பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / நிதி சேர்க்கை / பொருளாதாரம் / பொருளாதார முன்னேற்றத்தில் வேளாண்மையின் பங்கு
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பொருளாதார முன்னேற்றத்தில் வேளாண்மையின் பங்கு

பொருளாதார முன்னேற்றத்தில் வேளாண்மையின் பங்கு குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

நம் நாட்டின் பொருளாதார வாழ்வில், வேளாண்மை மிக முக்கியப் பங்கு வகுக்கின்றது. நமது பொருளாதார அமைப்பிற்கு இதுவே முதுகெலும்பாகும். இந்தியப் பொருளியலில் வேளாண்மையே பிழைப்பூட்டும் முதன்மையான அடிப்படை ஆதாரமாகும். இந்தியா ஒரு விவசாய நாடாகவே தொன்று தொட்டு விளங்கி வருகிறது. இன்றும் நாட்டின் எதிர்காலம் வேளாண் உற்பத்திப் போக்கைப் பொறுத்தே அமையும். நாட்டின் பொருளாதாரத்தில் வேளாண்மையின் பங்கினைப் பற்றி கீழ்க்காணுமாறு விளக்கலாம்.

நாட்டு வருமானத்தில் வேளாண்மையின் பங்களிப்பு

இன்றைய நாட்களிலும் கூட நாட்டு வருமானத்தில் வேளாண்மைப் பெரும் பங்களிக்கிறது. 1950 முதல் 1951 மற்றும் 1979-80ம் ஆண்டுகளில், பல்வேறு வேளாண்மைப் பண்டங்கள் கால்நடை வளர்ப்பு (பராமரிப்பு) அத்துடன் தொடர்புடைய துணைச் செயல்பாடுகள் வாயிலாக நாட்டு வருமானத்திற்கு 40 சதவீதத்திற்கு அதிகமான வருமானம் கிடைத்தது. ஐம்பதாம் ஆண்டுகளில், உண்மையில் சொல்லப்போனால் நாட்டு உற்பத்தி வெளியீட்டில் பாதிப் பகுதியினை வேளாண்மை மற்றும் வேளாண்மை துறை சார்ந்த பிரிவின் மூலமாகவே உற்பத்தி செய்யப்பட்டது என்பது மற்றும் தொண்ணூறாம் ஆண்டுகளில் இந்த விகிதத்தில் மேலும் வீழ்ச்சி ஏற்பட்டது. 2002-03ம் ஆண்டில் இது 25 சதவீதமாக இருந்தது.

வாழ்க்கைக்கு ஒரு அடிப்படை ஆதாரம்

வாழ்க்கைக்கு பிழைப்பூட்டும் ஆதாரமாக வேளாண்மை திகழ்கின்றது. பத்து நபர்களில் ஒவ்வொரு ஆறாம் நபரும் வேளாண்மையைச் சார்ந்தே வாழுகின்றனர். தொழிலில் வளர்ந்த நாடுகளாகிய இங்கிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்றவைகளில், இந்திய நாட்டுடன் ஒப்பிடும்போது வேளாண்மையைச் சார்ந்த மக்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. 1921-2001 ஆகிய ஆண்டுகளில் வேளாண்மையைச் சார்ந்த உழைப்புச் சக்தியின் அளவானது இருமடங்கிற்கு அதிகமாகிவிட்டது. இத்துறையினை குறைவேலை வாய்ப்பு, மறைமுக வேலையின்மை மற்றும் குறை உற்பத்தி வேலை வாய்ப்பு ஆகிய தீமைகள் பற்றிப் பிடித்து பெரும் தொல்லைக்குட்படுத்தியுள்ளது.

வேலைவாய்ப்பளித்தல்

வேளாண்மை இந்திய மக்களுக்கு பெருமளவில் ஏராளமாக வேலை வாய்ப்பளித்துள்ளது. கிராமப்புறங்களில், வேளாண்மையையும் அதனைச் சார்ந்த தொழில்களையும் 70 சதவீத மக்கள் சார்ந்துள்ளனர். இன்றும் குறிப்பாக, 1995ஆம் ஆண்டில் 97 மில்லியன் மக்கள் எண்ணிக்கையிலிருந்து 235 மில்லியனாக நிலத்தை சார்ந்த தொழிலில் ஈடுபடு (விவசாயிகள் மற்றும் உழவர்கள்) வோரின் எண்ணிக்கை அதிகரித்தது.

தொழில்துறை முன்னேற்றம்

வேளாண்மை தொழிற்சாலைகளுக்குத் தேவையான கச்சாப் பொருள்களை வழங்குகிறது. பருத்தி மற்றும் சணல் தொழிற்சாலைகள், சர்க்கரை ஆலைகள், வனஸ்பதி தோப்பு வகைகள் போன்றவை விவசாயத்தைச் சார்ந்த தொழில்களாகும். மேலும் பல சிறுதொழில்கள் மற்றும் கைத்தறி, பருத்தி ஆலைகளான நெசவாலைகள், நெல் (அரிசி) உமி நீக்கும் ஆலைகள், நார் மற்றும் காதி தொழில்கள் தங்களின் கச்சாப் பொருட்களுக்கும் வேளாண்மையை சார்ந்துள்ளன. மறைமுகமாக, ஏனைய பிற தொழில்களும் விவசாயத்தைச் சார்ந்துள்ளன.

பன்னாட்டு வாணிபம்

பன்னாட்டு வாணிபத்தில் வேளாண்மை மிக முக்கியப் பங்கு வகிக்கின்றது. ஏற்றுமதியில் தேயிலை, எண்ணெய் பிண்ணாக்கு, கனி மற்றும் காய்கறி வகைகள், வாசனைப் பொருட்கள், புகையிலை, பருத்தி, காப்பி, சர்க்கரை, பதப்படாத கம்பளி மற்றும் தாவர எண்ணெய் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். ஏற்றுமதி மூலம் நல்லதொரு பங்கைப் பெற்று தருவதோடு இறக்குமதியின் ஒரு முக்கியப் பிரிவாகவும் இது உள்ளது. இவ்வேளாண் துறையானது நிகர வெளிநாட்டு செலவாணியை ஈட்டித்தந்து, மூலதன ஆக்கத்திற்கும், விவசாயம் சாராத பிற தொழிலுக்கான இறக்குமதிக்கு இது பெரிதும் உதவுகிறது.

முதலீட்டு ஆக்கமும் முதலீடும்

நாட்டின் முதலாக்கத்தில், உற்பத்தி சொத்தானது விவசாய சொத்துக்களாகிய, நிலம், நீர்பாசன வசதிகள், டிராக்டர்கள், உழவுக் கருவிகள், ஏர் அல்லது கலப்பை, ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் சரக்கு பாதுகாப்பு வசதிகள் போன்ற வடிவங்களில் உள்ளது. நாட்டு வருமானத்தில் 25 சதவீதத்தை வேளாண்மை ஈட்டித்தருவதால் இத்துறையே சேமிப்பிற்கும் பொருளாதாரத்தின் முதலாக்கத்திற்கும் அடிப்படை மூலாதாரமாக விளங்குகிறது.

இந்தியாவில், வேளாண்மையே அனைத்து மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்கிறது. பலகோடி கால்நடையை பராமரிக்க வைக்கோல் மற்றும் தீவனங்களை வேளாண்மை அளிக்கிறது.

இந்தியப் பொருளாதாரத்திற்கு வேளாண்மையே முதுகெலும்பாகும். வேளாண்மையின் செழிப்பு நாட்டின் செழிப்பைக் குறிக்கும். நாட்டு பொருளாதாரத்தில் வேளாண்மையின் பங்கினை பல உண்மைகள் குறியீட்டு சுட்டிக்காட்டுகின்றன எடுத்துக்காட்டாக சாலைப் போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்துத் தொழிலானது பெருமளவு விவசாய பொருட்களை ஓரிடத்தினின்று மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதில் அடங்குகிறது. வேளாண் பொருட்கள் வெளிநாட்டு வாணிபத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன. வேளாண் - வளர்ச்சி, வறுமை ஒழிப்பு திட்டத்தில் ஒரு நேரிடை பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

பன்னாட்டு - தரப்படுத்தலில் இடம் பெறுதல்

உலக அளவில், இந்திய வேளாண்துறை சில குறிப்பிட்ட பண்டங்களில் நல்ல தரத்தில் இடம் பெற்றுள்ளன. நிலக்கடலை உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முதல் இடத்தையும், அரிசி உற்பத்தியில் இரண்டாம் இடத்தையும் புகையிலை உற்பத்தியில் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.

