பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / நிர்வாகம் / உள்ளாட்சி மன்ற நிர்வாகம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

உள்ளாட்சி மன்ற நிர்வாகம்

உள்ளாட்சி மன்ற நிர்வாகம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

பணிகளைப் பொறுத்தவரையில், அடிப்படை நிலையிலான நிருவாகம் முழுவதும் உள்ளாட்சி மன்றங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நிதி ஆதாரங்களை கையகப்படுத்தும் முறைகளும், பொதுவாக வரையறுக்கப்பட்டுள்ளன. எனவே, உள்ளாட்சி மன்ற நிருவாகங்களுக்கு பொருளாதார வளர்ச்சி, மற்றும் சமூக நீதியை எய்துவது தொடர்பான நடவடிக்கைகளைத் திட்டமிட்டு, செயல்படுத்தும் முக்கியப் பொறுப்புகள் உள்ளன. இந்த நிலையினால் புதிய வகைப் பொறுப்புகளும் பதில் சொல்லும் கடைமைகளும் உள்ளாட்சி மன்ற நிருவாகங்களின் மீது சுமத்தப்பட்டுள்ளன. ஜனநாயகக் கட்டமைப்பு, உள்ளூர் பொதுமக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பை உள்ளாட்சி மன்றங்களுக்கு ஏற்படுத்துகின்றன.

தெரிந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரநிதிகள் அவர்களின் கீழ் இயங்குகிற நிருவாகப் பணியாளர்கள் ஆகியோரிடம் பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி ஆகிய இரட்டை நோக்கங்களை எய்துவதான கடுமையான (Onerous) பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் தவறான நிருவாகத்தின் காரணமாக, சில உள்ளாட்சி மன்ற நிருவாகங்கள், தோல்வியை சந்தித்த நேர்வுகள் உண்டு. இவைகள், பயிற்சியும் மனித வள மேம்பாடும் எந்த அளவுக்கு அவசியம் என்பதை நமக்கு உணர்த்துகின்றன.

உள்ளாட்சி மன்ற நிருவாகங்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர், தேவையான திறமையும் வல்லமையும் பெற்றிராவிடில் உள்ளாட்சி மன்ற நிருவாகங்கள் வெற்றிகரமாகவும், திறம்படவும் நடைபெற முடியாமல் போய்விடும். அவ்வாறு நிருவாகம், திறமையானதாக அமையாவிட்டால், நிதி ஆதாரங்கள் அதிக அளவில் வீணாவதோடு, இந்த நிருவாக அமைப்புகள் பெறுதற்கரிய பொது நிதி ஆதாரங்களை வீணடிக்கும், செயலற்றுப் போன ஓர் அமைப்பாக மாறிவிடும்.

மனப்போக்கில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள், திறமை மேம்பாடு குறித்த திட்டங்கள், பயிற்சித் திட்டங்கள் மூலம் அவற்றை எய்தினாலன்றி மற்றபடி, அதிகாரப் பரவல் கோட்பாடே சிதைந்து, காலப்போக்கில் மக்களுக்கு அதிகாரங்களை அளிக்கின்ற உள்ளாட்சி மன்ற நிருவாகங்களின் வேரே ஆட்டம் கண்டு விடும்.

குடிமைப் பணி நிருவாகத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ள அனைவரின் திறமைகளை மேம்படுத்துவதற்கும், உள்ளாட்சி மன்ற நிருவாகங்களின் பல்வேறு அடுக்கு முறைகளில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி, சமூக நீதியை நிலை நாட்டவும் பின்வருபவர்களுக்கு விரிவான பயிற்சி அளிக்கப்படலாம்.

பயிற்சியாளர்கள்

 • அலுவல் சார்பற்ற தலைவர்கள்;
 • உள்ளாட்சி மன்றங்களின் அலுவலர்கள், பணியாளர்கள்;
 • உள்ளாட்சி மன்ற நிருவாகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள சார்புத்துறைகள் (Line Departments), தலைமைச் செயலகத்திலுள்ள ஊரக வளர்ச்சித்துறை,
 • நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள்.

