பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் பற்றிய தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

திட்ட துவக்கம்

தமிழகத்தில் முதற்கட்டமாக 2.2.2006 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திண்டுக்கல் மற்றும் சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இரண்டாம் கட்டமாக தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி மற்றும் கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

1.4.2008 முதல் தமிழகத்தில் இதர அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு நடைபெற்று வருகிறது.

திட்ட நோக்கம்

•ஒவ்வொரு நிதியாண்டிலும், ஊரகப் பகுதிகளில் உடல் உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுள்ள, வயது வந்தோர் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஆண்டில் 100 நாட்கள் வேலை வாய்ப்பினை அளிப்பதன் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தினை உயர்த்துவதே இச்சட்டத்தின் நோக்கமாகும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் உடல் உழைப்பை மேற்கொள்ளும் வேலைவாய்ப்பினை வழங்குவது இத்திட்டத்தின் அடிப்படைக் குறிக்கோளாகும்.

பணிகள் தேர்வு செய்யும் முறை

ஒவ்வொரு ஊராட்சியிலும் இத்திட்ட விதிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட உள்ள பணிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு கிராம சபையில் தீர்மானம் பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும்.

வேலை கோருவதற்கான தகுதிகள்

•வேலை செய்ய இயலுகின்ற உடல் திறன் கொண்ட அனைவரும் இத்திட்டத்தில் வேலை பெற தகுதியுடையவர்கள்

•அந்த ஊராட்சியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

•எந்த ஒரு சாதாரண உடல் உழைப்பிலான வேலையையும் செய்வதற்கு விருப்பமுடையவராக இருக்க வேண்டும்.

•18 வது நிரம்பிய ஆண்/பெண் இருபாலரும் வேலை வாய்ப்பு பெற தகுதியுடையவர்.

•வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் மட்டும் அல்லாமல் வேலை கோரும் மற்றவர்களும் வேலை பெற தகுதியானவர்கள்.

•பணிகளில் குறைந்தபட்சம் 33 சதவிகிதம் பெண்கள் பயன்பெற வாய்ப்பு அளிக்க வேண்டும்.

வேலைக்கான அடையாள அட்டை வழங்குதல்

•ஊரகக் குடும்பங்களில் உடல் உழைப்பினை மேற்கொள்ள விருப்பம் உள்ள வயது வந்தோர், எழுத்து மூலமாகவோ அல்லது வாய்மொழியாகவோ தமது விருப்பத்தினை, கிராம ஊராட்சிக்கு தெரிவித்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

•புகைப்படம் மற்றும் பதிவு எண்ணுடன் கூடிய வேலை அட்டையினை கிராம ஊராட்சி இலவசமாக வழங்கும்.

•எழுத்து மூலமாகவோ அல்லது வாய்மொழியாகவோ பெறப்பட்ட வேண்டுகோளின்படி 15 நாட்களுக்குள் வேலை அட்டை வழங்கப்படும்.

•வேலை அட்டை வைத்திருப்போர், எழுத்து மூலமாகவும் வேலை கோரலாம். அத்தருணங்களில், கிராம ஊராட்சி, தேதியுடன் கூடிய ஒப்புகைச் சீட்டு வழங்கும். அது அவர்களுக்கு 15 நாட்களுக்குள் வேலை வழங்குவதற்கு உத்தரவாதமாக விளங்கும்.

நடைமுறை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 9 மணி நேரம் (உணவு இடைவேளை 1 மணி நேரத்துடன்) மற்றும் நிர்ணயிக்கப்பட்ட அளவு வேலை செய்தால் அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்கப்படும்.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்

•குறைந்தபட்ச ஊதியச் சட்டம், 1948ன்படி, விவசாய தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுதல் வேண்டும்.

•ஆண்கள் மற்றும் பெண்களுக்குச் சமஅளவிலான ஊதியம் வழங்கப்படும்.

•வேலையின் போது விபத்து ஏற்பட்டு முழுமையான ஊனமுற்றாலும் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டாலும் ரூ.25,000/- இழப்பீட்டு தொகையாக வழங்கப்படும்.

• பொதுவாக, வாரம் தோறும் ஊதியம் வழங்கப்படுதல் வேண்டும்.

• 15 நாட்களுக்குள் ஊதியம் வழங்குதல் உறுதிசெய்யப்பட வேண்டும்.

•மூன்றில் ஒரு பங்கு பயனாளிகள், பெண்களாக இருக்க வேண்டும்.

•வேலை நடைபெறும் இடங்களில், குடிநீர், நிழற்கூடங்கள் போன்ற வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

•வேலை நடைபெறும் இடம், கிராமத்திலிருந்து 5 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும். வேலை நடைபெறும் இடம் 5 கி.மீ. தூரத்திற்கு மேல் இருந்தால், போக்குவரத்து மற்றும் வாழ்வாதாரத் தொகையாக ஊதியத்தில் 10 சதவீதம் கூடுதலாக வழங்கப்படும்.

