இறைமையுடைய மக்களாட்சி முறை கொண்ட நாட்டின் அரசியல் சட்டம் மக்கள் பிரதிநிதிகளை அடங்கிய அரசியல் நிர்ணய சபையால் இயற்றப்படுகிறது.
இந்திய அரசியலமைப்பு, அரசியலமைப்பு பேரவையால் (1946-49) உருவாக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பு பேரவையின் (Constituent Assembly)தலைவராக டாக்டர் இராஜேந்திர பிரசாத் அவர்கள் செயல்பட்டார். டாக்டர் B.R.அம்பேத்கார் அவர்கள் வரைவுக்குழுவின் (Drafting Committee) தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார். இந்திய அரசியலமைப்பு, அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்களின் கூட்டுப்படைப்பாகும்.
இந்திய அரசியலமைப்பு முகப்புரையிலிருந்து துவங்குகிறது. அரசியலமைப்பின் நோக்கங்களை முகப்புரை சுருங்கக் கூறி விளங்க வைக்கின்றது. அரசியலமைப்பின் குறிக்கோள்கள் யாவும் முகப்புரையுள் அடங்கியுள்ளன என்று கூறலாம். அரசியலமைப்பின் வகையங்களை (Provisions) விளங்க வைப்பதற்கு இது துணையாக இருக்கிறது. முகப்புரை அரசியலமைப்பின் ஒரு பகுதியாகாது. எனவே இது நீதிமன்றங்களின் நீதிப் புனராய்வுக்கு அப்பாற்பட்டது.
1976ஆம் ஆண்டைய 42 வது அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்குப் பிறகு கீழே குறிப்பிட்டுள்ளபடி இருக்கிறது.
இந்திய மக்களாகிய நாம் இந்திய நாட்டின் இறைமை சமச்சமுதாயம், சமயசார்பின்மை மற்றும் மக்களாட்சி முறை கொண்ட ஒரு குடியரசாக நிறுவ பவித்தரமான முடிவெடுத்து,
அதன் குடிமக்கள் அனைவருக்கும்
உள்ளார்ந்த உறுதியுடையவராய், நம்முடைய அரசியலமைப்புப் பேரவையில் 1949 நவம்பர் இருபத்தாறாம் நாளாகிய இன்று ஈங்கிதனால் இந்த அரசியலமைப்பினை ஏற்று, இயற்றி, நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்.
சமதர்ம, சமயச்சார்பின்மை, ஒருமைப்பாடு ஆகியன முகப்புரையில் 1976 ஆம் ஆண்டு 42-வது அரசியல் சட்டத்திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டன.
எழுதப்பட்ட அரசியலமைப்பு என்பது பொதுவாக எழுதப்பட்ட நிலையில் விதிமுறைகளடங்கிய நூல் வடிவில் கிடைக்கக்கூடிய அரசியலமைப்பைக் குறிக்கும். இந்திய அரசியலமைப்பு எழுதப்பட்ட ஒன்று. இந்திய அரசியலமைப்பு 1950, ஜனவரி 26ல் நடைமுறைக்கு வந்தது. இது மிக விரிவாக எழுதப்பட்ட ஆவணமாகும். பிரிட்டன், அயர்லாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் அரசியலமைப்புகளே இந்திய அரசியலமைப்புக்கு மூலதாரமாக இருந்தன. இந்தியாவின் தேவையையும், சூழ்நிலையையும் மனதில் கொண்டு, அரசியலமைப்பை வகுத்தவர்கள் மற்ற நாடுகளின் அரசியலமைப்புகளின் கருத்துக்களையும் எடுத்துக் கொண்டனர்.
பேராசிரியர் டைசியின் (Dicey) கூற்றுப்படி நெகிழா அரசியலமைப்பின் விதிமுறைகளைச் சாதாரணச் சட்டங்களைத் திருத்தும் வழிமுறையைப் பயன்படுத்தித் திருத்தமுடியாது.
அரசியலமைப்பு சட்டம் என்பது அரசியலமைப்பில் அடங்கியுள்ள வகையங்களைக் குறிக்கும். சட்டமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் சாதாரண சட்டங்கள் எனப்படும். அரசியலைப்புச் சட்டம் சாதாரண சட்டத்தினின்றும் வேறுபட்டது. இந்திய அரசியலமைப்பின் விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வருவதற்குச் சில சிறப்பு வழிவகைகள் வரையறுக்கப்படுகின்றன.
இந்திய அரசியலமைப்பின் சில வகையங்கள் எளிய முறையில் திருத்தப்படலாம் என்றும், சில வகையங்கள் அவ்வளவு எளிதாக திருத்தம் செய்யப்பட இயலாது என்றும் அறியலாம். ஆகவே நம்முடைய அரசியலமைப்பு நெகிழும் இயல்பும், நெகிழா இயல்பும் கொண்டுள்ளது என்று நாம் அறிகிறோம்.
கூட்டாட்சி முறை என்பது, மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கங்கள் என இருவகையான அரசாங்கங்களைப் பெற்று அவற்றின் அதிகார வரம்புகள் வரையறுக்கப்பட்டு செயல்படக்கூடிய முறையாகும்.
நமது அரசியலமைப்பு பின்வரும் கூட்டாட்சி இயல்புகளைக் கொண்டுள்ளது.
நமது அரசியலமைப்பு மதசார்பற்ற அரசை நிறுவியுள்ளது. மதம் அரசு தலையீட்டிலிருந்து விடுபட்டது. அரசு எந்த குறிப்பிட்ட மதத்தையும் சாராதது. குடிமக்கள் அனைவருக்கும் சுதந்திரமான தெய்வ நம்பிக்கை, கடவுள் வழிபாடு மற்றும் அவரவர் மனசாட்சியை பின்பற்ற முழுசுதந்திரம் அளிக்கப்படுகிறது. மதசார்பற்ற தன்மைக்கு அடிப்படையானது ஒழுக்க நெறியாகும். அது சமுதாயத்தில் சமத்துவத்தையும் நீதியையும் நிலைநாட்டும்.
இந்திய அரசியலமைப்பு, ஒரு நாடாளுமன்றம் சார்ந்த அரசாங்க முறையை வழங்குகிறது. அது நாடாளுமன்றத்திற்கு பொறுப்புடைய அரசாங்கம் என்றும், “காபினெட்’ அரசாங்கம் என்றும் அழைக்கப்படுகிறது.
நாடாளுமன்ற அரசாங்கமுறையில் செயலாட்சிக்குழு சட்டமன்றத்துக்கு பொறுப்புடையதாகும். இந்திய செயலாட்சிக்குழு இரு பிரிவுகளைக் கொண்டது. ஒன்று பெயரளவிலானது. மற்றொன்று உண்மைத்தன்மை வாய்ந்தது. இந்தியாவில் பெயரளவு செயலாட்சித் தலைவர் இந்திய குடியரசுத் தலைவராவார். அவர் வாக்காளர் குழாம் (Electoral College) மூலமாக ஐந்தாண்டுகளுக்குப் பதவி வகிப்பதற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். உண்மையான செயலாட்சிக்குழு என்பது அமைச்சரையும் மற்றும் அவரது ஏனைய அமைச்சர்களையும் கொண்டதாகும். நாடாளுமன்ற அரசாங்க முறையில் அமைச்சரவை உறுப்பினர்கள் தனிப்பொறுப்பும், கூட்டுப்பொறுப்பும் உடையவர்கள்.