இவ்வாறு பயிற்சி பெற்ற அலுவலர்களும், பணியாளர்களும் நெறிமுறைப்படுத்தல், ஆய்வு செய்தல் அல்லது வழிப்படுத்தும் அல்லது இணக்கமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படலாம். வெவ்வேறு நிலையிலான அமைப்புகளைச் சேர்ந்த இந்த அனைத்து பணியாளர்களும் பின்வரும் வெவ்வேறு படித்தர நிலையைச் சேர்ந்தவர்களாவர்.

அ) கொள்கை வகுத்தல்;

ஆ) மேல் நிலை நிருவாகம்;

இ) இடை நிலை நிருவாகம்;

ஈ) ஆரம்ப நிலை நிருவாகம்;

உ) மேற்பார்வை;

ஊ) இயக்கப் பணியாளர்கள்.

உள்ளாட்சி மன்ற நிருவாகங்களுக்கு அதிகாரங்கள் மற்றும் பணிகள் அளிப்பதற்கேற்ப ஒத்த தொடர்புகளைக் கொண்டுள்ள துறைகள் மற்றும் முகவரமைப்புகளிலுள்ள பணியாளர்களின் மனநிலையிலும் மாறுதல் ஏற்பட வேண்டும்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், தமிழ்நாடு மின் வாரியம், நெடுஞ்சாலை மற்றும் ஊரகப் பணிகள் துறை, பொதுச் சுகாதாரத்துறை, மருத்துவப் பணிகள் துறை போன்றவை உள்ளாட்சி மன்ற நிருவாகங்களுடன் தொடர்பு கொண்டுள்ள சில முக்கிய துறைகள்/ அமைப்புகள் ஆகும். வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக, இவற்றின் பணியாளர்களின் மனப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட வேண்டியது மிக அவசியம் ஆகும்.

செயல்பாட்டுக் காரணிகள்

 • செயல்பாடு என்பது மக்களின் திறமை, செயல்திறன் ஆகியவற்றை மட்டும் சார்ந்திராமல், அவர்கள் செய்யும் வேலையில் அவர்களுக்குள்ள நாட்டத்தையும் பொறுத்தமைகிறது.
 • மனப்பான்மை என்பது, நிறுவனத்தின் குறிக்கோளை எய்பதுவதற்கு அர்ப்பண உணர்வோடும், ஈடுபாட்டுடனும் செயல்படத் தூண்டும் மன நிலையாகும்.
 • எனவே, மனப்போக்கில் மாற்றமும் திறமை மேம்பாடுமே தற்போதைய தேவையாகும்.
 • உள்ளாட்சி நிறுவனங்களின் எண்ணிக்கையை கருதிப் பார்த்தோமேயானால், அளிக்க வேண்டிய பயிற்சியின் அளவை நம்மால் ஊகித்து அறிய முடியும் .
 • உள்ளாட்சி மன்றங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோருடன் இம்மன்றங்களின் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட, மாநில அரசு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் பயற்சிக்கு சேர்க்கப்படல் வேண்டும்.
 • விரிவானப் பயிற்சியை முழுவதுமாக அளிப்பதற்கான கால அவகாசம் மிகச் சொற்பமே ஆகும். பணியில் ஈடுபடுவதற்கு முன்னர், உள்ளாட்சி மன்ற நிருவாகங்களில் உள்ள பல முக்கிய நபர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டியுள்ளது.
 • அதாவது, ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் 3லிருந்து 6 மாதங்களுக்குள் பயிற்சி அளிக்க வேண்டியுள்ளது. இத்தகைய விரிவான பயிற்சியை வழங்குவதற்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கண்டறிந்து, உடனடியாக அவற்றை செய்து தரப்படல் வேண்டும்.

பயிற்சித் திட்டம்

பயிற்சி அளிப்பப்படுவதற்கு முன்னர், ஏனைய மனித ஆற்றல் குறித்த திட்டமிடுதல், வளர்ச்சிப் பணிகளின் நேர்வில் செய்யப்படுவது போன்று, பயிற்சி மையங்கள், பயிற்சி கால அளவு, பயிற்சிப் பாடத் திட்டங்கள் ஆகியவற்றையும் மதிப்பிடுவது மிகவும் அவசியமாகும்.

