு போன்ற நுரையீரல் தொடர்பான நோயுடனும் பிறக்கின்றன என்பதுதான் எல்லாவற்றையும்விடப் பெரிய சோகம். ஏறத்தாழ 1,20,000 முதல் 1,50,000 வரையிலானவர்கள், விஷவாயுக் கசிவின் பாதிப்புகளுடன் இன்றும் போராடிக் கொண்டிருக்கின்றனர் என்கிறது ஓர் அறிக்கை.

ஒவ்வொருவரும், போபால் யூனியன் கார்பைட் பூச்சிமருந்துத் தொழிற்சாலை அருகில் வசிப்பதாக நினைத்துப் பாருங்கள். அப்போது தெரியும் வலியும், வேதனையும், விபரீதமும்!

ஆதாரம் : ஆசிரியர் கே.வைத்தியநாதன் (தினமணி)

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top