நாட்டு பொருளாதார முன்னேற்றத்திற்கு விவசாய முன்னேற்றம் மிக மிக அத்தியாவசியமானது என்று குறிப்பிடும்போதுதான் இந்தியாவின் முக்கியத்துவம் எழுகின்றது.

அறிஞர் ரேக்னர் நர்க்ஸ் என்பவரின் கூற்றுப்படி, உபரி (அதிக) மக்களை வேளாண்மையிலிருந்து பிரித்தெடுத்து அவர்களைப் புதிதாக ஆரம்பிக்கும் தொழிற்சாலைகளிலும் கிராமப் புறங்களில் செய்யப்படும் பொதுப் பணிகளிலும் வேலைக்கமர்த்துதல் வேண்டும். இவ்வாறாக செய்வதின் வாயிலாக விவசாய உற்பத்தித்திறனை ஒருபுறம் அதிகரிப்பதோடு மறுபுறத்தில் சிறிய உபரி உழைப்பாளர்களுக்காக சிறிய புதிய தொழிலமைப்புகளையும் அமைத்துக் கொள்ளலாம். இந்திய வேளாண்மை மிகப் பெரிய மற்றும் முக்கியமான துறை மட்டுமின்றி மிகப்பின்தங்கிய நிலையிலும் உள்ளது. முழுப் பொருளாதாரமும் வளர்ச்சி அடைய விவசாய வளர்ச்சி மிக மிக முக்கியமானதாகும்.

பங்களிப்பின் வகைகள்

ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு வேளாண்மை அளிக்கும் நான்கு வகையான பங்குகளை சைமன் குஸ்நட் அவர்கள் கீழ்க்காணுமாறு விளக்குகிறார்.

 1. பொருட்களின் பங்களிப்பு (உணவு மற்றும் கச்சாப் பொருட்களை கிடைக்கச் செய்தல்)
 2. அங்காடியின் பங்களிப்பு (விவசாயம் சாரா உற்பத்தி துறையில் உற்பத்தியாளர் பொருட்களுக்கும் நுகர்வு பொருட்களுக்கும் அங்காடியை ஏற்படுத்திக் கொடுத்தல்.)
 3. உற்பத்தி காரணிகளில் பங்களிப்பு (வேளாண் சாரா துறைக்கு உழைப்பையும் முதலையும் கிடைக்கச் செய்தல்)
 4. அயல்நாட்டு வாணிபத்திற்கு பங்களிப்பு

வேளாண் சார்ந்த மற்றும் வேளாண் சாரா துறைகளுக்குமிடையே உள்ள தொடர்பு

ஒரு நாடு வளர்ச்சியடையும் பாதையில் செல்லும் போது, வேளாண்மைக்கும் மற்றும் தொழிற்சாலைகளுக்குமிடையே உள்ள ஒன்றோடொன்று - சார்ந்த நிலை கீழ்க்கண்ட தொடர்ச்சிகளால் வலுப்படுத்தப்படுகிறது. அவை (linkage)

 1. உற்பத்தி தொடர்ச்சி
 2. தேவை தொடர்ச்சி
 3. சேமிப்பு மற்றும் முதலீட்டு தொடர்ச்சி

உற்பத்தி தொடர்ச்சி

இத்தொடர்ச்சி, வேளாண்மையும் தொழிலும் உற்பத்தி இடுபொருட்களுக்காக ஒன்றை ஒன்று சார்ந்திருப்பதால் ஏற்படுகிறது. அதாவது, பருத்தி, சணல், கரும்பு போன்ற வேளாண் பொருட்களை வேளாண்மை சார்ந்த தொழில்களுக்கு அளிப்பதன் வாயிலாகவும் இரசாயன உரங்கள், இயந்திரங்கள் மற்றும் மின்சாரம் போன்ற தொழிலின் உற்பத்தியை வேளாண்மைத் துறைக்கு அளிப்பதாலும் கடந்த 50 ஆண்டுகளில் இத்தொடர்ச்சி வலுவாகிறது. மேலும் இது வேளாண்மைத்துறை நவீனமாகுதலையும் பிரதிபலிக்கிறது.

தேவைத் தொடர்ச்சி

இந்த இரண்டு துறைகளுக்கிடையே வெகுவலுவான தேவைத் தொடர்ச்சி உள்ளது. வருமானம் மற்றும் தொழில்மயமாகுதலின் விளைவானது, உணவு மற்றும் விவசாயக் கச்சாப்பொருட்களின் தேவையை பாதிக்கிறது என்பது பொதுவாக உணரப்பட்டுள்ளது.

சேமிப்பு மற்றும் முதலீட்டில் தொடர்ச்சி

கிராம வருமானம், தொழிற்சாலையின் நுகர்வு பொருட்களாகிய ஆடைகள், கால்மிதிகள், சர்க்கரை, சமையல் எண்ணெய், தொலைக்காட்சிப் பெட்டிகள், துணி துவைக்கும் இயந்திரங்கள், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகனங்கள் போன்றவற்றில் ஏற்படுத்தும் பாதிப்புகள் இணையாக குறிப்பிடத்தக்கது. சமீப காலத்தில் நடத்திய ஆய்வு, "கிராமப்புற கடைவீதிகளில் நுகர்வானது நகர்புற அங்காடியைத் தாண்டிவிடுகிறது” என்று முடிவு செய்கிறது.

வேளாண்மை வளர்ச்சிக் கூறுகள்

வேளாண் உற்பத்தியின் பெருக்கமானது இரண்டு விதங்களில் அதிகரிப்பு ஏற்படக்கூடும். விவசாயம் செய்யக்கூடிய நிலப்பரப்பில் அதிகரிப்பு (கிடைமட்ட நீழ்ச்சி / விரிவாக்கம்) 2. வேளாண்மை உற்பத்தி திறனில் அதிகரிப்பு (செங்குத்து நீழ்ச்சி / விரிவாக்கம்)

உற்பத்தித் திறன் இரண்டு கூறுகளை உடையது. அவை நில உற்பத்தித்திறன் மற்றும் உழைப்பின் உற்பத்தித்திறன் என்பனவாகும்.

இந்திய வேளாண்மையின் உற்பத்தித் திறன்

இந்தியா விவசாய நாடாக இருப்பினும் அது பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இப்பிரச்சனையின் நடுமையமாக உற்பத்தி குறைவும் உற்பத்தித் திறன் குறைவும் அமைந்துள்ளது. மற்ற நாடுகளை (இந்தியாவிற்கு ஒப்பாகவுள்ள இயற்கை சூழ்நிலைகளில்) ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்தியாவின் உற்பத்தித்திறன் மிகக் குறைவாகவே உள்ளது. இன்றைய நாட்களில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும் பல நிலைமைகள் அதிகமாக மாற்றமடையவில்லை. எனவே வேளாண்மை பின்தங்கிய நிலையில் இருப்பதற்கான காரணங்களை கீழ்க்காணுமாறு வகைப்படுத்தலாம்.

 1. மக்கட்தொகைப் பற்றிய காரணங்கள்
 2. பொதுவான காரணங்கள்
 3. நிறுவனம் சார்ந்த காரணங்கள்
 4. தொழில்நுட்பக் காரணங்கள்

மக்கட்தொகைப் பற்றிய காரணங்கள்

வேளாண்மையின் குறைந்த விளைச்சலுக்கான மிக முக்கிய காரணம், நிலத்தின் மீது மக்கள் தொகையினால் ஏற்படுகிற அளவுக்கதிகமான நெருக்கம் (அ) பாரச்சுமை அதிகரிக்கும், கூடுதல் உழைப்பாற்றலை தொழில்துறை தன்னிடமாக ஈர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் தொழில்துறை வளர்ச்சி வீதமானது தேவையை விட மிகக் குறைவாக உள்ளது. இதன் விளைவாக அதிகரிக்கும் மக்கள்தொகை பிழைப்பிற்காக நிலத்தையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இதனால் பல தீமைகள் ஏற்படுகின்றன. நில உடைமைகள் சிறு துண்டுகளாக்கப்பட்டு சிதறிப் போகின்றன. முன்னேற்றத்திற்கான பயிற்சி மற்றும் பணிகளின் அரிப்பு தேவைக்கு குறைவாகவே இருக்கின்றது. இதனால் குறைந்த மற்றும் மறைமுக வேலையின்மை ஏற்படுகின்றது. இத்தகைய தீமைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து வேளாண்மையின் உற்பத்தி திறனை குறைக்கின்றது.