தொழில் நுட்பத் துறை இயக்குநர்கள், மாநிலத்திலுள்ள சார்பு முகவரமைப்புகள், அரசுத் துறைகள் ஆகியவற்றுடன் இணைந்த பயிற்சி நிலையங்களுடன், நகர்ப்பகுதிகளிலும் ஊரகப் பகுதிகளிலுமுள்ள பயிற்சி நிறுவனங்கள், அரசு சாராத நிறுவனங்கள், மேலாண்மை நிறுவனங்கள், சமூகப் பணிக் கல்வி நிறுவனங்கள் போன்றவை இந்த வகையான மதிப்பீடுகளிலும், பயிற்சித் திட்டங்களிலும் உள்ளாட்சி மன்றங்களின் ஒத்துழைப்புடன் பங்கேற்கலாம்.

பயிற்சியளிக்க வேண்டிய நபர்களின் எண்ணிக்கை ஏராளமாக இருப்பதைக் கருத்திற்கொண்டு, நாட்டமும் விருப்பார்வமும் உள்ளவர்களைத் தெரிந்தெடுத்து, பொருத்தமான பாடத் திட்டங்கள் மற்றும் பயிற்சி உபகரணங்களின் உதவியோடு, தனித் திட்டங்களைக் கொண்டு அவர்களுக்குப் பயிற்சி அளித்து, அவ்வாறு பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு உள்ளாட்சி மன்ற நிருவாகத்தில் சம்பந்தப்பட்டுள்ள அலுவல் சார்பற்றோருக்கும், அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கலாம்.

பயிற்சிக்கான இடம் தேர்வுசெய்தல்

ஊராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் ஆகியோருக்குரிய பயிற்சிக்கான இடங்களாக ஊராட்சி ஒன்றிய மையங்களை தேர்வு செய்யலாம். ஊரக விரிவாக்கப் பயிற்சி மையங்கள், சென்னை மாநில ஊரக வளர்ச்சிப் பயிற்சி நிறுவனம், கோயம்புத்தூர் நகர்ப்பகுதி ஆய்வு நிறுவனம் போன்ற வட்டாரப் பயிற்சி மையங்களை முறையை ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் / துணைத் தலைவர்கள், , பேரூராட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் /துணைத்தலைவர்கள் நிலை I, II, மற்றும் III ஆம் நிலை நகராட்சிகளின் தலைவர்கள் துணைத் தலைவர்கள் ஆகியோருக்குப் பயிற்சியளிக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம். மாவட்டப் பஞ்சாயத்துக்களின் தலைவர்கள், சிறப்பு நிலை, தேர்வுநிலை நகராட்சிகளின் தலைவர்கள் துணைத் தலைவர்கள், மாநகராட்சிகளின் மேயர்கள் மற்றும் துணை மேயர்கள், துறைத் தலைவர்கள் மற்றம் சார்பு முகவரமைப்புகளின் தலைவர்களுடன் மாநில, தேசிய அளவிலான பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறலாம்.

மதிப்பீடு செய்யப்பட்ட தேவைகள், முன்னுரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையில், ஒரு பயிற்சித் திட்டம் வகுக்கப்பட வேண்டும். இதில், ஏனையவற்றிற்கிடையே தெரிந்தெடுக்கப்பட வேண்டிய நிறுவனங்கள், பயிற்சிக் கால அளவு, பாடத் திட்டங்கள், தேவையான வசதிகள், தேவையான துறை வல்லுநர்கள், தேவையான நிதி ஆகியவற்றுக்கு வகை செய்யப்படல் வேண்டும். இப்பயிற்சியளிப்பது தொடர்பான சவாலை ஏற்கும் வகையில், தற்போதுள்ள பயிற்சி மையங்கள் அதாவது, 5 ஊரக விரிவாக்கப் பயிற்சி மையங்கள், மறைமலை நகரிலுள்ள மாநில ஊரக வளர்ச்சி நிறுவனம், கோயம்புத்தூரிலுள்ள நகர்ப்பகுதி ஆய்வு நிறுவனம் ஆகியவற்றை அனைத்து வசதிகளுடன் வலுப்படுத்த வேண்டும். மேலும், மறைமலைநகரிலுள்ள மாநில ஊரக வளர்ச்சிப் பயிற்சி நிறுவனமும், கோயம்புத்தூர் நகர்ப்பகுதி ஆய்வு நிறுவனமும், ஊரக மற்றும் நகர்ப்பகுதி உள்ளாட்சி மன்ற விவகாரங்களில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி தொடர்பான பணிகளை ( Research & Development) மேற்கொள்ளும் நிலையங்களாகத் திகழச் செய்ய வேண்டும்.

