பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சரக்கு மற்றும் சேவை வரி

சரக்கு மற்றும் சேவை வரி பற்றிய தகவல்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

மறைமுக வரி விதிப்பில் ஒரு மிகப்பெரிய சீர்திருத்தம், 30.06.2017 அன்று நள்ளிரவு பாராளுமன்ற மைய மண்டபத்தில் அரங்கேறியது. அந்த சமயம் இந்திய ஜனாதிபதியும், பிரதமரும் கை கோர்த்து ஜி எஸ் டி என்று சுருக்கமாக அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை நாடு முழுவதும் அமல்படுத்தினர். மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்ட நெடு நாள் முயற்சி அன்று நடைமுறைப்படுத்தப்பட்டு 01.07.2017 முதல், ஒரு நாடு, ஒரே சந்தை, ஒரு வரி என்ற பொருளாதாரக்கனவு நனவானது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சீர்திருத்தம் பற்றி நாம் முழுவதும் புரிந்து கொள்ள முதலில் நாம் நம் பழைய மறைமுக வரி விதிப்பை பற்றியும், அதிலிருந்து இந்த புதிய சரக்கு மற்றும் சேவை வரி எவ்விதம் மாறுபட்டது மற்றும், மேலானது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

பழைய வரி விதிப்பின் சில குறைபாடுகள்

இந்தியாவில் சரக்குகள் மற்றும் சேவைகளின் மேல் பல்வேறு விதமான வரிகளை மாநில மற்றும் மைய அரசுகள் வசூலித்து வந்தன. ஒரு பொருள் உற்பத்தியாவதில் இருந்து அது நுகர்வோரை கடைசியாக சென்றடையும் வரை உற்பத்தி வரி, மதிப்புக்கூட்டு வரி, மைய விற்பனை வரி, நுழைவு வரி உள்ளிட்ட பல்வேறு விதமான வரி விதிப்பிற்க்கு உட்படுத்தப்பட்டன. உற்பத்தி மற்றும் சேவைகள் மீதான வரிகளை மத்திய அரசும், விற்பனை மீதான வரியை மாநில அரசும் வசூலித்து வந்தன. இதனால் சரக்கு நுகர்வோரை சென்றடையும் முன் பல விதமான வரி விதிப்பிற்கு உள்ளாகியது. சீரான ஒரே வரி விகிதம் இல்லாமல் போனது. மேலும் இந்த முறை, வரி மேல் வரி விதிப்பு செய்ய அனுமதித்தது. உதாரணமாக விற்பனை வரி, உற்பத்தி வரி உள்ளடக்கிய மதிப்பின் மீதே விதிக்கப்பட்டது.

மற்றொரு குறைபாடு என்னவென்றால், சரக்கு பல உற்பத்தி மற்றும் விற்பனை நிலைகளை கடந்து நுகர்வோரை சென்றடைவதால், ஒரு சரியான வரி விதிப்பு முறை, ஒவ்வொரு நிலையிலும் நிகழும் மதிப்பு கூட்டலுக்கு மட்டும் வரி விதிக்க வழி செய்ய வேண்டும். இது முந்தைய நிலையில் செலுத்தப்பட்ட வரிகளை முழுவதுமாக உள்ளீட்டு வரி ஆதாயமாக, வரி செலுத்துவோரை எடுத்துக்கொள்ள அனுமதிப்பதன் மூலமே சாத்தியம். ஆனால் பழைய வரி விதிப்பு முறையில் மாநில வரிகளை மத்திய வரி செலுத்தவும், மத்திய வரிகளை மாநில வரி செலுத்தவும் உள்ளீட்டு வரி ஆதாயமாக பயன் படுத்த இயலாது. மேற்சொன்ன இரண்டு காரணங்களும் சரக்கு மற்றும் சேவைகளின் நுகர்வோரை சென்றடையும் விலையை உயர்த்தின.

முழுவதும் ஒரே வரி விகிதத்தில் வரி விதிப்புக்கு உட்படுத்தப் படுகிறது. மேலும் ஒவ்வொரு நிலையிலும் முந்தைய நிலையில் செலுத்த பட்ட வரி உள்ளீட்டு வரி ஆதாயமாக முற்றிலும் அனுமதிக்கப்பட்டு அவை வரி செலுத்துவோரின் வெளியீட்டு வரி செலுத்த பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இதன் மூலமாக ஒரு தேசம் ஒரு வரி என்ற மேம்பட்ட இலக்கை எட்ட வழிவகை செய்கிறது. ஜி எஸ் டி வரி நடைபெறும் சரக்கு மற்றும் சேவை விநியோக முறை பொறுத்து மாறுபடும். ஒரு மாநிலத்திற்குள்ளேயே நிகழும் விநியோகத்திற்கு மத்திய வரி (CGST) மற்றும் மாநில வரி (SGST) விதிப்புக்கு உட்படுத்தப்படும். இரண்டு மாநிலங்களுக்கு இடையில் நிகழும் விநியோகங்களுக்கும் மற்றும், ஏற்றுமதி இறக்குமதி விநியோகங்களுக்கும் ஒருங்கிணைந்த ஜி எஸ் டி (IGST) விதிக்கப்படும்.

