பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் / பெண்களின் பாதுகாப்புக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பெண்களின் பாதுகாப்புக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

பெண்களின் பாதுகாப்புக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் பற்றிய குறிப்புகள்

பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்றங்களைத் தடுப்பதற்காக, விடுதியில் தங்கியுள்ள மாணவிகள், பெண் குழந்தைகள், வளர் இளம் பெண்கள், பணிபுரியும் மகளிர் ஆகியோர்களின் பராமரிப்பு, பாதுகாப்புக்காக, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழாமல் இருப்பதிலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் புரிவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதிலும், தமிழக காவல் துறை கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது.

பொது விதிமுறைகள்

பொதுவாக, வீட்டை விட்டு வெளியே தங்கும் பெண் குழந்தைகள், வளர் இளம் பெண்கள் மற்றும் பெண்கள், சிறார் இல்லங்கள், மாணவியர் விடுதிகள், பணிபுரியும் பெண்கள் விடுதிகள் ஆகியவற்றில் தங்குகின்றனர். மேற்கண்ட அமைப்புகள் பொதுவாக அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், அறக்கட்டளைகள், சங்கங்கள், மதம் சார்ந்த நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள், நிறுவனங்கள் / தொழிற்சாலைகள் தனியார் மற்றும் தனி நபர் ஆகியோரால் நடத்தப்பட்டு வருகின்றன. பெண் குழந்தைகள், வளர் இளம் பெண்கள் மற்றும் பெண்கள் விடுதி/இல்லங்களை நடத்தும் நிறுவனங்கள் கீழ்க்காணும் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உடனடியாக உட்படுத்தப்படும்.