உள்ளாட்சி மன்றங்களின் அலுவலர்கள் மற்றும் பொறுப்புகளில் தொடர்புடைய, அலுவல் சார்பற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆகியோருக்கு புகுமுக, செயல்பாடுகள் பற்றிய, மற்றும் நிருவாகப் பயிற்சி அளிக்கப்படல் வேண்டும்.

மனிதவள மேம்பாட்டுத்துறையில் நிபுணத்துவம் பெற்ற ஓர் உயர் அமைப்பான சென்னை அண்ணா மேலாண்மை நிறுவனம், உள்ளூர் அரசு அமைப்புகளிலும், சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகள், சார்பு அமைப்புகளிலுள்ள பணிகள் தொடர்பான பயிற்சித் தேவைகளை மதிப்பிடும் ஓர் ஆலோசனை அமைப்பாக தொடர்ந்து செயல்பட்டு, விரிவான பயிற்சித் திட்டத்தை வகுத்தளிக்கலாம்.

சென்னை அண்ணா மேலாண்மை நிறுவனமும், மறைமலைநகர் மாநில ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவனமும், கோயம்புத்தூர் நகர்ப்பகுதி ஆய்வு நிறுவனமும் பயிற்சியாளர்களுக்குப் பயிற்சியளிப்பதுடன்,"உள்ளாட்சி மன்றங்களில் நிதி நிருவாகம்", " உள்ளாட்சி மன்றங்களில் சேவைப்பணிகள் நிருவாகம்" ஆகிய அம்சங்களில் உள்ளாட்சி மன்றங்கள் மற்றம் சார்பு முகவரமைப்புகள்/ துறைகளின் சிலவகை அலுவலர்களுக்கு பயிற்சியும் அளிக்கும்.

பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் பயிற்சியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ஐதராபாத்திலுள்ள தேசிய ஊரக வளர்ச்சிப் பயிற்சி நிறுவனம் ஏற்கெனவே உருவாக்கியுள்ள பயிற்சி முறைகளையும், நகர்ப்பகுதி உள்ளாட்சி அமைப்புகளுக்கான புது டெல்லியிலுள்ள தேசிய நகர்ப்பகுதி செயல் நிறுவனத்தால் (NIUA) உருவாக்கப்பட்ட பயிற்சி முறைகளையும் பயன்படுத்திக்கொள்வது அவசியம் ஆகும். இப்பயிற்சித்திட்டம் முழுவதும் மக்கள் நலனை நோக்கமாகக் கொண்ட திட்டமாதலால், இதில் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்களைப் பெருமளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள்

 • சென்னையில் உள்ள "மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெவலப்மெண்ட் ஸ்டடீஸ்”,(MIDS), "யூனிசெப்' நிறுவனம், காந்திகிராமம் பல்கலைக்கழகம்,
 • நிதி நிருவாகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,
 • சென்னை (IFMR), சென்னை பொருளாதாரக் கல்வி நிறுவனம் (MSE),
 • தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனம் (NIPFP) புதுடெல்லி, அனைத்திந்திய உள்ளூர் தன்னாட்சி நிறுவனம் மும்பை, "மைராடா” நிறுவனம்,
 • சென்னை சி.பி.ஆர். சுற்றுச் சூழல் கல்வி மையம், சென்னை
 • சத்தியமூர்த்தி பவுண்டேஷன்