விநியோகத்தில் ஈடுபடும் நபரின் விநியோக மதிப்பு 20 இலட்ச ரூபாய் அளவை தாண்டுகையில் அவர் ஜி எஸ் டி வரி செலுத்த முறைப்படி பதிவு செய்ய வேண்டும். இந்த 20 இலட்ச ருபாய் விலக்கு, சிறப்பு மாநிலங்களுக்கு, 10 இலட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விலக்கு சில விதமான விநியோகங்கள் செய்பவருக்கு பொருந்தாது. உதாரணமாக மாநிலங்கள் இடையிலான விநியோகம் செய்பவர்கள் முதலிலிருந்ததே பதிவு செய்து வரி செலுத்த வேண்டும். விவசாய பொருட்கள் உற்பத்தி விநியோகம் செய்பவரும் முழுவதும் வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களை மட்டும் விநியோகம் செய்பவரும் ஜி எஸ் டி பதிவு செய்யவோ வரி செலுத்தவோ அவசியம் இல்லை. ஐந்து வகையான பெட்ரோலிய பொருட்கள் விநியோகம் தாற்காலிகமாகவும், மனித நுகர்வுக்கு பயன்படும் மது விநியோகம் நிரந்தரமாகவும் இந்த சட்டத்தில் இருந்து விடுவிக்கப்படுகிறது.

ஜி எஸ் டி வரி விகிதங்கள்

ஜி எஸ் டி தற்போது சரக்கு மற்றும் சேவைகள் மீது 6வரி விகிதங்களில் விதிக்கப்படுகிறது. அவை முறையே 0, 3, 5, 12, 18 மற்றும் 28 ஆகியவை. பெரும்பாலான அத்தியாவசிய மற்றும் உணவு பொருட்களும் 0% மற்றும் 5% விகிதத்தில் வரி - விதிப்புக்கு உட்படுத்த படுகின்றன. தங்கம் மற்றும் விலை உயர்ந்த உலோகங்கள் 3% வரி விதிப்பின் கீழ் உள்ளன. அத்தியாவசிய சேவைகள் 5% மற்றும் 12% ம் , மற்றவை 18% ஜி .எஸ் டி விதிக்கப்படுகிறது. இதனால் புதிய வரி விதிப்பு விலைவாசி ஏற்றத்தை ஏற்படுத்தி பொது மக்களுக்கு சுமையாக மாறாமல் வகை செய்யப்பட்டது. ஏற்றுமதி விநியோகம் 0% ஜீ எஸ் டி மற்றும் முழு உள்ளீட்டு வரி ஆதாயம் பெற அனுமதிக்கப்படுகிறது.

ஜி எஸ் டியின் பயன்கள்

  • ஜி எஸ் டி அமலுக்கு வருவதன் மூலம் பல தற்காலிக மற்றும் நிரந்தர நன்மைகள் விளையும். வரி விதிப்பு என்பது வெளிப்படையானதாக மாறிவிடும், எளிதானதாக இருக்கும். எனவே எந்த பொருளுக்கு வரி விலக்கு உள்ளது, எதற்கு வரி விலக்கு இல்லை என்பது போன்ற தகவல்கள் எளிதாக அனைவருக்கும் புரியும்.
  • வரி வசூலுக்கு உதவும். இதனால் அரசின் வருமானம் அதிகரிக்கும்.
  • வரி விலக்கு லாபங்களை பார்த்து அந்த பகுதிகளில் தொழில் தொடங்காமல், தங்கள் தொழிலுக்கு ஏற்ற இடங்களில் நிறுவனங்களை தொடங்க முடியும்.
  • நிறுவனங்கள் இடையே ஆரோக்கிய போட்டி அதிகரிக்கும். விநியோகம் செய்பவர்களுக்கு, ஒரு எளிய ஒரு நாடு ஒரு சந்தை ஒரு வரி என்ற வரி விதிப்பக முறை அமைகிறது.
  • முழு உள்ளிட்டு வரி ஆதாயத்தால் நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் பயன் பெறுவர்.
  • அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் வரி விதிப்பு விலக்கு இருப்பதால் நுகர்வோர் பயன் அடைவர்.
  • நுழைவு வரி ரத்தால் நாடு முழுவதும் சரக்குகள் தடை இன்றி வேகமாய் சென்றடையும். வரி விதிப்பு ஆன்லைன் கண்கணிப்பால் வரி ஏய்ப்பு மற்றும் ஊழல் மறைந்து இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

Filed under:
2.94736842105
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top