பொதுவான காரணங்கள்

வேளாண்மையில் அதிகப்படியான தொழிலாளர்கள்

மிகக் குறைந்த உற்பத்தித் திறனுக்கான மிக முக்கிய காரணம் மக்கள் அதிக எண்ணிக்கையில் வேளாண் தொழிலில் குவிதல் ஆகும். மக்கள்தொகை அதிகரிக்கும்போது, நிலத்தின் மீதான அழுத்தமும் அதிகரிக்கிறது. இந்த இயற்கையான அதிகரிப்பை தொழில் துறையால் ஈர்த்துக் கொள்ள இயலவில்லை.

ஊக்கமற்ற கிராமப்புற சூழ்நிலை

இந்த உழவர்கள் பொதுவாக ஏழைகளாகவும், அறியாமை நிறைந்தவர்களாகவும், மூடநம்பிக்கை கொண்டவர்களாகவும் பழமைவாதிகளாகவும், கல்வியறிவற்றவர்களாகவும், பழமையான பழக்கவழக்கங்களாலும், சாதிப்பாகுபாடு முறைகளாலும், கூட்டுக் குடும்ப பிணைப்புகளால் கட்டப்பட்டவர்களாகவும் இருந்து வருகின்றனர். பழமையில் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கைகள் மிக பெரிய சாபமாக அமைந்து, அவர்கள் தங்களது பழங்கால உழவு முறைகளிலேயே மனநிறைவு அடையும்படியாக கட்டிவைத்துள்ளது. புதிய தொழில்நுட்ப உற்பத்தி முறைகள் வேகமாக கடைப்பிடிக்கும் ஒரு சில உழவர்கள் தவிர்த்து பெரும்பாலான அதிகபட்ச உழவர்கள் பொருளாதார முன்னேற்றங்களைப் பற்றி அறிந்துக் கொள்ளவும், பின்பற்றவும் ஊக்கமற்று காணப்படுகின்றனர்.

வேளாண் துறை சார்பற்ற பணிகள் குறைவு

நிதி வசதி மற்றும் அங்காடி வசதிகள் போன்ற வேளாண்மை சார்பற்ற பணிகள் போதிய அளவில் கிடைக்கப் பெறாமை குறைவான உற்பத்தி திறனுக்கு மற்றுமொரு காரணமாகும். இவ்வசதிகள் இந்தியாவில் மிக குறைவாக உள்ளது. அங்காடி வசதியானது அதிக குறைபாடுகள் நிறைந்ததாகவும், அதிக செலவுகள் கொண்டதாகவும் காணப்படுகிறது. நவீன பண்டகசாலைகள் நம் நாட்டு பாணியிலேயே அமைக்கப்பட்டு, அவைகள் போதுமானதாக இல்லை. தானியங்கள் சேமித்து வைக்கும் முறையானது குறைகள் நிறைந்ததாகவும், அதிக செலவுகள் கொண்டதாகவும் காணப்படுகிறது. உழவர்களுக்கான கடன்வசதிகள் இன்னும் வளர்ச்சியடையாமலே உள்ளது. உழவர்கள் முழுக்க முழுக்க நிறுவனம் சாராத தனியார் கடன் வழங்குவோர்களையே அவர்களின் அன்றாடத் தேவைகளுக்கு நம்பியுள்ளனர்.

நிறுவன அமைப்பு காரணங்கள்

நில உடைமையின் அளவு

இந்தியாவில் சராசரி நில உடமையின் அளவானது மிக குறைவான அளவில் உள்ளது. 80 சதவீத அளவு நிலவுடைமை 2 ஏக்கருக்குக் குறைவாகவே உள்ளது. இத்துடன் நிலங்கள் சிறு, சிறு துண்டுகளாக பிரிக்கப்பட்டு அவை பரவலாக கிடக்கின்றன. நாட்டின் ஒரு சில பகுதிகளில் நிலத்தின் அளவு வெகு சிறியதாக குறைக்கப்பட்டதால் (அ) துண்டாடப்பட்டதால் சாதாரண கலப்பை (அ) ஏர் கூட அங்கு பயன்படுத்த முடியாமல் உள்ளது. மேலும் சராசரி நில உடைமைகள் மிகச் சிறியதாக உள்ள காரணத்தால் அறிவியல் ரீதியான சாகுபடி முறைகளையோ மேம்பட்ட கருவிகளையோ தரமான விதைகளையோ பயன்படுத்த முடியாத நிலையுள்ளது. இச்சிறிய அளவான நிலங்கள் பலவித பெருமளவு நட்டத்தை விளைவிக்கிறது.

காலம், உழைப்பு, கால்நடை சக்தி, நீர்பாசன வசதிகளை சரியான முறையில் பயன்படுத்துவதற்கான தடைகள், உழவர்களுக்கிடையே சண்டை சச்சரவுகள், நீதிமன்ற வழக்குகள் மற்றும் சரியான வேலி அமைப்புகள் இல்லாமையால் பயிர் வகைகள் வீணாகுதல் போன்ற இடர்பாடுகள் ஏற்படுகின்றன.

குத்தகை அமைப்பு முறையின் குறைபாடுகள்

இக்குத்தகைமுறைகள் தமக்குள்ளேயே தேக்கநிலை ஏற்படுத்தக்கூடிய தன்மை வாய்ந்ததாக உள்ளது. இதன் முக்கிய இயல்பு இடை தரகர்களின் தலையீடு, நில உடைமையாளர்களின் சுரண்டல் போக்கு, துண்டுகள் ஆக்கப்பட்ட நிலங்கள், தொடர்ந்து அதிகரிக்கும் மக்கள் தொகையின் அழுத்தம் ஆகியனவாகும்.

தொழில்நுட்ப காரணங்கள்

ஏழ்மையான இடுபொருள்களும், முறைகளும்

சாகுபடி முறைகள் பழமையானதாகவும், திறமையற்றதாகவும் உள்ளன. மரபுவழி பயிரிடும் முறைகளை பின்பற்றப்படுகின்றன. இதனால் சுகசெலவும், குறைந்த உற்பத்தித் திறனும் ஏற்படுகிறது. பல்லாண்டு காலமாக உற்பத்தி முறையில் எந்த மேம்பாட்டு மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. வேளாண்மையின் முதலீடுகளாகிய இயற்கை உரங்கள் மற்றும் இரசாயன உரங்கள், வீரிய விதைகள், நீர்பாசனவசதிகள், கருவிகள் மற்றும் பிற சொத்துக்களானது மிக குறைவான நிலையில் உள்ளது.

பற்றாக்குறையான பாசன வசதிகள்

இந்திய வேளாண்மையின் நலிவிற்கு முக்கிய காரணம் நாடு முழுவதிலும் உள்ள உழவர் பெரும் மக்கள் மழையையே நம்பி இருக்கின்றனர். ஆங்காங்கே ஒரு சிலர் மட்டும் செயற்கை நீர் பாசன வசதிகளை பயன்படுத்தக்கூடும்.

உழவர்கள் கடனில் மூழ்கிய நிலை

“இந்திய உழவர்கள் கடனில் பிறந்து, கடனில் வாழ்ந்து, கடனில் இறந்து, கடன் விட்டுப்போக பிறப்பெடுத்துள்ளான்” என்று கூறப்படுகிறது. அவர்களது தீராத கடனுக்கான காரணங்கள் தலைமுறை தலைமுறையான கடன்கள், நீதிமன்ற வழக்குகளால் ஏற்படும் கடன்கள் வருமானத்தை ஈடுசெய்ய ஏற்படும் கடன்கள் மற்றும் வீணான சமூக செலவுகள் ஆகும்.

போதுமான ஆராய்ச்சியின்மை

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முறைகளின் நன்மைகள் பற்றிய போதிய விளக்கங்கள் இன்னும் அநேக உழவர்களை சென்றடையவில்லை. அவைகளை உழவர்கள் விவசாயத்தில் கையாளவும் இல்லை. விரிவாக்கம் ஒரு சிலருக்கு மட்டுமே என குறிக்கப்பட்டது. ஆகவே இக்கிராமப்புறங்களில் நவீன உழவுமுறைகள் வேரிட்டு வளர வேண்டும்.