இந்திய அரசியலமைப்பு இரு அவை கொண்ட நாடாளுமன்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒன்று மக்கள் அவை மற்றொன்று மாநிலங்கள் அவை. மக்கள் அவை உறுப்பினர்கள், வயது வந்தோர் வாக்குரிமை என்ற அடிப்படையில் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மாநிலங்கள் அவை மாநிலச் சட்டமன்றங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டது.
இந்திய அரசியலமைப்பின் மூன்றாம்பகுதியில் அடிப்படை உரிமைகள் இடம் பெற்றுள்ளன. (அங்கங்கள் 12 முதல் 35 வரை) இவை தனி மனித முழு வளர்ச்சிக்கு சூழ்நிலைகளை வகுத்துக் கொடுப்பதோடு உண்மையான மக்களாட்சியை அனுபவிப்பதற்கும் உதவி புரிகின்றன. இந்த உரிமைகள் சட்டத்தின் முன் எல்லா குடிமக்களுக்கும் சமத்துவத்தை வழங்குகின்றன. அடிப்படை உரிமைகள் தனிமனித நலனுக்கும், பொது நலனுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்துகின்றன.
இந்திய அரசியலமைப்பு தொடக்கத்தில் ஏழு அடிப்படை உரிமைகளைக் கொண்டிருந்தது. 1978-ல் 44-வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின்படி, சொத்துரிமையானது அடிப்படை உரிமையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதால், தற்போது ஆறு அடிப்படை உரிமைகள் தான் உள்ளன. அவை பின்வருமாறு:
இந்திய அரசியலமைப்பின் நான்காம் பகுதியில் அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் இடம்பெற்றிருக்கின்றன. (அங்கங்கள் 36 முதல் 51 வரை) நாட்டை ஆட்சி செய்வதற்கு இவை அடித்தளமாக இருக்கின்றன. அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் அரசுக்கு வழிகாட்டியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சட்டங்கள் இயற்றப்படும் போதும், அடிப்படைகளாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. நமது நாட்டில் பொதுநல அரசு அமைப்பதற்கும் இவைகளே வழிகாட்டின.
அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகளை கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம்.
அ. குடிமக்களாகிய ஆண்களும், பெண்களும் சரிநிகரான வாழ்க்கைக்கு போதுமான வழிமுறைகளுக்கு உரிமை உடையவராதல்.
ஆ ஒரே மாதிரியான வேலைக்கு ஒரேமாதிரியான ஊதியம்
இந்திய அரசியலமைப்பில் அடிப்படை கடமைகள் 1976 ல் 42 வது சட்டத்திருத்தம் மூலம் பகுதி IV-A ல் (அங்கம் 51A) சேர்க்கப்பட்டன. பின்வருவன இந்தியாவின் குடிமக்கள் ஒவ்வொருவரின் கடமைகள் ஆகும்.
அ. அரசியலமைப்பிற்குக் கீழ்ப்படிந்து அதன் குறிக்கோள்கள், அமைப்புகள், நாட்டுக்கொடி, நாட்டுப்பண் இவற்றை மதித்து நடத்தல். ஆ. நமது நாட்டு விடுதலைப் போரட்டத்திற்கு உணர்வூட்டிய உயர்குறிக்கோள்களைப் பேணிப் பின்பற்றுதல்.
இ. இந்திய நாட்டின் இறைமை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை பேணிப்பாதுகாத்தல்.
ஈ. வேண்டுங்கால் நாட்டினைக்காத்தல், மற்றும் நாட்டுப் பணி ஆற்றுதல்.
உ. சமயம், மொழி மற்றும் வட்டாரம் அல்லது வகுப்பு வேறுபாடுகளைக் கடந்து, இந்திய மக்கள் அனைவரிடையேயும் நல்லிணக்கத்தையும், பொது உடன் பிறப்புணர்வையும் பேணி வளர்த்தல், மகளிர் தம் மாண்பிற்கு இழுக்காகும் பழக்கங்களை விட்டொழித்தல். ஊ. நமது கூட்டு பண்பாட்டின் வளமார்ந்த மரபுச் செல்வத்தை மதித்துப் பாதுகாத்தல்.
எ. காடுகள், ஏரிகள், ஆறுகள், வனவிலங்குகள் இவை உள்ளிட்ட இயற்கைச் சூழலை அழியாது காத்து வளர்த்தல். உயிரினங்கள் பால் இரக்கங்காட்டுதல்.
ஏ. அறிவியலார்ந்த உளப்பாங்கு, மனிதநேயம், ஆய்ந்து தெளிந்து சீர்த்திருத்தும் ஆர்வம் ஆகியவற்றை வளர்த்தல்.
ஐ. பொதுச் சொத்தைப் பாதுகாத்து, வன்முறையை விலக்குதல். தனிமனிதனுடைய செயல், கூட்டுறவு செயல் ஆகியவற்றை சிறப்பான முறையில் முடிக்கும் வகையில் செயலாற்றுதல் முதலியன தேவை. இதனால் நாடு எப்பொழுதும் ஆற்றலிலும் சாதனைகளிலும் மேம்பாட்டை தொடர்ந்து அடைய முடியும்.
நமது அரசியலமைப்பு சுதந்திரமான நீதித்துறையை வழங்குகிறது. இந்திய உச்சநீதிமன்றமும், உயர் நீதி மன்றங்களும் சட்டங்களை நீதிப்புனராய்வு செய்யும் அதிகாரம் பெற்றுள்ளன. ஒரு சட்டம் அரசியலமைப்புக்கு உட்பட்டது அல்லது புறம்பானது என்று தீர்ப்பு வழங்கத்தக்க அதிகாரத்திற்கே நீதிப்புனராய்வு என்று பெயர்.
அரசியலமைப்பின் காவலனாக நீதித்துறை விளங்குகிறது. இந்திய குடிமக்களின் உரிமைகளையும், சுதந்திரங்களையும், நீதித்துறை இதன் மூலம் பாதுகாக்கிறது.
இந்திய அரசியலமைப்பு வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை வழங்க உறுதியளிக்கிறது. பதினெட்டு வயது நிரம்பிய ஒவ்வொரு குடிமகனும் சாதி, மதம், நிறம், பாலினப்பாகுபாடு இன்றி தேர்தலில் பங்குபெற உரிமை பெற்றுள்ளார்.
மத்திய அரசாங்கத்தின் அமைப்பு முறை
இந்தியக் குடியரசுத் தலைவர் இந்தியாவின் முதல் குடிமகன் ஆவார். இந்தியக் குடியரசுத்தலைவர் அரசின் தலைவராவார். திரு. பிரணாப் முகர்ஜி அவர்கள் தற்போதைய இந்தியக் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்து வருகிறார்.