போன்ற நிறுவனங்களில் உள்ள வல்லுநர்கள், மேற்படி கருத்துக்களைப் பரவச் செய்து, மக்களிடையே மன மாற்றப்போக்கை ஏற்படுத்த இயலும்; இத்தகைய வாய்ப்புகளை முறையாகவும் முழுமையாகவும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அனைத்து அரசுத்துறைகளும், அரசுத் துறை நிறுவனங்களும் ஆண்டுதோறும் தங்கள து பணியாளர்களின் ஊதிய வகையில் ஆகும் செலவில் 0.5 சதவீதத்திற்கான தொகையை பயிற்சிக்காக ஒதுக்க வேண்டும் என்று பணியாளர் நிருவாகச் சீர்திருத்தத்துறையின் 17.7.95 ஆம் நாளிட்ட 239 ஆம் எண் அரசானையில் ஆணையிட்டுள்ளதால், கிராம/ நகர்ப்பகுதி பயிற்சி மையங்களை வலுப்படுத்தும் செயல் நோக்கத்திற்காவும், பயிற்சித் திட்டத்திற்காகவும் ஏற்படுத்தப்படவிருக்கிற பயிற்சி நிதிக்கு ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்டப் பஞ்சாயத்துக்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநாகராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகள் தங்களது ஆண்டு ஊதியச் செலவுத் தொகையில் 0.5 சதவீதத்திற்குக் குறையாத ஒரு தொகையை அளிக்கவேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்படலாம்.

யுனிச்செப் நிதிகள்

இந்நிதி, ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர், நகராட்சி நிர்வாக இயக்குநர், பேரூராட்சிகள் இயக்குநர் ஆகியோரின் கட்டுப்பாட்டில் செயல்படலாம்.

 • ஜவஹர் வேலை வாய்ப்புத்திட்டம்,
 • நகர்ப்பகுதி அடிப்படை வசதித்திட்டம்,
 • நேரு வேலைவாய்ப்புத் திட்டம்,
 • பிரதமர் சுய வேலைவாய்ப்புத்திட்டம்

ஆகிய திட்டங்களின் கீழ் பயிற்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளையும் இதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். தவிரவும் 'யூனிசெப்” நிறுவனம், நகராட்சி நகர்ப்பகுதி வளர்ச்சி நிதி, தமிழ்நாடு நகர்ப்பகுதி வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றைச் சேர்ந்த நிதிகளிலிருந்தும் இதற்கான உதவியைப் பெறலாம்.

உள்ளாட்சி மன்றங்களுடன் அலுவல் தொடர்புடைய சார்பு முகவரமைப்புகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும், சம்பந்தப்பட்ட துறையின் மாநிலத் தலைமை அலுவலகத்தில் ஏற்கெனவே பயிற்சிப் பிரிவு (Training Cell) எதுவும் செயல்படாமல் இருந்தால், இருக்கின்ற பணியாளர்களைக் கொண்டு பொருத்தமான பயிற்சிப் பிரிவு ஒன்றை ஏற்படுத்துதல் வேண்டும். இப்பிரிவு, இப்பொறுப்பினை எடுத்துக்கொண்டு பயிற்சித் தேவைகளை மதிப்பீடு செய்தல், அலுவலர்களைப் பல்வேறு நிறுவனங்களுக்கு பயிற்சிக்கு அனுப்புதல், பணிமுன்னேற்றங்களை ஆய்வு செய்தல், துறையின் பயிற்சித் தேவைகளுக்கினங்க பாடத்திட்டங்களைப் புத்தகாக்கம் செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளிக்க இத்திட்டத்தில் உரிய முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். அலுவலர்களுக்கும் பயிற்சித்திட்டம் தொடங்கப்படல் வேண்டும்.