குறை நீக்கும் வழிமுறைகள் (Remedial Measure)

மேலே விளக்கப்பட்ட வேளாண்மையின் குறைந்த உற்பத்தி திறனுக்கான காரணங்கள் கீழ்க்காணும் வழிமுறைகளை சுட்டிக்காட்டுகிறது. இந்திய வேளாண்மையின் பல்வேறு குறைபாடுகளை கீழ்கண்டவாறு தீர்வு காணாலாம்

 1. நாட்டளவிலான கூட்டுறவு கூட்டு விவசாயமுறை துவங்கப்பட வேண்டும்.
 2. மக்கட்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துதல்
 3. தரமான உரவகைகள் கிடைக்கச் செய்தல்
 4. உயர்தர விதைகளை பயன்படுத்துதல்
 5. பாசன வசதிகளுக்கு மாற்று முறைகள் அமைத்தல்
 6. விவசாய கடன் வசதியை அதிகரித்தல்
 7. புறம்போக்கு மற்றும் மேய்ச்சல் நிலங்களை மேம்படையச் செய்தல்
 8. நில உடைமைகளை ஒருங்கிணைத்தல்
 9. புதிய கருவிகளை பயன்படுத்துதல்
 10. மண் பாதுகாப்பு மற்றும் தீவிரமான சாகுபடி
 11. அங்காடி அமைப்பில் முன்னேற்றம்
 12. விவசாய ஆராய்ச்சிக்கும், பயிர் பாதுகாப்பிற்கும் ஊக்கம் அளித்தல்.

இந்தியாவில் இத்தகையை முன்னேற்ற முறைகளை நம்முடைய திறமைக்கு தக்கவாறு செய்ய வேண்டும். கிராம மக்களின் எதிர்காலம், உணவுப் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் மற்றும் நம் நாட்டின் தொழில் வளர்ச்சி விவசாயத்தையே சார்ந்துள்ளன.

வேளாண்மைப் பயிர்களும், பயிர் வகைகளும்

பொருளாதார திட்டமிடல், 1950-51ல் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பும், 1965 பசுமைப்புரட்சிக்குப் பின்பும், சாகுபடிக்குக் கீழ் உள்ள நிலத்தின் அளவு மற்றும் ஒரு ஹெக்டேர் நிலத்தின் சராசரி உற்பத்தியும் தொடர்ந்து அதிகரித்தது. அதன் விளைவாக, அனைத்து வேளாண்மைப் பயிற்சிகளின் உற்பத்தியும் ஏறுமுகமாக இருக்கிறது.

இந்தியாவின் முதன்மையான உணவுப் பயிர்கள் - அரிசி, கோதுமை, சோளம், தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் முதலியனவாகும். கரும்பு, சணல், பருத்தி, தேயிலை, காப்பி, நிலக்கடலை மற்றும் மற்ற எண்ணெய் வித்துகள் முதலியன முக்கிய பணப்பயிர்களாகும். பசுமைப் புரட்சிக்கு முந்தைய காலத்தில், அதாவது 1949-65 வரை, உணவு தானியங்களின் உற்பத்தியானது 55 மில்லியன் டன்னிலிருந்து 89 மில்லியன் டன்னாக உயர்ந்தது. இது ஆண்டு வளர்ச்சி வீதத்தில் 3.2% ஆகும். பசுமைப் புரட்சிக்கு பிந்தைய காலத்தில், அதாவது 1965-2001 வரை உணவு தானியங்களின் உற்பத்தி 89 மில்லியன் டன்னிலிருந்து 195.9 மில்லியன் டன்னாக உயர்ந்தது. ஆனால், ஆண்டு வளர்ச்சி வீதத்தில் இது 2.2% மட்டுமே ஆகும்.

இந்தியாவில் பயிர் வகைகள் (Cropping Pattern in India)

ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில், பல்வேறு வகைப் பயிர்களின் கீழ் உள்ள நிலத்தின் அளவு பயிரிடுதலின் பாங்கு எனப்படும். வேறு வகையில் கூறினால், ஒரு குறிப்பிட்ட காலத்தில் சாகுபடியின் கீழ் உள்ள பல்வேறு வகையான பயிர்களின் விகிதம் பயிரிடுதலின் பாங்கு எனப்படும். பயிரிடுதலின் பாங்கில் ஏற்படும் மாற்றம் பல்வேறு பயிர்கள் பயிரிடப்படும் நிலப்பரப்பின் வீதத்தில் ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கும்.

பயிரிடுதலின் வகையை பாதிக்கும் காரணிகள்

இயற்கை காரணிகள்

நிலத்தின் தன்மை, மண்வளம், தட்பவெப்ப நிலை, மழையளவு மற்றும் சராசரி வெப்பநிலை ஆகியவற்றை உள்ளடக்கியதே இயற்கை காரணிகள் ஆகும். வேளாண்மையில் மனிதனின் பங்கைவிட இயற்கையின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதால் மேற்கண்டவை பயிர் வகைகளை பாதிக்கும் முக்கிய காரணிகள் ஆகும்.

நில உடைமையின் அளவு

நில உடைமையின் அளவு சிறியதாக இருந்தால் உழவர்கள் உணவு தானியங்கள் பயிரிடுவதை விரும்புவர். நிலத்தின் அளவு குறிப்பிடத்தக்க அளவு அதிகமாக இருந்தால், உழவர்கள் பணப்பயிர்களையே பயிரிடுவர்.

வேளாண் பண்டங்களின் விலை

உழவர்கள் தங்களுக்கு அதிக லாபம் தரும் பயிர்களையே பயிரிட விரும்புவர்.

வேளாண் உள்ளீடுகளின் கிடைப்பளவு

உழவர்கள் அதிக தரம் வாய்ந்த உள்ளீடுகளைப் (இடு பொருள்கள்) பெற்றிருந்தால் பணப்பயிர்களையே அவர்கள் பயிரிடுவர். இதற்கு, உரங்கள், இரசாயனப் பொருட்கள், உயர் விளைச்சலைத் தரும் விதைகள் மற்றும் நீர்ப்பாசன வசதிகள் ஆகியன தேவைப்படுகின்றன.

சமூக காரணிகள்

சமூக பழக்கவழக்கங்கள், புதிய தொழில்நுட்ப முன்னேற்றத்தில் உழவர்களின் மனப்பான்மை முதலியன பயிரிடுதலின் வகைகளை தீர்மானிக்கும். புதிய தொழில்நுட்ப முன்னேற்றதை உழவர்கள் ஏற்றுக்கொண்டால், பணப்பயிர்களை பயிரிடுவதற்கு அவர்கள் முன்வருவர்.

அரசின் கொள்கை

சில குறிப்பிட்ட பயிர்களுக்கு அரசு வழங்கும் உதவித் தொகைகள் கூட பயிர் வகைகளைத் தீர்மானிக்கும். பயிர் வகைகள் பற்றிய அறிவு பயிர் வகைகள் மற்றும் பயிரிடுதலின் பாங்கு பற்றிய தெளிவான அறிவு உழவர்களுக்கு இருக்குமானால் அவர்கள் தங்கள் பயிர் வகைகள் மாற்றிட விழைவர்.

பயிர் காப்புத் திட்டம்

பயிர்ப்பாதுகாப்புத் திட்டம் நாட்டின் பயிர் வகைகளைப் பாதுகாக்க உதவுகிறது. இடர்பாடுகள் உடைய பயிர்களைப் பயிரிட இப்பயிர் பாதுகாப்புத் திட்டம் உதவி செய்கிறது.

அரசின் முயற்சிகள்

கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் பயிர் வகைகளை பாதுகாக்க அரசு உதவுகிறது.

 1. உயிர் விளைச்சல் தரும் விதைகளை அரசின் முகவர்கள் மூலம் பகிர்ந்தளித்தல்,
 2. இரசாயன உரங்கள் சலுகை விலையில் கிடைக்கும்படி செய்தல்,
 3. வேளாண் பொருட்களை இருப்பு வைக்கவும், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்லவும். போதுமான வசதிகளை வழங்குதல்,
 4. வேளாண் பொருட்களுக்கான அங்காடி அமைப்பை திறம்பட செயல்படச் செய்தல் மூலம் உழவர்களுக்கு தங்கள் பண்டங்களுக்கு நல்ல விலை கிடைக்கச் செய்தல்.