 1. கட்டடங்களுக்கான அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்து உரிய அதிகாரியால் ஒப்பளிக்கப்பட்ட கட்டடங்களில் மட்டுமே விடுதி / காப்பகம் / அமைவிடம் அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு அமைக்கப்படும் விடுதி / காப்பகம் / அமைவிடம் போதிய பாதுகாப்பு மற்றும் உரிய தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடியதாக இருக்க வேண்டும்.
 2. ஆண் / பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் அமைவிடமாக இருப்பின் மாணவர்களுக்கு என தனியாகவும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு என தனியாகவும் கட்டடங்கள் அமையப் பெற வேண்டும்.
 3. ஆண்/ பெண் குழந்தைகள் தங்கும் அமைவிடமாக இருப்பின் மாணவர்களுக்கு என தனியாகவும் பெண் குழந்தைகளுக்கு என தனியாகவும் கட்டடங்கள் அமையப் பெற வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களினால் மாணவர் மற்றும் மாணவியர் ஒரே கட்டடத்தில் தங்க நேரிடின், தனித்தனியான அறைகளில் தங்க வைக்கப்படவேண்டும்.
 4. வளர் இளம் பெண்கள் மற்றும் பெண்களுக்கான விடுதி / காப்பகம் / அமைவிடங்களில் விடுதிக் காப்பாளர் / பொறுப்பாளர்களாக பெண்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்.
 5. 50 குழந்தைகளுக்கு ஒரு விடுதிக் காப்பாளர் இருக்க வேண்டும்.
 6. விடுதிகளில் தங்கும் நபர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி தேவைக்கேற்ப 24 மணி நேரமும் பணியில் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
 7. ஒன்றுக்கு மேற்பட்ட வாயில்கள் இருந்தால் அனைத்து வாயில்களிலும் பாதுகாப்பு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.
 8. 50க்கு மேற்பட்டோர் இருக்கும் இல்லங்களில் / தங்குமிடங்களின் வாயில்களில் சிசிடிவி கேமரா, டிவிஆர் பொருத்தப்படவேண்டும்.
 9. விடுதிக் காப்பாளர் / பாதுகாவலர், முன் அனுமதி பெறாமலோ மாற்று ஏற்பாடு செய்யாமலோ பணிக்கு வராமல் இருக்கக் கூடாது. இவர்கள் பணிக்கு வராத நேரத்தில் உரிய பொறுப்புள்ள ஆட்களை நியமிப்பதை சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். விடுதி காப்பாளர் அல்லது துணை விடுதி காப்பாளர் எந்த ஒரு நேரத்திலும் விடுதியில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
 10. மேற்கண்ட அமைவிடங்களில் உள்ள பாதுகாவலர்கள் அவசர காரணமேதுமின்றி குழந்தைகள், வளர் இளம் பெண்கள், பெண்கள் தங்கியுள்ள விடுதி கட்டடங்களுக்குள் அனுமதிக்கப்படக் கூடாது. நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள அவர்களுக்கென அமைக்கப்பட்ட அறைகளில் மட்டுமே இருக்க வேண்டும்.
 11. அமைவிடங்கள் நான்குபுற சுற்றுச் சுவர்களுக்குட்பட்டு இருக்க வேண்டும். மேலும் உள்ளே மற்றும் வெளியே செல்லும் வாயில்களில் தாழ்ப்பாளுடன் கூடிய கதவுகள் அமைக்கப்பட வேண்டும்.
 12. விடுதியில் தங்கியிருப்பவர்கள், அவர்கள் விடுதியை விட்டு வெளியில் செல்லும் நேரம், விடுதிக்கு திரும்பும் நேரம் ஆகியவற்றை தினசரி வருகைப் பதிவேட்டில் விடுதி காப்பாளர் பதிவு செய்ய வேண்டும். மேலும் விடுதியில் தங்கியிருப்பவர்கள் அவர்கள் தூங்கச் செல்வதற்கு முன்பு கணக்கெடுக்கப்பட வேண்டும்.
 13. தங்கியிருப்பவர்களைச் சந்திக்க பார்வையாளர்களாக அவர்களுடைய பெற்றோர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
 14. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் வரவேற்பறையில் மட்டுமே பார்வையாளர்களை பாதுகாப்பாளர்களின் கண்காணிப்பில் அனுமதிக்க வேண்டும்.
 15. வெளி நபர்கள் கட்டடத்தினுள் நுழைவது முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும்.
 16. இளம் குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்களை காண வரும் பார்வையாளர்களின் சந்திப்பு கண்டிப்பாக விடுதிக் காப்பாளர் கண்காணிப்பிற்குட்பட்டு நடைபெற வேண்டும்.
 17. சிறு வயதுடைய ஆண் மற்றும் பெண் குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்கள் ஆகியோரை விடுமுறை நாட்களில் வீட்டிற்கு அனுப்பும் போது, அவர்களுடைய பெற்றோர் / பாதுகாப்பாளரிடம் அந்த விடுதி காப்பாளர் ஒப்படைக்க வேண்டும். எந்த ஒரு நேரத்திலும் தனியாகவோ வெளியாட்களுடனோ அனுப்பக் கூடாது.
 18. விடுதிக் காப்பாளர் / பாதுகாவலர் பார்வையாளர்களை விடுதிக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது.
 19. பார்வையாளர் புத்தகம் விடுதிக் காப்பாளரால் பராமரிக்கப்பட வேண்டும்.
 20. பார்வையாளர் புத்தகத்தில் பெயர், முகவரி, உறவு முறை மற்றும் சந்திப்பிற்கான நோக்கம் ஆகியவை பதிவு செய்யப்பட்டு பார்வையாளரால் கையொப்பம் இடப்பட வேண்டும். அங்கு பணிபுரியும் பணியாளர் ஒருவரால் மேலொப்பம் இடப்படவேண்டும்.
 21. விடுதிக் காப்பாளர் மற்றும் பாதுகாவலர் ஆகியோருக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.
 22. பெற்றோர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பாளர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பபட வேண்டும்.
 23. விடுதிக் காப்பாளர் மற்றும் பாதுகாவலர்களது தொலைபேசி எண் மற்றும் முகவரி ஆகியவை காப்பகத்தின் முன்வாயிலில் எளிதில் காணக் கூடிய வகையில் பார்வையில் வைக்கப்பட வேண்டும்.