தகுதிகள் :
இந்தியக் குடியரசுத் தலைவர் விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில், ஒற்றை மாற்று வாக்கின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் இரகசிய வாக்களிப்பு முறை கையாளப்படுகிறது.
இந்தியக் குடியரசுத் தலைவர் ஐந்தாண்டுக் காலத்திற்குப் பதவி வகிப்பார். மீண்டும் அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் பெறுவதற்குத் தகுதியுடையவர் ஆவார். பதவிநீக்கம்
அரசியலமைப்பை மீறிய நடத்தைக்காகக் குடியரசுத் தலைவர் மீது பழிகூறப்பட்டு அவரை பதிவியிலிருந்து நீக்கலாம். அதற்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதாவதொரு அவையால் கொண்டுவரப்படும் குற்றச்சாட்டுகள் மற்ற அவையால் விசாரணை செய்யப்படும். ஒரு அவை குடியரசுத் தலைவரை குற்ற விசாரணை (Impeachment) செய்யவேண்டும் என்று தீர்மானம் கொண்டு வர விரும்பினால் பதினான்கு நாட்களாவது முன்னறிவிப்புக் கொடுக்கப்பட்ட பின்னரே அத்தீர்மானத்தைத் தாக்கல் செய்யமுடியும். இம்முன்னறிவிப்பில் அவையின் மொத்த உறுப்பினருள் நான்கில் ஒருபகுதியினராவது கையொப்பமிட்டிருக்க வேண்டும். அவையின் தீர்மானம் மொத்த உறுப்பினருள் குறைந்த அளவு மூன்றில் இரண்டு பகுதியினரது ஒப்புதல் பெறவேண்டும். நாடாளுமன்ற இரு அவைகளில், ஒன்றினால் கொணரப்படும் குற்றச்சாட்டை மறு அவை ஆய்வு செய்தல் வேண்டும். அவ் அவையின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கு குறையாத பெரும்பான்மையினரால் நிறைவேற்றப்பட வேண்டும். அத்தீர்மானம் நிறைவேற்றப்படும் தேதியிலிருந்து குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார்.
நிருவாக அதிகாரங்கள்
அரசியலமைப்பின்படி குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை அவர் நேரிடையாகவோ அல்லது தனக்குக் கீழ்ப்பட்ட அதிகாரிகள் மூலமாகவோ செயல்படுத்துவார். மத்திய அரசின் நிர்வாக அதிகாரம் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரது பணியில் அவருக்கு துணைபுரியவும், ஆலோசனை கூறவும் அமைச்சரவை உண்டு. மத்திய அரசாங்கத்தின் அனைத்து நிருவாக அதிகாரங்களும் அவர் பெயரிலேயே செயல்படுத்தப்படுகின்றன.
பிரதமர், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். பிரதமரின் ஆலோசனையின் பேரில் மத்திய அரசின் மற்ற அமைச்சர்களையும் குடியரசுத் தலைவர் நியமிக்கின்றார். குடியரசுத் தலைவர் இந்தியத்தலைமை வழக்கறிஞர், இந்திய கணக்காய்வர்-தலைமைத் தணிக்கையர், இந்தியாவின் தூதுவர்கள், பிரதிநிதிகள், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, மற்ற நீதிபதிகள் உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள், பிற நீதிபதிகள், மாநில ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், மத்திய அரசுப்பணி ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், தலைமை தேர்தல் ஆணையர்கள் ஆகியோர்களை நியமிக்கின்றார். குடியரசுத்தலைவர் பாதுகாப்புப் படையின் தலைமைத் தளபதியாக விளங்குவார். தரைப்படை, கடற்படை, விமானப்படை ஆகிய முப்படையின் தலைவர்களையும் குடியரசுத் தலைவர் நியமிக்கின்றார்.
பிரதமரின் பரிந்துரையின் பேரில் அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்வதற்குக் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. உச்சநீதிமன்றத்தின் அறிக்கைக்கிணங்க, மத்திய தேர்வாணைக்குழுவின் தலைவரையோ, அங்கத்தினரையோ பதவியிலிருந்து நீக்கலாம். நாடாளுமன்ற இருசபையிலும், சிறப்பு அறுதிப் பெரும்பான்மை மூலம் முடிவெடுத்தால் அதன் அடிப்படையில், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியையோ, தேர்தல் ஆணையரையோ பதவியிலிருந்து நீக்கலாம்.
அனைத்து நிருவாக அதிகாரங்களும் முறையாக குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், அவர் அவற்றை பிரதமரைத் தலைவராகக் கொண்ட அமைச்சரவையின் ஆலோசனையின் அடிப்படையில் செயல்படுத்துவார். ஆரம்ப காலத்தில், அமைச்சரவை அறிவுரைக்குக் குடியரசுத் தலைவர் கட்டுப்பட வேண்டுமென்ற கட்டாயம் இருந்ததில்லை. ஆனால், 1976ல் கொண்டுவரப்பட்ட சட்டதிருத்தம் குடியரசுத் தலைவர் அமைச்சரவையில் ஆலோசனைக்குக் கட்டுப்பட்டவர் என்பதை வலியுறுத்துகிறது. 44வது சட்டத்திருத்தம் ஒரு மசோதாவை அமைச்சரவைக்கு மீண்டும் மறுபரிசீலனைக்குத் திருப்பி அனுப்ப குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கியது. அமைச்சரவை அதை மறுபரிசீலனை செய்து குடியரசுத் தலைவருக்கு அனுப்ப நேர்ந்தால் அவர் அதை ஏற்றுக் கொண்டு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
சட்டமன்ற அதிகாரங்கள்
குடியரசுத் தலைவர் குறைந்தது, ஆண்டிற்கு இருமுறையாவது நாடாளுமன்றத்தைக் கூட்டவேண்டும். குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின், இரு அவைகளையோ, அல்லது ஏதாவது ஒரு அவையையோ ஒத்திப்போடவா அல்லது கூட்டங்களை முடிவுக்கு கொண்டுவரவோ அதிகாரம் பெற்றிருக்கிறார். மக்கள் அவையை கலைப்பதற்கும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு.
குடியரசுத் தலைவர் மாநிலங்கள் அவைக்குப் பன்னிரண்டு (12) உறுப்பினர்களை நியமனம் செய்வார். இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளிலிருந்து இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படுவார்கள். ஆங்கிலோ - இந்திய சமூகத்தினருக்குப் போதுமான பிரதிநிதித்துவம் மக்களவையில் கிடைக்கப்பெறவில்லை என்று குடியரசுத் தலைவர் கருதினால், அச்சமூகத்திலிருந்து இரண்டு அங்கத்தினர்களை மக்கள் அவைக்கு நியமனம் செய்வார்.
குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்துவார். அவர் இரண்டு அவைகளையும் ஒன்றாகக் கூட்டியோ அல்லது தனியாக ஒரு அவையிலோ உரை நிகழ்த்துவார். இரு அவைகளிடையே கருத்து வேறுபாடு தோன்றுமாயின் இரு அவைகளையும் ஒன்றாகக் கூட்டி சர்ச்சையைத் தீர்த்து வைக்க முயல்வார். குடியரசுத் தலைவரின் அங்கீகாரமும், கையொப்பமும் இல்லாமல் எந்த மசோதாவும் சட்டமாகாது.
நாடாளுமன்றம் கூடாத காலங்களில் அவசரச் சட்டம் (Ordinance) பிறப்பிக்கக் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு.
நிதித்தொடர்பான அதிகாரங்கள் (Financial Powers)
குடியரசுத் தலைவரின் முன் அனுமதி இன்றி நிதி மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது. இந்திய அரசியலமைப்பு எதிர்பாராச் செலவு நிதியை குடியரசுத் தலைவர் பொறுப்பில் ஒப்படைத்துள்ளது. அவர் நாடாளுமன்ற இறுதி ஒப்புதலை எதிர்நோக்கி அவசரமாக ஏற்படும் செலவினங்களுக்கு இத்தொகுப்பிலிருந்து முன்பணம் வழங்குவார். குடியரசுத் தலைவர் நிதி ஆணையத்தை (Finance Commission) நியமிக்கும் அதிகாரத்தையும் பெற்றுள்ளார்.
நீதிதொடர்பான அதிகாரங்கள்
குற்றவாளிகளை மன்னிக்கவோ, தண்டனையை நிறுத்திவைக்கவோ, குறைக்கவோ குடியரசுத் தலைலவருக்கு அதிகாரம் உண்டு. அரசியலமைப்பு குறித்தும், சட்டங்கள் குறித்தும், சந்தேகமோ, சிக்கலோ ஏற்பட்டால் குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைக் கேட்கலாம்.
நெருக்கடி நிலை தொடர்பான அதிகாரங்கள் (Emergency Powers)
நெருக்கடி நிலை தொடர்பான அதிகாரங்கள் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவர் கீழ்காணும் நேரங்களில் நெருக்கடி நிலையை அறிவிக்கலாம்.
அ. போர் அல்லது அயல்நாட்டு ஆக்கிரமிப்பு அல்லது ஆயுதம் தாங்கியோரின் கிளர்ச்சி ஆகிய நேரங்களில் நெருக்கடி நிலையை அறிவிக்கலாம்.
ஆ. மாநிலங்களில் அரசியலமைப்பு இயங்குமுறை செயலற்றுப் போகும் நிலையில் நெருக்கடி நிலையை அறிவிக்கலாம்.
இ. நிதிநிலை நெருக்கடி ஏற்படும் போதும் நெருக்கடி நிலை அறிவிக்கலாம்
இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் தமது பதவியின் வழியாக மாநிலங்கள் அவையின் தலைவராகப் பொறுப்பேற்பார். குடியரசுத் தலைவர் பதவி, அவரது மரணத்தாலோ, பதவி விலகலாலோ, பதவியிலிருந்து நீக்கப்பட்டதாலோ காலியிடமாகுமானால் துணைக் குடியரசுத் தலைவர் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்று புதிய குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பதவி வகிப்பார். மற்றும், குடியரசுத் தலைவர் நோய் அல்லது பிற காரணத்தாலோ தம்முடைய பணியை ஆற்ற இயலாத போது துணைக் குடியரசுத் தலைவர் பொறுப்பேற்று, குடியரசுத் தலைவர் மீண்டும் கடமைகளை மேற்கொள்ளும் வரை அப்பொறுப்புகளை ஏற்பார்.
தகுதிகள்
துணைக்குடியரசுத் தலைவர் நாடாளுமன்ற இரு அவைகளில் அங்கத்தினர்களைக் கொண்ட வாக்காளர் குழாம் மூலமாக, விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் ஒற்றை மாற்று வாக்கின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். துணைக்குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்க இரகசிய வாக்களிப்புமுறை பின்பற்றப்படுகிறது.
துணைக்குடியரசுத் தலைவர் ஐந்தாண்டு காலத்திற்குப் பதவி வகிப்பார். மீண்டும் அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பெறுவதற்கு தகுதியுடையவர் ஆவார். துணைக்குடியரசுத் தலைவர் ஐந்தாண்டுக் காலத்திற்குள் தம் பதவியை விட்டு விலகிக் கொள்ளலாம். துணைக் குடியரசுத் தலைவர், மாநிலங்கள் அவையின் அனைத்து உறுப்பினர்களில் பெரும்பான்மையினரால் நிறைவேற்றப்பட்ட பதவி நீக்கம் செய்யும் தீர்மானம், மக்கள் அவையாலும் ஏற்றுக் கொள்ளபடுமேயானால் பதவியிலிருந்து அவர் அகற்றப்படுவார். ஆனால் பதினான்கு நாட்களுக்குக் குறையாமல் முன்னறிவிப்புக் கொடுத்தல் வேண்டும்.
பிரதம அமைச்சர்தான் அரசாங்கத்தின் தலைவர். அவர்தான் நிருவாகத் துறையின் தலைவருமாவார். அவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார். குடியரசுத் தலைவர் மக்கள் அவையில் பெரும்பான்மையான கட்சியின் தலைவரை அழைத்து பிரதமராக நியமித்து அமைச்சரவையை அமைக்குமாறு கேட்டுக் கொள்வார். பிரதம அமைச்சர்
பிரதம அமைச்சர் ‘அமைச்சக வளைவில் அடிப்படைக்கல்’ என்றும் “சமமானவர்களில் முதலானவர்’ என்றும் விவரிக்கப்படுகிறார். ‘அரசாங்க முழுமை அமைப்பிற்கும் பிரதம அமைச்சர் ஒர் அச்சாணி’ என்று பேராசிரியர் ஹெரால்ட் லாஸ்கி குறிப்பிடுகிறார். “பிரதமர் ஒரு ஞாயிறு போன்றவர் என்றும் அஞ்ஞாயிறை மற்ற கிரகங்கள் எங்ங்ணம் சுற்றி வருகின்றனவோ அங்ங்ணமே ஏனைய அமைச்சர்கள் அனைவரும் பிரதமரைச் சுற்றி சுழல்கின்றனர்” என்று சர் ஐவர் ஜென்னிங்ஸ் என்ற அரசியல் அறிஞர் குறிப்பிடுகிறார்.
நாடாளுமன்ற அரசாங்க முறையில் காபினெட் என்பது நாடாளுமன்றக் குழு என அழைக்கப்படுகிறது. காபினெட் செயலாட்சிக் குழுவையும், சட்டமன்றத்தையும் சேர்த்து வைக்கிறது. காபினெட் செயலாட்சிக் குழுவையும், சட்டமன்றத்தையும் இணைக்கும் ஒரு சங்கிலி போன்றது என்று வால்டர் பேஜாட் என்பவர் குறிப்பிடுகிறார்.