•வழிகாட்டி நெறிமுறைகளின்படி, கிராமத்திற்கான திட்டத் தொகுப்பினை, கிராம சபை ஒப்புதல் அளித்தபின், அதில் 50 விழுக்காடு வேலைகள் கிராம ஊராட்சியின் மூலம் செயல்படுத்த ஒதுக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில், கிராம ஊராட்சியே அனைத்து வேலைகளையும் செயல்படுத்தி வருகிறது.

•திறன்சாரா உடல் உழைப்புத் தொழிலாளர்களுக்கான ஊதியச் செலவு 100 விழுக்காடு, கட்டுமானப் பொருட்களின் செலவினம், திறன் சார்ந்த மற்றும் பகுதி திறன் சார்ந்த தொழிலாளர்களின் ஊதியச் செலவில் 75 விழுக்காடு மத்திய அரசால் ஏற்கப்படுகிறது.

•இத்திட்டத்தின் வேலைக்கான ஊதியம் மற்றும் பொருளுக்கான விகிதாச்சாரம் 60:40 என்று அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 100 விழுக்காடு முழுமையான மனித உழைப்பைக் கொண்டு செய்யப்படும் வேலைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன.

•அனைத்து செயல்பாடுகளிலும் ஒளிவு மறைவின்றி இணையதளத்தில் பதிவுகள் செய்யப்படுகின்றது. எனவே இத்திட்டத்தினை பற்றி பொது மக்கள் அனைவரும் இiயைதளத்தின் மூலம் தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

•ஒப்பந்ததாரர்கள் மற்றும் இயந்திரங்கள் பயன்படுத்தல் அனுமதிக்கப்படமாட்டாது.

•மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் சமூகத் தணிக்கையினை, கிராம சபை, அதற்காக அமைக்கப்பட்டுள்ள “சமூகத் தணிக்கைக் குழு” மூலம் மேற்கொள்ளும்.

•குறைகளைத் துரிதமாகத் தீர்க்கும் வகையில், குறை தீர்க்கும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கட்டணம் இல்லாத் தொலைபேசி சேவை “1299” ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுகிறது.

•இத்திட்டத்தின் அனைத்துக் கணக்கு மற்றும் ஆவணங்களை பொதுமக்கள் பரிசீலிக்கலாம்.

•இத்திட்டச் செயல்பாடு குறித்து அறிவுரைகள் வழங்கிடவும், கண்காணிக்கவும், மதிப்பீடு செய்யவும், “தமிழ்நாடு அரசு மாநில வேலை உறுதி மன்றம்” என்ற அமைப்பு, தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் பிரிவு 12ன்படி அமைக்கப்பட்டுள்ளது.

மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பணிகள்

அரசாணையின்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகள் மேற்கொள்வதற்கான சிறப்பு பணிகள் கீழ்க்கண்டவாறு:

•பணித்தளத்தில் தொழிலாளர்களுக்கு தண்ணீர் வழங்கும் பணியாளர்

•குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பாளர்

•குழந்தைகள் பராமரிப்பு பொறுப்பாளருக்கு உதவியாளர். (ஒவ்வொரு 5 குழந்தைகளுக்கும் ஒரு கூடுதல் உதவியாளர் அமர்த்தலாம்).

•பணித்தளப் பொறுப்பாளர் முன்அளவீட்டினை மேற்கொள்ள உதவுதல் (100 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இருப்பின் ஒரு மாற்றுத் திறனாளியினை பணித்தள பொறுப்பாளருக்கு உதவியாளராக அமர்த்தலாம்)

•பணித்தளத்தில் அகற்றப்பட்ட மரங்களை அப்புறப்படுத்துதல் (இலை, தழைகள் மற்றும் சிறு மரங்கள்)

•ஆழப்படுத்தப்படும் இடங்களில் தண்ணீர் தெளித்தல் (குறிப்பாக கோடை காலங்களில்)

•மண்வெட்டி, கடப்பாறை போன்றவற்றை கொண்டு கரைகளில் கொட்டப்படும் மண்களை சமப்படுத்துதல்

•கரைகளை சமன்படுத்துதல்

•கரைகளின் சரிவுப்பகுதியினை சீர்செய்தல்.

மண்தொடர்பான பணிகளில் சிறப்பு வழிமுறைகள்

•உடல் உழைப்பினை மேற்கொள்ளத் தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகளை மண்வேலை தொடர்பான பணிகளான காடுகளை அழித்தல், ஆழப்படுத்துதல்,

நடுதல், மண்மூடுதல் மற்றும் நீர்பாய்ச்சுதல் போன்றப் பணிகளுக்கு பயன்படுத்தலாம்.