நில உடைமை

நில உடைமையே வேளாண் உற்பத்தியின் அளவு, தரம், அமைப்பு ஆகியவற்றைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாகும். நில உடைமை என்பது ஒரு உழவனுக்கு சொந்தமான மற்றும் பயிரிடும் நிலத்தின் அளவைக் குறிக்கும். இதை இரண்டு அடிப்படையில் கூறலாம்.

 1. உரிமையின் அடிப்படையில், நில உடைமை என்பது, ஒரு உழவனுக்கு சொந்தமான நிலத்தின் அளவு,
 2. பயிரிடுதல் (சாகுபடி செய்தல்) அடிப்படையில், நில உடைமை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் சாகுபடி செய்யப்படும் நிலத்தின் அளவைக் குறிக்கும்.

நிலச் சீர்திருத்தங்கள்

நிலச்சீர்திருத்தம் என்பது நில உரிமையாளர், குத்தகைதாரர் மற்றும் நில மேலாண்மை ஆகியவற்றில் ஏற்படும் கொள்கை மாற்றத்தைக் குறிக்கும்.

இந்தியாவில் நில சீர்த்திருத்தத்தின் நோக்கங்கள்

இந்தியாவில், நிலச் சீர்திருத்த திட்டங்கள் ஊரக முன்னேற்றத்திற்கு மிக முக்கியமான கொள்கையாகும். இதன் முக்கிய நோக்கங்களில் பின்வருமாறு:

 1. சமஉடைமை சமுதாய அமைப்பை அடைய வேளாண் அமைப்பை மாற்றி அமைத்தல்.
 2. நிலஉடைமையில் சுரண்டுதலைத் தவிர்த்தல்.
 3. உழவனுக்கே நிலம் சொந்தம் என்ற கொள்கையை உறுதிப்படுத்துதல்.
 4. அடிப்படை நில அளவை (Land base) விரிவுபடுத்துதல் மூலம் கிராமப்புற ஏழை விவசாயிகளின் சமூக - பொருளாதார நிலையை உயர்த்துதல்.
 5. வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்தல்.
 6. நில அமைப்பை கிராமப்புற ஏழைகளுக்கு ஏதுவாகச் செய்தல்.
 7. உள்ளூர் நிறுவனங்களின் மேம்பாட்டை சமப்படுத்துதல்.

இந்தியாவில் நிலசீர்திருத்த முறைகள்

இந்தியாவில், நிலச்சீர்திருத்தம் கீழ்கண்ட மூன்று வழிகளில் கையாளப்படுகிறது.

 1. அரசு சலுகைகளான, கூட்டுறவு பண்ணை மற்றும் நிலங்களை ஒருங்கிணைத்தல் மூலம் தானாக முன்வந்து ஏற்றுக் கொள்ளுதல்.
 2. நிலங்களை ஒருங்கிணைத்தல் போல சட்ட திருத்தங்கள் மூலமும், தாமே முன் வந்தும் நிலச் சீர்திருத்த முறைகளை ஏற்றுக் கொள்ளுதல்.
 3. இடைத் தரகர்களை ஒழித்தல், குத்தகைதாரர்கள் சீர்திருத்தம், நில உச்ச வரம்பு ஆகிய பல வகையான சட்டங்கள் மூலம் கட்டாயப்படுத்துதல்.

வேளாண் அங்காடி

வேளாண் பொருட்களை பரிமாற்றம் செய்யப் பயன்படும் பொருளாதார செயல்பாட்டிற்கு வேளாண் அங்காடி என்று பொருள். இது வேளாண் பொருட்களின் மதிப்பை பணத்தால் தீர்மானிக்கிறது. மேலும் இது பண்டங்களை கடைசி நுகர்வோருக்கு வழங்குகிறது.

வேளாண் அங்காடியின் முக்கியத்துவம்

அங்காடியின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியே வேளாண் அங்காடியாகும். இது வேளாண் பொருட்கள் தொடர்பானதாகும். நாட்டின் பெரும்பாலான பொருளியல் நடவடிக்கைகளுக்கு இது ஒரு அடிப்படையாகும். இது விற்பனைக்குரிய உபரியை விற்பனைக்காக அங்காடிக்கு கொண்டு வருகிறது. உழவர்கள் தங்கள் உற்பத்தியின் ஒரு பகுதியை சொந்த நுகர்வுக்காகவும் மற்றும் கால்நடைகளுக்காகவும் வைத்துக் கொண்டு எஞ்சிய பகுதியை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். விற்பனைக்குரிய உபரியில் ஏற்படும் அதிகரிப்பு பொருளாதார முன்னேற்றத்தில் உயர்வினை ஏற்படுத்தும்.

வேளாண் அங்காடியின் முக்கியத்துவம் பின்வருமாறு

1. தொழிற்சாலைகளுக்குத் தேவையான கச்சாப்பொருட்களை வழங்குகிறது.

2. மக்களுக்கு தேவையான உணவு தானியங்களையும் மற்றும் கால்நடைகளுக்குத் தேவையான தீனியையும் வழங்குகிறது.

3. நாட்டின் உள்நாட்டு அங்காடி விரிவடைவதற்குத் தேவையான அடிப்படை அமைப்பை வழங்குகிறது. உள்நாட்டு தேவையைவிட விற்பனைக்குரிய உபரி அதிகமாக இருக்கும்பொழுது, பன்னாட்டு அங்காடி விரிவடைவதற்கும், கனிசமான அளவு அந்நியச் செலாவணியை ஈட்டவும் உதவுகிறது.

அண்மை காலங்களில், உழவர்கள் தங்கள் உற்பத்திப் பண்டங்களை கிராமப்புற அங்காடிகள், காட்சிகள், மண்டிகள், கூட்டுறவு சங்கங்கள் இவற்றில் விற்பனை செய்கின்றனர். மேலும் அரசு நேரடியாக உழவர்களிடமிருந்து வேளாண் பண்டங்களை வாங்குகிறது.

விற்பனைக்குரிய உபரி

பண்ணைத் தேவைகளுக்கும், சொந்த நுகர்வுக்கும் போக எஞ்சியிருக்கும் உபரியே விற்பனைக்குரிய உபரி எனப்படும். இது விற்பனைக்கு எஞ்சியிருக்கும் பகுதியை குறிக்கும். விற்பனைக்குரிய உபரி என்பது திணிக்கப்பட்டதோ, செயற்கையானதோ அல்ல, நுகர்வு போக தானாக எஞ்சியது. இது வேளாண்மை முன்னேற்றத்திற்கு மட்டுமல்லாது, நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கிறது. இது வேளாண்மை துறையில் உற்பத்தி செய்யப்பட்ட உண்மை உபரியாகும். இதை கீழ்க்கண்டவாறு கணக்கிடலாம். (பழைய இருப்பு + நடப்பு உற்பத்தி) - நுகர்வு + சேதாரம் + அடுத்த பருவ காலத்திற்கான விதைகள்) விற்பனைக்குரிய உபரி என்பது வேளாண்மையின் மொத்த உபரியாகும். விற்பனை செய்யப்பட்ட உபரி என்பது வேளாண்மையின் நிகர உபரியாகும்.

விற்பனைக்குரிய உபரியைத் தீர்மானிக்கும் காரணிகள்

விற்பனைக்குரிய உபரியைத் தீர்மானிக்கும் பலவகையான காரணிகளாவன :

 1. நில உடைமையில் அளவு,
 2. பயிர் உற்பத்தி,
 3. குடும்ப அளவு,
 4. பிற துறைகளிலிருந்து கிடைக்கும் வருமானம்.

இது தவிர, விற்பனைக்குரிய உபரியானது, திறமையான அங்காடி அமைப்பைப் பொருத்தும் அமையும்.

விற்பனைக்குரிய உபரியின் முக்கியத்துவம்

விற்பனைக்குரிய உபரியை அதிகரித்தல் என்பது உண்மை உபரி ஆகும். இது உண்மை வருமானம், உண்மை சேமிப்பு, உண்மை மூலதன திரட்சி, உண்மை முதலீடு ஆகியவற்றை தீர்மானிக்கும். மேலும் இது பணவீக்கமற்ற பொருளாதார நலனை உயர்த்தும். உண்மை விற்பனைக்குரிய உபரியில் ஏற்படும் சரிவு, குறைந்த வளர்ச்சியுடைய நாடுகளில், உணவுப் பண்டங்களின் விலையை மட்டுமல்லாது, கூலிப் பண்டங்களின் விலையையும் உயர்த்தும். மேலும் உழைப்பாளர்களின் உண்மை வாழ்க்கைத்தரம் குறையும்.