காபினெட்டின் அம்சங்கள்
பிரதம அமைச்சரது தலைமையிலான ஒரு அமைச்சரவைக்கு இந்திய அரசியலமைப்பு வகை செய்கிறது. அது குடியரசுத் தலைவருக்கு அவருடைய பணியை ஆற்றுவதில் துணை புரிந்து ஆலோசனையைக் கூறும். அமைச்சர்கள், மக்கள் அவைக்கு தனித்தனியாகவும், கூட்டாகவும் பொறுப்புடையவர்கள். சாதாரணமாக, அமைச்சர்கள் இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறார்கள்.
காபினெட் என்பது சிறிய குழுவாயினும் அது அரசாங்கத்தில் அதிகாரம் மிக்க உறுப்பாகும். மிக முக்கியமான துறைகள் காபினெட் அமைச்சர்கள் பொறுப்பில் ஒப்படைக்கப்படும். அமைச்சரவையில் ஒரு “உட்குழு’ வாகச் செயல்படுகின்றது. காபினெட் அமைச்சர்கள் காபினெட் கூட்டங்களில் கலந்து கொண்டு முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பார்கள். மாநில அமைச்சர்கள் அடுத்த நிலை வகிப்பார்கள். மாநில அமைச்சர்களில் சிலர் சில துறைகளில் தனித்துப் பொறுப்பு வகிக்கிறார்கள். பொதுவாக, அவர்கள், காபினெட் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது. இருப்பினும் அவர்கள் பொறுப்பில் இருக்கும் துறை பற்றிய விவாதம், பரிசீலனை நடைபெறும் போது கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்படுவார்கள்.
பிரதம அமைச்சரின் அலுவலகம் ஒரு தலைமை செயலாளரின் கீழ் இயங்குகிறது. இவ்வலுவலகம் பிரதம அமைச்சரருக்கு அலுவலக தொடர்புடைய பணிகள் சம்பந்தமான பணிகளை மேற்கொண்டு பிரதமருக்கு உதவியாக இருக்கின்றது. இவ்வலுவலகத்தில் ஊழல் ஒழிப்பு பிரிவு மற்றும் பொதுமக்கள் குறைகள் தீர்க்கும் பிரிவு ஆகியவையும் செயல்படுகின்றன.
பிரதம அமைச்சரின் பார்வைக்கு அனுப்பப்படும் பதிவேடுகள் எவை எவை என்பது பிரதம அமைச்சரின் நேர் பார்வையிலுள்ள அல்லது காபினெட் அமைச்சர் ஒருவரின் மேற்பார்வையிலுள்ள அல்லது அமைச்சகத்தோடு (காபினெட்) இணைக்கப்படாத தனி அமைச்சர் ஒருவரின் மேற்பார்வையிலுள்ள பொருள் பற்றியதா என்பதை பொருத்திருக்கிறது. அதாவது பிரதம அமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய பொருள்கள் பற்றிய பதிவேடுகள் யார் மேற்பார்வையின் கீழ் இருந்தாலும் அவற்றை பிரதம அமைச்சரின் பார்வைக்கு வைக்கப்படுகிறது. பெரும்பாலான அலுவல்கள் அமைச்சக அந்தஸ்து உடைய அமைச்சராலோ தனி அமைச்சராக உள்ளவராலோ பைசல் செய்யப்படுகின்றன. மிகமுக்கியமான குறிப்பாக கொள்கைகள் சம்மந்தப்பட்ட அல்லது தீர்க்கமுடியாத பிரச்சனைகள் இருப்பின் அவை மட்டுமே பிரதம அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதை பற்றி அவர் முடிவு எடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை பிரதமர் அலுவலகம் மேற்கொள்கிறது. இதர அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைசார்ந்த பொருள்கள் பற்றிய முடிவுகளுக்கு பதிவேடுகள் பிரதம அமைச்சருக்கு அனுப்பப்படுகின்றன. உதாரணமாக பிரதம அமைச்சர் வழக்காறு அடிப்படையில் வான் வெளி, அணுசக்தி, அரசு அலுவலர், பொது மக்கள் குறை தீர்த்தல் மற்றும் ஒய்வு ஊதியம் சம்பந்தப்பட்ட துறைகளை தன் மேற்பார்வையின் கீழ் வைத்து கொள்வது நடைமுறையிலிருக்கிறது. பிரதம அமைச்சர் திட்டக்குழு தலைவராகவும் இருக்கிறார். எனவே இத்துறைகள் சம்பந்தப்பட்ட பதிவேடுகள் அவருடைய முடிவுக்கு அனுப்பப்படுகின்றன. மேற்கூறப்பட்டவை அல்லாமல் இதர பல அலுவல்களையும் பிரதமர் கவனிக்க வேண்டி இருக்கிறது.
அவை பின் வருமாறு,
அ. பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் நிகழ்வுகள்.
ஆ. முக்கியமான விஷயங்களில் எடுக்கப்பட வேண்டிய கொள்கை முடிவுகள்.
இ. அமைச்சக செயலரின் சம்பந்தப்பட்ட முடிவுகள்.
ஈ. ஆட்சித்துறை பிரச்சனைகள் தீர்த்துவைக்கும் தீர்ப்பாயம், மத்திய பணியாளர் தேர்வாணையம், தேர்தல் ஆணையம், சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் உறுப்பினர் நியமனம், மற்றும் இதர அமைச்சகங்களோடு தொடர்புடைய குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமனம்.
உ. நிர்வாக சீர்திருத்தம் மற்றும் சீரியல் பணிகள் தொடர்புடைய கொள்கைகளை முடிவு செய்தல்.
இந்திய அரசியலமைப்பின்படி, மக்களவைக்கு அந்த அவையின் உறுப்பினர்கள் இருவரை முறையே அதன் தலைவராகவும், துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுத்தல் வேண்டும். மக்களவைத் தலைவரின் பதவி காலியாக இருக்குமானால், அப்பதவிக்குரிய கடமைகளை அவைத்துணைத் தலைவர் புரிந்து வருதல் வேண்டும்.
இந்தியக் குடியரசுத் துணைத்தலைவர் தம் பதவி வழியில் மாநிலங்களவைத் தலைவராக இருப்பார். மாநிலங்களவை, அந்த அவையின் உறுப்பினர் ஒருவரை அதன் துணைத்தலைவராக தேர்ந்தெடுத்தல் வேண்டும்.
இந்தியாவின் மக்களவைத் தலைவர் பதவி கிட்டத்தட்ட காமன்ஸ் அவை (House of Commons) தலைவர் போன்றது. மக்கள் அவைத்தலைவர் பதவி அதிகாரமும் கெளரவமும் உடைய ஒன்றாகும்.
மக்களவையின் தலைவர் வாக்கெடுப்பின் முடிவில் வாக்குகள் சமனாக அமையும் போது மட்டும் வாக்களிப்பார். இதற்கு முடிவு செய்யும் வாக்கு (Costing ஒட்டு) என்று பெயர்.