பயிற்சித் திட்டங்களை வகுப்பதற்காக அமைக்கப்படவிருக்கும் பயிற்சிப்பிரிவு, பின் வருவன வற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்; அதாவது, அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்களின் பயனாக, அலுவல் சார்பற்றவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களையும், ஒதுக்கப்பட்டுள்ள அலுவல்களையும் ஒட்டி, உள்ளாட்சி மன்றங்களை நிருவகிப்பதில் அவர்களுக்குள்ள உரிமைகளையும், கடமைகளையும் உணர்த்தும் வகையில், மேற்படி அலுவல் சார்பற்றவர்களுக்கான பயிற்சித் திட்டம் அமைய வேண்டும். அதே நேரத்தில், அலுவலர்களுக்கான பயிற்சித் திட்டம், அரசின் அதிகாரங்கள் தேர்ந்தெடுக்கப்ட்ட பிரதிநிதிகளிடத்தில் நிலை பெற்றிருக்கும் புதிய அமைப்பு முறையில் அவர்களுக்குள்ள புதிய பங்கு பணியை உணர்த்துகின்ற வகையில் அமைவதுடன் அறிமுக நிலை, அலுவல் நிலை, நிருவாக நிலைப் பயிற்சித் திட்டங்களை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும். உள்ளூர் மக்களாட்சி முறை வெற்றி பெறுவதற்கான திறமையினையும், மனப்பக்குவத்தினையும் வளர்ப்பதே அனைத்து பயிற்சித் திட்டங்களின் மையக்கருத்தாக அமைய வேண்டும்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலமாகவும், மாநில அளவிலான தேர்வுக் குழுக்கள் மூலமாகவும் நியமிக்கப்படும் இளநிலை உதவியாளர்களும், இதரர்களும், அவர்கள் புதிதாக பணியேற்குமுன், பவானிசாகர்-சிவில் பணிகள் பயிற்சி நிலையத்தில் அளிக்கப்படும் பயிற்சி, அவர்கள் அரசின்/ உள்ளாட்சி நிருவாகத்தின் அடிப்படைகள் குறித்து முழுமையான பயிற்சி பெற்றவர்களாக அமைந்து, பணியில் சேர வேண்டும்

புதிதாகப் பணியில் சேர்ந்தவர்களுக்கும், ஏற்கெனவே பணியில் சேர்ந்தவர்களில் பயிற்சி எதுவும் அளிக்கப்பெறாதவர்களுக்கும் செயல்முறைப் பயிற்சி அளிக்கப்படும்; புதிதாகப் பணியில் சேர்ந்தவர்கள், குறித்த காலத்திற்கொருமுறை நடத்தப்படும் முறையான செயல் முறை பயிற்சித் திட்டத்தில் சேர்ந்து பயிற்சி பெறுபவர். பணியில் சேர்ந்து ஆனால் இத்தகைய பயிற்சி பெறாத அனைத்துப் பணியாளர்கள் பற்றிய மதிப்பீடு ஒன்று தயாரிக்கப்பட்டு இவர்கள் ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் பயிற்சியை முடிக்க விரைவு பயிற்சித் திட்டம் ஒன்று நடத்தப்பட வேண்டும். இத்தகைய செயல் முறைப் பயிற்சித் திட்டம், நிருவாகம் மற்றும் கணக்குகளைப் பராமரித்தல் பற்றிய பாடத்திட்டத்தை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். பணியாளர்கள், சட்டங்கள், விதிகள், ஒழுங்குமுறை விதிகள் ஆகியவை பற்றி முழுமையாக அறிந்திருத்தால்தான் நிதிகள் முறையாகப் பயன்படுத்தப்பட்டடு, கணக்குகள் சரிவர வைத்துவரப்படுவதுடன், இதன் பயன்கள் உரிய காலத்தில் முழுமையாக மக்களைச் சென்றடையும்.

பயிற்சித் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் ஊரக விரிவாக்கப் பயிற்சி மையங்கள், மறைமலை நகரிலுள்ள மாநில ஊரக வளர்ச்சிப் பயிற்சி நிறுவனம், கோயம்புத்தூரிலுள்ள நகர்ப்பகுதி ஆய்வு நிறுவனம் ஆகியவற்றின் உள்ளமைப்பு வசதிகள் (Infrastructural facilities) வலுப்படுத்தப்படல் வேண்டும். இந் நிறுவனங்கள் முறையே ஊரக மற்றும் நகர்ப்பகுதி உள்ளாட்சி மன்றங்களின் விவகாரங்கள் குறித்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளையும் (Research & Development) மேற்கொள்ளல் வேண்டும்.

ஆதாரம் : மத்திய மனிதவள மேம்பாட்டுக்கழகம், புதுடெல்லி

Filed under:
2.5
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top