இந்தியாவின் உணவுப் பிரச்சனை

உணவு, உடை, இருப்பிடம் முதலியன ஒரு மனிதனின் அடிப்படைத் தேவையாகும். இவற்றுள் உணவு தான் முதல் முக்கியத்துவம் வாய்ந்தது. போதுமான உணவு இல்லாமல் ஒருவரும் வாழ முடியாது. நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் தேவையான உணவை வழங்குவது அரசின் முக்கிய கடமையாகும். தன் நாட்டு மக்களுக்கு போதுமான மற்றும் சத்தான உணவை வழங்கத் தவறிவிட்டால் அது பொருளாதார சமூக மற்றும் அரசியல் ரீதியாக தோல்வியடைந்ததாகும். எனவே, நாட்டு மக்கள் அனைவருக்கும் தேவையான உணவை வழங்க வேண்டும். உணவுப் பொருள் உற்பத்தி, தேவையை சமாளிக்கும் அளவு போதுமானதாக இருக்க வேண்டும். தேவையை விட உற்பத்தி குறைவாக இருப்பின், அரசு உணவுப் பொருள்களை இறக்குமதி செய்ய வேண்டும். இது வாணிப சமநிலையிலும், வாணிப செலுத்து சமநிலையிலும் சிக்கல்களை உருவாக்கும்.

இந்தியாவில், உணவுப் பிரச்சனை ஒரு தீராத பிரச்சனையாகும். 1937-ல் பர்மா இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டதும் 1947ல் ஏற்பட்ட வேலையின்மையும் இப்பிரச்சனையை மேலும் சிக்கலாக்கியது.

இந்தியாவில் உணவுப் பிரச்சனையின் தன்மை

உலகில், மக்கள்தொகை அளவில் இந்தியா இரண்டாவது இடத்தை வகிக்கிறது. அதனால், உணவுப் பொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில், உணவு உற்பத்தி பற்றிய பிரச்சனை கீழ்க்கண்ட நான்கு கூறுகளைக் கொண்டுள்ளது.

அளவு சார்ந்தவை

இம்முறையில் உணவுப் பிரச்சனையானது, உணவு தானியங்களின் தேவை, அளிப்பை சார்ந்ததாகும். நீண்ட காலமாக, உணவு தானியங்களின் உற்பத்தியானது, தேவையை விட குறைவாகும். கடந்த சில ஆண்டுகளாக, உணவு தானியங்களின் உள்நாட்டு உற்பத்தி கனிசமான அளவு உயர்ந்திருந்தாலும், நாம் அதிக அளவிலேயே உணவு தானியங்களை இறக்குமதி செய்ய வேண்டி உள்ளது.

தரம் சார்ந்தவை

இம்முறையில், உணவுப் பிரச்சனையானது, உணவிலுள்ள சத்தின் தன்மையை (கலோரிகளை) (nutritive element) அடிப்படையாகக் கொண்டது. வைட்டமின்கள், மினரல்கள், கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை சரிவிகித உணவில் அடங்கியுள்ள மூலக்கூறுகள் ஆகும். ஆனால் இம்மூலக்கூறுகள் போதுமான அளவில் பெரும்பாலான இந்திய மக்களுக்கு கிடைப்பதில்லை. வல்லுநர்களின் கருத்துப்படி ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 3,000 கலோரிகள் தேவைப்படுகின்றது. ஆனால், சராசரியாக இந்திய மக்களுக்கு 2,100 கலோரிகளே கிடைக்கின்றது. இந்தியாவில் நிலவும் வறுமையே இதற்கு முக்கிய காரணமாகும்.

பகிர்வு சார்ந்தவை

இம்முறையில், உணவுப் பிரச்சனையானது, வேளாண் பொருட்களின் அங்காடி அமைப்பை சார்ந்ததாகும். பகிர்விலுள்ள குறைபாடுகள் காரணமாக, பெருவாரியான மக்களுக்கு, போதுமான அளவு உணவு தானியங்கள் குறிப்பிட்ட நேரத்தில், நியாய விலையில் கிடைப்பதில்லை. சமூக விரோத சக்திகள், அங்காடியில் உணவுப் பண்டங்களுக்கு செயற்கை பற்றாக்குறையை ஏற்படுத்தி, நியாயமற்ற விலைக்கு விற்கின்றனர்.

பொருளாதாரம் சார்ந்தவை

இம்முறையில் உணவுப் பிரச்சனை என்பது மக்களின் வாங்கும் சக்தியைச் சார்ந்ததாகும். இந்தியாவின் நாட்டு வருமானமும், தலா வருமானமும் குறைவாக உள்ளது. இதன் காரணமாக, இந்திய மக்களால், சத்தான உணவு தானியங்களைப் போதுமான அளவில், தகுந்த விலை கொடுத்து வாங்க முடிவதில்லை.

உணவுப் பிரச்சனைக்கான காரணங்கள்

இந்தியாவில், உணவுப் பிரச்சனைக்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு :

 • வேகமான மக்கள்தொகை வளர்ச்சி,
 • குறைவான வேளாண் உற்பத்தி திறன்,
 • இயற்கைச் சீற்றங்கள்,
 • பணப் பயிர்களின் வளர்ச்சி,
 • நுகர்வுத் தன்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்,
 • உணவிற்கான வருமானத் தேவையில் ஏற்பட்டுள்ள உயர்வு,
 • பொருளாதார முன்னேற்றமும், நகர்மயமாதலும்,
 • பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தை.

இந்திய அரசின் உணவுக் கொள்கை

நாட்டு விடுதலைக்குப் பிறகு, உணவு தானிய பற்றாக்குறை பிரச்சனையை அரசு தீவிரமாக ஆராய்ந்தது இப்பிரச்சனையை தீர்க்க அரசு பல விதிமுறைகளை மேற்கொண்டது அம்முறைகள் பின்வருமாறு :

உணவு தானிய உற்பத்தியை அதிகரித்தல்

எல்லா ஐந்தாண்டுத் திட்டங்களிலும் வேளாண்மை முன்னேற்றத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்க, ஆழ உழுதல், பல பயிர் சாகுபடி திட்டம், உயர் விளைச்சல் தரும் விதைகள், உரங்களை அதிக அளவில் பயன்படுத்துதல் முதலிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இம்முயற்சிகளின் விளைவாக உணவு தானிய உற்பத்தியானது 1950-51ல் 50.8 மில்லியன் டன்னாக இருந்தது. 1997-98ல் 192.4 மில்லியன் டன்னாக உயர்ந்தது.

உணவு தானியங்கள் இறக்குமதி

உணவுப் பற்றாக்குறையை தீர்க்க அவ்வப்பொழுது அரசு உணவு தானியங்களை இறக்குமதி செய்தது. 1951ல் 48 லட்சம் டன் உணவு தானியங்கள் இறக்குமதி செய்யப்பட்டது. 1966ல் இது 103 லட்சம் டன்னாக உயர்ந்தது. 1991, 1992, 1995, 1996 ஆகிய நான்கு வருடங்களில் உணவு தானியங்கள் எதுவும் இறக்குமதி செய்யப்படவில்லை.

உணவு தானியங்களை கொள்முதல் செய்தல்

அரசு, உணவு தானியங்களை கொள்முதல் செய்யும் முறையை நடைமுறைப்படுத்தியது. இதன்படி, அரசு ஒவ்வொரு வருடமும் அங்காடியிலிருந்து, உணவு தானியங்களை கொள்முதல் செய்தது. இந்நோக்கத்திற்காக, ஒவ்வொரு வருடமும் முக்கியமான அனைத்து உணவு தானியங்களுக்கும் கொள்முதல் விலை அல்லது குறைந்த அளவு ஆதரவு விலையை அரசு அறிவித்தது. மேலும், இவ்விலையிலேயே அரசு உணவு தானியங்களை வாங்கியது. இது தரகர்கள் மற்றும் வணிகர்களின் முறைகேடான செயல்களிலிருந்து உழவர்களை காப்பாற்ற உதவுகிறது.