மக்களவைத் தலைவர், துணைத்தலைவர் ஆகியோர் பதவி வகிக்கும் உறுப்பினர் மக்களவையின் உறுப்பினராக இருப்பது அற்றுப்போய்விடின், அவர் தம் பதவியை விட்டகலுதல் வேண்டும். அந்த உறுப்பினர் அவைத் தலைவராக இருப்பின், துணைத்தலைவருக்கும், அந்த உறுப்பினர் துணைத்தலைவராக இருப்பின் அவைத்தலைவருக்கும், தம் கையொப்பமிட்டு எழுத்துவழியே தெரிவித்து, தம் பதவியை விட்டு விலகிக் கொள்ளலாம். மக்களவையின் அப்போதைய அனைத்து உறுப்பினர்களில் பெரும்பான்மையினர், அந்த அவையில் நிறைவேற்றியும் அகற்றப்படலாம். அத்தீர்மானத்தை முன்மொழியவிருக்கும் கருத்தினைத் தெரிவித்துப் பதினான்கு நாட்களுக்குக் குறையாமல் முன்னறிவிப்புக் கொடுத்திருத்தல் வேண்டும்.
மக்களவை கலைக்கப்பட்ட பின்பு, அடுத்த மக்களவையின் முதல் கூட்டம் தொடங்கும் வரையில், அவைத்தலைவர் தம் பதவியை விட்டு அகல வேண்டியதில்லை.
இந்திய நாடாளுமன்றம், இந்திய குடியரசுத் தலைவரையும் மாநிலங்கள் அவை, மக்கள் அவை எனப்படும் இரண்டு அவைகளையும் கொண்டுள்ளது.
மாநிலங்கள் அவை 250க்கு மிகாத உறுப்பினர்களைக் கொண்டது. இதில் பன்னிருவரை (12), இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவை இவற்றில் சிறந்த அறிவும் அல்லது அனுபவமும் கொண்டவர்களை குடியரசுத் தலைவர் உறுப்பினர்களாக நியமிப்பார். மீதமுள்ள 238 உறுப்பினர்கள் வெவ்வேறு மாநிலங்களிலிருந்தும் யூனியன் பிரதேசங்கள் உள்பட அந்தந்த மாநிலங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மாநிலங்கள் அவைக்கான தேர்தல் மறைமுகமானது. மாநிலங்களின் சார்பாக உறுப்பினர்கள் மாநிலங்களில் தேர்தெடுக்கப்பட்ட சட்டமன்ற பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்கள் விகிதாசார பிரதிநிதித்துவ முறையைப் பின்பற்றி ஒற்றை மாற்று வாக்களிப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். யூனியன் பிரதேசங்கள் சார்பாக உறுப்பினர்கள் நாடாளுமன்றம் அவ்வப்போது விதிக்கும் விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மாநிலங்கள் அவை கலைப்பிற்கு உள்ளாவதில்லை. மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை விலக, காலியான இடங்களுக்கு மீண்டும் தேர்தல் நடைபெறும். ஆக இதன் உறுப்பினர்கள் ஆறு ஆண்டு காலம் பதவி வகிப்பார்கள்.
இந்திய துணைக்குடியரசுத் தலைவர் தன்னுடைய பதவியின் அடிப்படையில் மாநிலங்கள் அவையின் தலைவராகப் பொறுப்பேற்பார். மேலும் ஒரு துணைத்தலைவர் அந்த அவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார். துணைக்குடியரசு தலைவர் இல்லாத காலங்களில் துணைத்தலைவர் மாநிலங்கள் அவைக்கு தலைமை தாங்குவார்.
மக்கள் அவை 552க்கு மிகாத உறுப்பினர்களைக் கொண்டது. 530 உறுப்பினர்கள் மாநிலங்களிலிருந்தும், 20 உறுப்பினர்கள் யூனியன் பிரதேசங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மற்றும் ஆங்கிலோ இந்திய சமூகத்தினருக்கு மக்கள் அவையில் போதுமான பிரதிநிதித்துவம் கிடைக்கப்படவில்லை என்று குடியரசுத் தலைவர் கருதுவாராயின் அவர் அச்சமூகத்தினரில் இருவரை உறுப்பினர்களாக நியமிப்பார். மாநிலங்களின் மக்கள் தொகைக்கு இணங்க உறுப்பினர்கள் கணக்கிடப்பட்டு தேர்ந்தெடுக்கப் படுவார்கள். தற்போது மக்கள் அவை 545 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
இடையில் கலைக்கப்படவில்லையெனில், மக்கள் அவையின் பதவிக்காலம் ஐந்து ஆண்டு காலம் ஆகும். இருப்பினும், நெருக்கடி நிலைமை (Emergency) பிரகடனப்படுத்தும் காலங்களில் மக்கள் அவையின் காலத்தை ஒர் ஆண்டுக்கு மேற்படாமலும் நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டுவந்த பிறகு ஆறு மாதத்திற்கு மேற்படாமலும் சட்டத்தினால் நீட்டிக்கலாம்.
மக்கள் அவையின் தலைவர் (Speaker) நாடாளுமன்ற முதல் கூட்டத்தில் அவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார். மற்றும் அவை, ஒரு துணைத்தலைவரையும் (Deputy Speaker) தேர்ந்தெடுக்கும். தலைவர் இல்லாத காலங்களில் அவைத் தலைவராகப் பொறுப்பேற்றுத் துணைத்தலைவர் அவையை நடத்திக் கொடுப்பார்.
நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு ஒருவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும். மாநிலங்கள் அவையின் உறுப்பினர்கள் முப்பது வயதுக்குக் குறையாமலும், மக்கள் அவை உறுப்பினர்கள் இருபத்தைந்து வயதுக்கு குறையாமலும் இருத்தல் வேண்டும். கூடுதல் தகுதிகள் அவ்வப்போது நாடாளுமன்றத்தினால் சட்டத்தின் மூலம் அறிவிக்கப்படும். மக்கள் அவைக்குரிய உறுப்பினர் நாட்டின் எந்தத் தொகுதியிலிருந்தும் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்படலாம். மாநிலங்கள் அவையின் அங்கத்தினராவதற்கு ஒருவர் எந்த மாநிலத்திற்கு தேர்ந்தெடுக்கப் படுகிறாரோ அந்த மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளராக இருத்தல் வேண்டும்.
அரசியலமைப்பின்படி நாடாளுமன்றம் ஒரு ஆண்டில் குறைந்தது இரண்டு முறை கூட்டப்பட வேண்டும். இரண்டு கூட்டங்களுக்கும் இடையில் ஆறு மாதங்களுக்கு மிகாமல் இடைவெளி இருக்கும் வகையில் குடியரசுத் தலைவர் நாடாளுமன்ற கூட்டத்தைக் கூட்ட ஆணையிடுவார். நடைமுறையில் நாடாளுமன்றம் ஆண்டிற்கு மூன்று முறை கூட்டப்படுகிறது.
முதல் கூட்டத்தொடரில் அதாவது வரவு - செலவு அறிக்கை (பட்ஜெட்) கூட்டத்தொடரில், நாடாளுமன்ற இரு அவைகளையும் கூட்டி, குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்துவார். இந்த கூட்டத் தொடரிலேயே, இரயில்வே வரவு - செலவு மற்றும் பொது வரவு - செலவு மீது விவாதம் நடத்தி அவை ஏற்றுக் கொள்ளப்படும்.