விடுதிக் காப்பாளர் மற்றும் பாதுகாவலர் காப்பாளர் நியமனங்களுக்கான நெறிமுறைகள்

 1. விடுதிக் காப்பாளர் மற்றும் பாதுகாவலர்களாக முன்னாள் குற்றவாளிகள் மற்றும் சந்தேகத்திற்கிடமானவர்கள் நியமிக்கப்படுவதை தவிர்க்கும் பொருட்டு, நியமிக்கப்பட உள்ளவர்களின் முந்தைய நன்னடத்தை பற்றிய சான்றிதழ்களை உள்ளூர் காவல் துறையிடமிருந்து பெற்று, முழுமையான பரிசீலனைக்குப் பின்னரே அவர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.
 2. தொற்று நோய் உள்ளவர்கள் நியமிக்கப்படுவதை தவிர்க்கும் பொருட்டு, நியமிக்கப்பட உள்ளவர்களின் மருத்துவ ஆவணங்கள் உள்ளூர் அரசு மருத்துவமனையால் சான்றளிக்கப்பட வேண்டும். அவர்களின் மன நிலை மற்றும் மன உறுதியினை மதிப்பீடு செய்ய வேண்டும்.
 3. அரசு அல்லாத நிறுவனங்களால் நடத்தப்படும் காப்பகங்களில் நியமிக்கப்படும் விடுதிக் காப்பாளர் மற்றும் பாதுகாவலர்களுக்கு போதுமான அளவு ஊதியம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு வழங்கப்படும் ஊதியம் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரால் அவ்வப்போது நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும்.
 4. மாவட்ட நிர்வாகத்தினால் கண்காணிக்கப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்
 5. சிறு வயதுடைய ஆண் மற்றும் பெண் குழந்தைகள், வளரிளம் பெண்கள் மற்றும் மகளிர் தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள அனைத்து விடுதி / இல்லம் / அமைவிடங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்வதை உறுதி செய்திட மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
 6. பதிவு செய்யப்பட்ட விடுதிகள் / இல்லங்கள் / அமைவிடங்கள் குறித்த பட்டியல் முறையான ஆய்வு மற்றும் கண்காணிப்பிற்காக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். காவல் துறையினரால் மேற்கொள்ளப்படும் ரோந்து பணியில் இத்தகைய அமைப்புகளை, குறிப்பாக இரவு நேரங்களில் கண்காணிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஏற்பாடு செய்ய வேண்டும். மாதத்திற்கு ஒரு முறையேனும் ரோந்துப் பணி பதிவேடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரால் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
 7. மாவட்ட ஆட்சியர்கள் தங்களது மாதாந்திர சட்டம் மற்றும் ஒழுங்கு கூட்டத்தில் இத்தகைய விடுதிகள் / இல்லங்கள் / அமைவிடங்களின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
 8. மாவட்ட ஆட்சியரின் தலைமையின் கீழ் வருவாய், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன், தொழிலாளர் நலன், சமூக நலம், பள்ளிக் கல்வி, உயர்கல்வி மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் ஆகிய துறைகளைச் சார்ந்த அலுவலர்களை உள்ளடக்கிய அனைத்து மாவட்ட நிர்வாக அமைப்புகள் கண்காணிப்பு நடவடிக்ககைளில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.
 9. விடுதிகள் / காப்பகங்கள் / அமைவிடங்களின் உரிமையாளர்களுக்கு பாதுகாவலர் நியமனத்தில் உதவிடும் வகையில், மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் ஊர்க்காவல் படையினர்களது பட்டியலை காவல் துறை தயாரிக்க வேண்டும்.
 10. அரசால் வகுக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மேற்கண்ட இல்லங்கள் பின்பற்றுகின்றனவா என்பதை குழந்தைகள் நலக் குழு அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.
 11. விடுதிகள் / இல்லங்கள் / அமைவிடங்களில் தங்கியிருப்பவர்கள் உடல் ரீதியாகவோ மற்றும் உள ரீதியாகவோ பாதிக்கப்படுவதை தடுப்பது கண்காணிப்பு அதிகாரிகளால் உறுதி செய்யப்ட வேண்டும்.
 12. பாதிப்பிற்குள்ளாகக் கூடிய நிலையினை கருத்திற் கொண்டு, மாவட்ட ஆட்சியரால் இவ்வில்லங்கள் வகைப்படுத்தப்பட்டு தேவையான கண்காணிப்பு இயக்கமுறை வடிவமைக்கப்பட வேண்டும்.

விளம்பரம் மற்றும் விழிப்புணர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்

 1. இத்தகைய அமைப்புகள் மாவட்ட நிர்வாகத்திடம் உடனடியாக பதிவு செய்வதை உறுதி செய்திட உள்ளுர் ஊடகங்கள், தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளின் வாயிலாக நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
 2. தற்போதுள்ள குழந்தைகள் உதவி எண் 1098-ஐ பயன்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் தகுந்த விளம்பரம் செய்ய வேண்டும்.
 3. பாதுகாவலர் மற்றும் விடுதிக் காப்பாளரின் தொலைபேசி எண்ணுடன் கூடிய இவ்வமைப்புகளின் பட்டியல் பொதுமக்களின் தகவலுக்காக மாவட்ட வலைதளத்தில் ஏற்றப்பட வேண்டும். இது, தகுந்த பதிவு செய்யப்படாமல் இயங்கும் அமைப்புகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிப்பதற்கு மக்களை ஊக்கப்படுத்தும்.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு

3.1875
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top