உணவுப் பண்டங்களின் பொதுப் பங்கீட்டு முறை

உணவுப் பொருட்களை கட்டுப்படுத்தப்பட்ட விலையில் நியாயமான பங்கீடு கிடைக்க அரசு பொதுப் பங்கீட்டு முறையை செயல்படுத்தியது. இம்முறையின்படி நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டன. இத்தகைய கடைகள் ஒவ்வொன்றும் 2000 மக்களுக்கு பணியாற்றும்படி அமைக்கப்பட்டன. 1998 மார்ச் 31 வரை 4.50 லட்சம் நியாய விலைக் கடைகள் நாடெங்கும் உள்ளன. இக்கடைகள் அரிசி, கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை குறிப்பிட்ட அளவில் கட்டுப்படுத்தப்பட்ட விலையில் மக்களுக்கு வழங்குகின்றன.

தாங்கியிருப்பு திட்டம் (Buffer Stock Scheme)

 • ஆண்டு முழுவதும் முக்கியமான உணவு தானியங்களின் அளிப்பு (வழங்கல்) சீராக இருப்பதை உறுதி செய்ய அரசு ஒரு திட்டத்தை தொடங்கியது.
 • எப்பொழுதெல்லாம் அவற்றின் விலை உயர்கிறதோ அப்பொழுதெல்லாம் விலையை நிலைநிறுத்துவதற்காக அரசு உணவு தானியங்களை தாங்கியிருப்பிலிருந்து வெளியிடுகிறது. இந்திய அரசின் உணவுக் கொள்கையின்படி, தாங்கியிருப்பு திட்டத்தின் நடவடிக்கைகள் வழக்கமான ஒன்றாக இந்நாட்களில் காணப்படுகிறது.

குறிப்பிடத்தக்க நிறுவனங்கள் ஏற்படுத்துதல்

வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை உயர்த்துவதற்கும், முறையான அளிப்பை உறுதிப்படுத்துவதற்கும், உணவு தானியங்களின் நியாயமான பங்கீட்டிற்கும் அரசு, குறிப்பிடத்தக்க பல நிறுவனங்களை ஏற்படுத்தியது. தேசிய விதை கழகம், வேளாண் தொழிற்கழகம், வேளாண் விலை குழு, இந்திய உணவு கழகம், இந்திய உர கழகம் முதலியன சில குறிப்பிடத்தக்க நிறுவனங்களாகும்.

வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றம்

வேளாண்மைத் துறையில் ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றத்தை ஊக்கப்படுத்த அரசு பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள பல வேளாண்மை பல்கலைக்கழகங்களும், இந்திய வேளாண்மை ஆராய்ச்சி வாரியம் (ICAR) ஆகியவற்றையும் அரசு ஏற்படுத்தியது.

பொதுப் பங்கீட்டுத் துறை (PDS)

அவசியமான உணவுப் பண்டங்களை சீரான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் மக்களுக்கு பகிர்வு செய்வதே பொதுப் பங்கீட்டு முறை எனப்படும். இம்முறையின்படி அவசியமான நுகர்வுப் பொருட்களை குறிப்பிட்ட விலையில் அரசின் முகவர்கள் மூலம் மக்களுக்கு வழங்கப்படுகிறது.

பொதுப் பங்கீட்டு முறையின் முக்கிய நோக்கங்கள் நியாய விலைக் கடைகள் (Fair Price Shops (FPS) or Ration Shops)

நாடு முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் அடிப்படைத் தேவைப் பண்டங்களின் அளிப்பை பொதுப் பங்கீட்டு முறை உறுதிப்படுத்துகிறது. தற்போது இந்தியாவில் 4.50 லட்சம் நியாய விலைக்கடைகள் உள்ளன. அவற்றுள் 3.60 லட்சம் கடைகள் கிராமப் புறத்தில் செயல்படுகின்றன. 0.90 லட்சம் கடைகள் நகர்ப்புறத்தில் செயல்படுகின்றன. ஒவ்வொரு நியாய விலைக் கடையும் 2000 மக்களுக்கு பணிபுரிகின்றன.

நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள்

தரமான பொருட்கள், நியாயமான விலையில் பொது மக்களுக்கு கிடைக்கும்படி செய்வதில் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் பெரும் பங்காற்றுகிறது. மூன்று நிலையான கட்டமைப்பு கொண்ட நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் இந்தியாவில் உள்ளன. அவைகளாவன அடிப்படை நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள், மைய நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள், மாநில அளவிலான நுகர்வோர் கழகங்கள் ஆகும். ஊரகப் பகுதியில் நுகர்வுப் பண்டங்களை பங்கீடு செய்ய 50,000க்கு மேற்பட்ட கிராமப்புற அளவிலான சங்கங்கள் உள்ளன.

கட்டுப்படுத்தப்பட்ட மலிவு விலை துணிக் கடைகள் (Shops selling cloth at controlled prices)

இக்கடைகள் மலிவு விலைத் துணிகளை நுகர்வோருக்கு அவர்களது பங்கீட்டு அட்டைகள் மூலம் வழங்குகிறது. நாடு முழுவதும் 66,000க்கும் மேற்பட்ட கடைகள் இவ்வகையான துணியை விற்பனை செய்கின்றன.

சிறப்பு அங்காடி

அன்றாட தேவைக்கான பொருட்களை கட்டுப்படுத்தப்பட்ட விலையில் வழங்கும் அங்காடிக்கு சிறப்பு அங்காடி என்று பெயர். நுகர்வோருக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் ஒரே இடத்தில் பெற இவ்வங்காடிகள் உதவுகின்றன. இந்தியாவில் முக்கியமான நகரங்களில் இவ்வகை அங்காடிகள் இயங்குகின்றன. மண்ணெண்ணெய் சில்லறை விற்பனையாளர்கள் சில மாநிலங்களில், மண்ணெண்ணெய் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படுகின்றது. மற்ற மாநிலங்களில் இந்நோக்கத்திற்கு உரிமம் பெற்ற சில சில்லறை விற்பனையாளர்கள் உள்ளனர்.

பண்டங்களின் பகிர்வு

கோதுமை, அரிசி, சர்க்கரை, இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய்கள், மண்ணெண்ணெய் மற்றும் மென்மைக்கரி முதலிய ஆறு வகையான இன்றியமையாய் பண்டங்கள் பொதுப் பங்கீட்டு முறை வாயிலாக வழங்கப்படுகின்றன. இது தவிர, மற்ற இன்றியமையாப் பண்டங்களையும் இம்முறையில் சேர்த்துக் கொள்ள மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.

பண்டங்களை வழங்குவதில் பொறுப்பு

பல்வேறு வகையான நிறுவனங்களுக்கு, கொள்முதல் செய்தல், ஒதுக்கீடு செய்தல், பகிர்வு செய்தல் முதலியவற்றிற்கு வெவ்வேறு பொறுப்புகள் கீழ்க்கண்டவாறு வழங்கப்பட்டுள்ளது.

 • கோதுமை, அரிசி மற்றும் ஏனைய உணவு தானியங்களுக்கு இந்திய உணவுக் கழகமும்,
 • இந்திய எண்ணெய் கழகம் மற்றும் பெட்ரோலிய அமைச்சகம் மண்ணெண்ணெய்க்கும்,
 • மென்மைக் கரிக்கான இந்திய நிலக்கரி லிமிடெட்,
 • தேசிய நெசவுத் தொழில் கழகம்,
 • சமையல் எண்ணெய்கான மாநில வாணிப கழகம்.

வேளாண்மை விலைக் கொள்கை

வேளாண்மைப் பொருட்களின் விலையை, நிர்ணயித்தல், ஒழுங்குபடுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகிய கொள்கைக்கு வேளாண் விலைக் கொள்கை என்று பெயர்.

வேளாண் விலைக் கொள்கையின் முக்கிய நோக்கங்களாவன

வேளாண் பண்டங்களுக்கான விலையை நிர்ணயித்தல், ஒழுங்குபடுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல் விலையிலுள்ள ஏற்றத் தாழ்வுகளைத் தவிர்த்தல், வேளாண் பண்டங்களுக்கான நியாய விலை, உழவர்களுக்கு கிடைக்கும்படி செய்தல் நல்ல தரமான பண்டங்களை ஏற்றுக்கொள்ளத் தக்க விலையில் மக்களுக்கு வழங்குதல் உணவு தானியங்கள் மற்றும் உணவு தானியங்கள் அல்லாத பொருட்களின் விலைகளுக்கிடையே நல்ல தொடர்பை நிலைப்படுத்துதல் வெவ்வேறு மாநிலங்களுக்கிடையே விலைகளை ஒருங்கிணைத்தல்.