நாடாளுமன்றம் பலதரப்பட்ட பணிகள் புரிந்துவருகிறது.
இயற்றுவதில் நாடாளுமன்றத்திற்கே அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. சில சூழ்நிலைகளில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் அதிகாரத்திலும் நாடாளுமன்றம் சட்டம் இயற்றக்கூடும். குடியரசுத் தலைவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கும், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளையும், உயர்நீதிமன்ற நீதிபதிகளையும் பதவி நீக்கம் செய்யவும், தலைமை தேர்தல் ஆணையரையும் மற்றும் இந்தியக் கணக்காய்வர் - தலைமைத் தணிக்கையர் (Comptroller and Auditor - General of India) ஆகியோரை அரசியலமைப்பின் வரையறுக்கப்பட்ட வழிமுறைப்படி பதவிநீக்கம் செய்யவும் நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்படுள்ளது.
சட்டமியற்ற நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதலைப் பெற வேண்டும். இருப்பினும், நிதி மசோதாவைப் பொறுத்தவரை மக்கள் அவையின் ஒப்புதலே முடிவானது. நிதி மசோதாக்கள், மாநில அவையினால் 14 நாட்கள் மட்டுமே தாமதப்படுத்தப்படலாம். தரப்பெறும் சட்டம் செய்யும் உரிமை நாடாளுமன்ற புனராய்வுக்கும் கட்டுப்பாட்டிற்கும் உட்பட்டது. சட்டங்கள் இயற்றும் அதிகாரங்களோடு நாடாளுமன்றத்திற்கு அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் செயலாட்சிக்குழுவின் மீது கேள்விகள், துணைக்கேள்விகள் கேட்பதன் மூலமாகவும், ஒத்திவைப்புத் தீர்மானம் மூலமாகவும், தீர்மானங்ளை விவாதித்து அவற்றை நிறைவேற்றுவதன் மூலமாகவும், கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலமாகவும் அல்லது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதன் மூலமாகவும் கட்டுப்பாட்டினை செலுத்தலாம்.
நாடாளுமன்றத்தின் பணிகள் பல தன்மை கொண்டவை மட்டுமல்ல, மிகுதியானவையும் கூட. அதனால் ஒவ்வொரு சட்டத்திற்கும் அதிக நேரம் ஒதுக்கவோ, கூர்மையாகக் கவனம் செலுத்தவோ முடிவதில்லை. அவ்வாறே பிறபணிகளுக்கும் போதிய கவனம் செலுத்த முடிவதில்லை. எனவே மசோதாக்கள் பரிசீலனைக்காக நாடாளுமன்ற குழுக்களுக்கு அனுப்படுகின்றன.
உச்சநீதிமன்றத்தின் அமைப்பு
இந்திய உச்சநீதிமன்றம் ஒரு தலைமை நீதிபதியையும் மற்றும் இருபத்தைந்து நீதிபதிகளையும் கொண்டிருக்கும். தலைமை நீதிபதியும் மற்ற நீதிபதிகளும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார்கள். நீதிபதிகளை நியமிக்கும்போது குடியரசுத் தலைவர் உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதியை கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார். அரசியலமைப்பின்படி உச்சநீதிமன்ற நீதிபதிக்கு பின்வரும் தகுதிகள் அவசியமென கருதப்படுகிறது.
முதலேற்பு அதிகார வரம்பு (Originaljurisdiction)
இந்திய அரசியலமைப்பு உச்சநீதிமன்றத்தின் முதலேற்பு அதிகார வரம்பிற்குட்பட்ட வழக்குகளை கீழ்க்கண்டவாறு கூறுகிறது. அ. இந்திய அரசாங்கத்திற்கும், ஒரு மாநிலம் அல்லது பல மாநிலங்களுக்கும் இடையே எழும் வழக்கு, அல்லது. ஆ ஒருபுறம், இந்திய அரசாங்கமும் ஏதேனும் மாநிலம் அல்லது மாநிலங்களும் மறுபுறம் பிறிதொரு மாநிலம் அல்லது மாநிலங்கள் இவற்றிற்கிடையே எழும் வழக்கு அல்லது இ. இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையே எழும் வழக்கு அடிப்படை உரிமைகள் செயலாக்குவது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் முதலேற்பு அதிகார வரம்புக்கு உட்பட்டவை.
மேல்முறையீட்டு அதிகார வரம்பு (Appelate Jurisdication)
உச்சநீதிமன்றம் தான் இந்தியாவிலேயே இறுதியான மேல் முறையீட்டு நீதிமன்றமாகும். மாநிலங்களின் உயர்நீதி மன்றங்களின் சிவில் (உரிமையியல்) மற்றும் கிரிமினல் (குற்றவியல்) வழக்குகளின் தீர்ப்புகளுக்கு எதிராக உச்சநீதி மன்றத்திற்கு முறையீடு செய்யலாம். குறிப்பிட்ட வழக்குகளில் அரசியலமைப்பின் பொருள் குறித்து தெளிவான சட்டப் பிரச்சினை உள்ளது என உயர்நீதிமன்றம் சான்று வழக்கினாலன்றி உச்சநீதிமன்றம் அந்த வழக்கை ஏற்றுக் கொள்ளாது. உயர்நீதிமன்றம் இத்தகைய சான்றுகள் வழங்கவில்லை என்றாலும் உச்சநீதிமன்றம் இந்திய எல்லைக்குட்பட்ட எந்த நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயத்தின் (Tribunal) தண்டனைக்கெதிராகவும், கட்டளைக்கெதிராகவும் தனி அனுமதி வழங்கலாம்.
சிவில் வழக்கு தொடர்பாகவும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்யலாம். குற்றவியல் வழக்கு தொடர்பாகவும், இந்திய எல்லைக்குட்பட்ட எந்த உயர்நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுத்கெதிராகவும் அல்லது குற்றவியல் வழக்கில் வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராகவும் உச்சநீதி மன்றத்திற்கு மேல் முறையீடு செய்யலாம்.
ஆலோசனை அதிகார வரம்பு
ஒரு வழக்கு சட்டவிளக்கம் தொடர்பான அல்லது வேறு எந்த அம்சம் குறித்தும் பொது முக்கியத்துவம் வாய்ந்தது என்று குடியரசுத் தலைவர் கருதினால் அது தொடர்பான உச்சநீதிமன்றத்தின் கருத்துரையைப் பெறுதவற்காக அனுப்பலாம். அந்த அதிகாரத்தை அரசியலமைப்பு குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ளது.
நீதிப்பேராணை அதிகாரவரம்பு (Writ Jurisdiction)
இந்திய அரசியலைப்பின் விதி 32ல் வழங்கப்படும் உரிமை மனிதனின் இருதயமும் உயிர்சக்தியும் ஆகும். இவ்வுரிமை மூலம் தனிமனிதனின் உரிமையும் சுதந்திரமும் பாதுகாக்கப்படுகின்றன. உச்சநீதிமன்றம் கீழ்க்கண்ட நீதிப்பேராணைகள் பிறப்பிப்பதற்கு அதிகாரம் உடையது.