அரசின் விலைக் கொள்கைகள்

குறைந்த ஆதரவு விலைகள்

விதைக்கும் பருவ காலத்தின், தொடக்கத்தில் ஒவ்வொரு முக்கிய வேளாண் பண்டங்களுக்கும் குறைந்த ஆதரவு விலையை அரசு அறிவிக்கும். வேளாண் பண்டங்களின் விலையானது ஒரு குறிப்பிட்ட அளவிற்குக் கீழ் இறங்காது) குறையாது என்ற உறுதியை உழவர்களுக்கு இது வழங்குகிறது. உற்பத்தியை தொடர்ந்து செய்யவும், விரிவுபடுத்தவும் இவ்விலையானது உழவர்களுக்கு உறுதியையும், ஊக்கத்தையும் வழங்கும். உழவர்கள் தங்களால் ஆன முழு முயற்சிகளைக் கொண்டு உச்சகட்ட உற்பத்தியை அடைய முயல்வர். வேளாண் பண்டங்களின் விலையானது குறைந்த ஆதரவு விலையைவிட குறையுமானால், அங்காடி உபரி அனைத்தையும் கொள்முதல் விலையில் அரசே வாங்கும்.

கொள்முதல் விலை

 • இது பயிர் அறுவடை காலத்தில், அரசு அறிவிக்கும் விலையாகும். இவ்விலையில் தான் அரசு வேளாண் பண்டங்களை உழவர்களிடமிருந்து பெரும் இவ்விலையானது இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டது.
 • குறிப்பிடத்தக்க அளவிற்கு கீழ் விலை குறையாது என்ற உறுதியை இது உழவர்களுக்கு வழங்குகிறது. அங்காடி விலையானது, கொள்முதல் விலைக்கும் கீழ் குறையுமானால் தங்கள் பண்டங்களை அரசுக்கு விற்றுவிடலாம்.
 • பொதுப் பங்கீட்டு முறைக்கும், "தாங்கிருப்புக்கும்” (buffer stock) தேவையான பண்டங்களை கொள்முதல் செய்ய அரசுக்கு இது உதவுகிறது. வேளாண் செலவு மற்றும் விலைகள் குழுவின் (Commission for Agricultural Cost and Prices-CACP) பரிந்துரையின்படி அரசால் இவ்விலை அறிவிக்கப்படுகிறது. கோதுமை மற்றும் அரிசியை கொள்முதல் செய்ய இவ்விலையை பெருவாரியாக அரசு பயன்படுத்துகிறது. பொதுவாக குறைந்த ஆதரவு விலையைவிட கொள்முதல் விலை உயர்வாக இருக்கும்.

வழங்கல் விலை (Issue Price)

மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உணவு தானியங்கள் அளிப்பு மற்றும் ஒதுக்கீட்டிற்காக இந்திய உணவு கழகத்தில் அறிவிக்கப்படும் விலை வழங்கல் விலையாகும். இவ்விலை பொதுப்பங்கீட்டு முறைக்கான தேவையை பூர்த்தி செய்கிறது. நியாயவிலைக்கடைகளின் மூலம் வழங்கப்படும் பொருட்களின் விலையானது வழங்கல் விலையை சார்ந்திருக்கும். வழங்கல் விலையானது, அங்காடி விலையைவிட குறைவாகவும், கொள்முதல் விலையைவிட அதிகமாகவும் இருக்கும்.

சில்லரை விலை

நியாய விலைக் கடைகள் மூலமாக பொதுப் பங்கீட்டு முறை செயல்படுகிறது. அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலையில், அடிப்படை நுகர்வுப் பண்டங்களை நியாய விலை கடைகள் மக்களுக்கு வழங்கும். இவ்விலைக்கு சில்லரை விலை என்று பெயர். இவ்விலை வழங்கல் விலையைவிட அதிகமாக இருக்கும். அப்பொழுதுதான் பொதுப் பங்கீட்டு முறையின் செலவினங்களை சரிகட்டவும், உரிமம் பெற்றவர்கள் சிறிதளவு இலாபத்தையும் அடைய முடியும்.

தாங்கிருப்பு நடவடிக்கைகள்

தாங்கிருப்பு நடவடிக்கைகள் என்பது அரசால் உணவு இருப்பை வாங்குதல் மற்றும் விற்பனை செய்வதைக் குறிப்பதாகும். இந்த நடவடிக்கைகள் இரு முக்கிய நோக்கங்களைக் கொண்டது.

குறிப்பிடத்தக்க அளவில் விலை ஏற்றத் தாழ்வுகளை ஒழுங்குபடுத்துதலும், கட்டுப்படுத்துதலும்,

அரசு உணவு தானியங்களை கொள்முதல் செய்ய உதவுகிறது. எனவே உணவு தானியங்கள் இருப்பு நாடு முழுவதும், ஆண்டு முழுவதும் ஒரே சீராக இருப்பதை உறுதி செய்கிறது. இந்நடவடிக்கைகள் இந்திய உணவு கழகத்தால் (FCI) மேற்கொள்ளப்படுகிறது. எப்போதெல்லாம் உணவு தானிய இருப்பின் விலை வீழ்ச்சியடைகிறதோ, அப்பொழுது இந்திய உணவு கழகம் கொள்முதல் விலையில் அவற்றை வாங்குகிறது. மேலும் எப்பொழுதெல்லாம் விலை உயர்கிறதோ அப்பொழுது இந்திய உணவு கழகம் அவற்றை விற்பனை செய்ய முற்படுகிறது. இவ்வாறு தாங்கிருப்பு நடவடிக்கைகள் வேளாண் பொருட்களின் விலையை நிலைப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது.

வேளாண் உற்பத்தி

வேளாண் உற்பத்தி என்பது வேளாண்மை உள்ளீடுகளுக்கும் மற்றும் வெளியீடுகளுக்கும் இடையே உள்ள விகிதத்தைக் குறிக்கும். இத்திறனுள்ள வகையில் உள்ளீடுகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் குறிப்பதாகும். மேலும் கொடுக்கப்பட்ட உள்ளீடுகளிலிருந்து எவ்வளவு உற்பத்தி பெறப்படுகின்றது என்பதைக் குறிப்பதாகும்.

இந்தியாவில் வேளாண்மை உற்பத்தியின் போக்கு

1. நிலத்தின் உற்பத்தித் திறன் : பிற நாடுகளின் சராசரி நிலத்தின் உற்பத்தித் திறனை ஒப்பிடும்போது இந்தியாவில் நிலத்தின் உற்பத்தி மிகவும் குறைவாக உள்ளது. இது பின்வரும் இரண்டு அட்டவணைகள் மூலம் தெளிவாக தெரிய வருகிறது.

ஒரு தொழிலாளரின் உற்பத்தித் திறன்

தொழில் மற்றும் இதர துறைகளோடு ஒப்பிடும்போது வேளாண்மையில் உள்ள ஒரு தொழிலாளரின் உற்பத்தித் திறன் மிகவும் குறைவாக உள்ளது. கணக்கீட்டின்படி பேரளவு தொழில் உற்பத்தியில் உள்ளவரோடு ஒப்பிடும்போது வேளாண்மையில் உள்ள உற்பத்தித் தொழிலாளரின் உற்பத்தி திறனானது மூன்றில் ஒரு பங்கே ஆகும். அதே நேரத்தில் சிறுதொழிலில் உள்ளவரோடு ஒப்பிடும்போடு இரண்டில் ஒரு பங்கு ஆகும். இதன் தொடர்பாக, நாம் நினைவில் கொள்ள வேண்டியது என்னவெனில் மனிதசக்தி மற்றும் மூலதனத்தின் பங்கு இயற்கையைவிட மிக முக்கியமானதாகும். இரண்டாவதாக வேளாண்மையில், ஒரு தொழிலாளிக்கு செய்யப்படும் முதலீடு தொழிலில் செய்யப்படும் முதலீட்டைவிட மிகவும் குறைவாகும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

3.11940298507
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top