ஆட்கொணர்விப்பு நீதிப்பேராணை
தவறாக ஒருவர் காவலில் வைக்கப்பட்டால் அவருக்கு நீதி வழங்கும் நீதிமன்றம் காவலில் வைத்த அதிகாரிக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ ஆணை வழங்கி காவலில் வைக்கப்பட்டவரை நீதிமன்றத்தின் முன் கொண்டுவரச் செய்வதாகும். காவலில் வைக்கப்பட்டது சரி என நியாயப்படுத்த வேண்டியது காவல் துறையின் கடமை. இல்லையேல் அவரை விடுதலை செய்ய வேண்டும்.
செயலுறுத்து நீதிப்பேராணை (WRTOF MANDAMUS)
செய்யத்தவறிய ஒரு குறிப்பிட்ட செயலை உடனடியாக செய்யக்கோரி நீதிமன்றம் ஆணை பிறப்பிப்பதாகும். இவ்வாணை பிறப்பிக்கப்பட்டதும் குறிப்பிட்ட அலுவலர் அச்செயலை உடனடியாகச் செய்ய வேண்டியவராகிறார்.
தடையுறுத்து நீதிப்பேராணை
நீதிமன்றம் ஓர் அதிகாரிக்கு ஆணை பிறப்பித்து, அவரது எல்லைக்குட்படாத ஒரு செயலை செய்யாதிருக்குமாறு ஆணை பிறப்பிப்பதாகும்.
நெறிமுறைக்கேட்பு நீதிப்பேராணை (WRTOF CERTIORAR)
நீதிமன்றம் தனது கீழ்ப்பட்ட ஒரு அதிகாரிக்கோ அல்லது நீதிமன்றத்துக்கோ ஆணை பிறப்பித்து, குறிப்பிட்ட நீதிமன்ற செயல்முறைகளையும், அது தொடர்பான ஆவணங்களையும் தனக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ மாற்றச் செய்து நியாயமான பரிசீலனைக்கு அனுப்பச்செய்வதாகும்.
செயலுறுத்து நீதிப் பேராணை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தடையுறுத்து நீதிப்பேராணை நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்பதும் ஆகும். செயலுறுத்து நீதிப் பேராணை நீதித்துறை என்று மட்டுமல்லாமல் நிர்வாகத்துறையின் அதிகாரப்பொறுப்பில் இருப்பவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வழி செய்கிறது. ஆனால் தடையுறுத்து நீதிப்பேராணை மற்றும் நெறிமுறை கேட்பு நீதிப்பேராணை நீதி அல்லது நீதித்துறையோடு தொடர்புடைய அதிகாரம் செலுத்துவோருக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது.
தகுதிவினவு நீதிப்பேராணை
பாதிக்கப்பட்ட ஒரு நபரின் நியாயமான கோரிக்கையின் அடிப்படையில் அரசாங்கத்தின் அலுவலர் ஒருவரை அவர் எந்த அடிப்படையில் குறிப்பிட்ட பதவியை வகிக்கிறார் என்பதைத் தெளிவுப் படுத்தக்கோரும் நீதிமன்றத்தின் உத்தரவாகும்.
அ. அவ்வலுவலர் அரசாங்க அலுவராகவும் அவருடைய பதவி சட்ட அடிப்படையில் அல்லது அரசியல் சட்ட அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டிருக்கவேண்டும்.
ஆ. அவ்வலுவலர், மற்றவருடைய விருப்பத்திற்கு இணங்கவோ அல்லது அவர் சொல்லுபவற்றை நிறைவேற்றும் வேலை ஆளாகவோ இல்லாமல் சார்பில்லாத உறுதியாக ஏற்படுத்தப்பட்ட அலுவலராக இருக்க வேண்டும்.
இ. அவ்வலுவலர் நியமிக்கப்பட்டது அரசியலமைப்பு அல்லது சட்டம் அல்லது சட்டம் சார்ந்த பிரச்சினை சம்பந்தப்பட்டதாக இருக்கவேண்டும். அரசாங்க அலுவல்கள் ஆக்கிரமிப்பை எதிர்த்து பாதுகாக்கும் அதிகாரம் மிக்கதாக தகுதி வினவு ஆணை கருதப்படுகிறது.
இன்னபிற அதிகார வரம்பு
அ. 'உச்சநீதிமன்றம்’ ஒரு பதிவு (Court of record) நீதிமன்றமாக இருக்கும். மேலும் அதன் ஆணைகளை அவமதிப்போரைத் தண்டிக்கும் அதிகாரம் அனைத்தையும் உடையதாகவும் இருக்கும்.
ஆ உச்சநீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட தீர்ப்புகள் இந்திய எல்லைக்குட்பட்ட எல்லா நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும்.
இ. குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று நீதிமன்ற நடவடிக்கைகளையும் செயல்முறைகளையும் ஒழுங்குபடுத்துவதற்காக விதிகளை இயற்ற உச்சநீதிமன்றம் அதிகாரம் பெற்றுள்ளது.
ஈ. உச்சநீதிமன்றம் தனக்குக் கீழ்ப்பட்ட அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோரை கட்டுப்படுத்த வல்லது. சட்ட அலுவலர்கள் மற்றும் மத்திய சட்ட செயலி (Law Officers and the Central Law Agency)
மேற்கூறப்பட்ட அலுவலர்கள் அனைவரும் அரசியல் சட்ட விதி 76யின் படி குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் துறையை சார்ந்தஅலுவல்கள், கடமைகள் நடைமுறைகள் மற்றும் அவைப்பற்றிய சட்டபூர்வ நிலைமைப்பற்றி தேவைப்படும் போதோ அல்லது கேட்டு கொள்ளும்போதோ, குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை கூறும் பணியைச் செய்கிறார்கள்.
பொது வழக்கறிஞர் இந்திய யூனியனில் சட்டம் சம்பந்தமான துறையின் மிக உயர்ந்த அலுவலர் ஆவார். அவருடைய பணிகளை நிறைவேற்றுவதற்கு அல்லது பணிகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரணை நடைபெறும் போது அவை எத்தகைய நீதிமன்றமாக இருந்தாலும் அங்கு தானே நேரில் ஆஜராகி வழக்கு விசாரணையில் உதவுவதற்கு அனுமதியும் உரிமையும் உடையவர்.
பொது வழக்கறிஞர் குடியரசுத் தலைவருடைய விருப்பம் உள்ளவரை பதவியில் இருப்பார். அவர் அனுமதிக்கும் ஊதியத்தை அவ்வப்போது பெறுவார். பொது வழக்கறிஞரை அடுத்து இன்னும் ஒரு இந்திய அரசு வழக்கு குறிப்புகள் தயாரிப்பவர் (Solicitor General of India) உள்ளார்.
ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் ஆராய்ச்சி கல்வியியல் நிறுவனம்