•பணித்தளம் / பணித்தளங்களில் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அவர்களை மேலே கூறப்பட்டுள்ள சிறப்புப் பணிகளை மேற்கொள்ள மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

•பணித்தளம் / பணித்தளங்களில் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் மட்டுமே மண்தொடர்பான பணிகளுக்கு பயன்படுத்தலாம். அப்போது, அவர்கள் 5 அல்லது 10 பேர் கொண்ட குழுவாக பிரிக்கப்பட்டு, சாதாரண தொழிலாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணி அளவில் 50 சதவீத அளவினை மட்டுமே அவர்கள் மேற்கொள்ள முன் அளவீடு செய்ய வேண்டும்.

இத்திட்டத்தின்கீழ் எடுத்து கொள்ளக்கூடிய பணிகள்

•புதிய குட்டைகள் அமைத்தல்

•ஏற்கனவே உள்ள குட்டை, குளம், ஊரணி, கோயில் குளங்கள் போன்ற நீர்வள ஆதாரங்களை புனரமைத்தல்.

•நீர்வரத்துக் கால்வாயை தூர்வார்த்தல்.

•பாசன குளங்களை தூர்வாருதல் மற்றும் கரைகளை பலப்படுத்துதல்.

•புதிய மண்சாலைகளை அமைத்தல்.

•நீர்வள / மண்வள பாதுகாப்பு பணிகள் மற்றும் வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளுதல்.

•வறட்சியினைத் தடுக்கும் வகையில் காடு வளர்ப்பு மற்றும் மரங்கள் நட்டு வளர்த்தல்.

•தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், சிறு / குறு விவசாயிகள் நிலச்சீர்த்திருத்த திட்ட பயனாளிகள், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்ட பயனாளிகள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளோர் ஆகியோரின் நிலங்களில் பாசன வசதிகளை ஏற்படுத்துதல், மரக்கன்றுகளை நடுதல், நில மேம்பாட்டு பணிகள் மற்றும் தோட்டக்கலை சார்ந்த பணிகள்.

நில மேம்பாட்டுப் பணிகள்

•தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர், சிறு மற்றும் குறு விவசாயிகள், நில சீர்திருத்த திட்ட பயனாளிகள், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்ட பயனாளிகள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் ஆகியோரின் நிலங்கள் மேம்பாடு செய்ய அரசாணையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

•மேலும் பண்ணைக் குட்டைகள் அமைத்தல் உள்ளிட்ட நில மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.

•மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் உருவாக்கப்பட்ட சொத்துக்களை நிலைப்படுத்துவதற்காக தொடர் நீராதாரக் குளங்களில் உள்ள மதகு மற்றும் மறுகால் சீரமைத்தல் உள்ளிட்ட புனரமைக்கும் பணிகள் மாநில அரசின் ஊரக உட்கட்டமைப்புத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படுகிறது.

பொது உட்கட்டமைப்பு வசதிகள்

•கிராம ஊராட்சிகளுக்கான கட்டடங்கள் கட்டுதல்

•மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான கட்டடங்கள் கட்டுதல்

•அங்கன்வாடி மையங்கள்

•உணவுதானிய இருப்பு கிட்டங்கி அமைப்புகளை கட்டுதல்

•இயற்கை உரங்கள் மற்றும் அறுவடைக்கு பின்னர் விவசாய உற்பத்தி பொருட்களை சேமித்து வைப்பதற்கான நிலையான உட்கட்டமைப்புகள் உருவாக்குதல்

•சுயஉதவிக் குழுக்கள் வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பணிமனைகள்

•விளையாட்டுத் திடல்களை அமைத்தல்

•புயல் நிவாரண இல்லங்களை கட்டுதல்

•கிராம சந்தைகள் கட்டுதல்

•சுடுகாடுகளை கட்டுதல்

•பள்ளிக் கழிப்பிடங்கள்

•அங்கன்வாடி கழிப்பிடங்கள்

தனிநபர் உட்கட்டமைப்பு வசதிகள்

•கோழிக் கொட்டகை

•ஆட்டுக் கொட்டகை

•மாட்டுக் கொட்டகை

•கால்நடைகளுக்கான தண்ணீர் தொட்டி

மத்திய அரசு தெரிவித்துள்ளபடி, தகவல், கல்வி தொடர்பின் ஒரு அங்கமாக ஒளி / ஒலி ஊடகங்கள் மற்றும் திட்ட வழிகாட்டி நெறிமுறைகள், பணி விவரம், பணி செய்ய வேண்டிய அளவு போன்றவை குறித்த தகவல் பலகைகள் ஊராட்சி / குக்கிராமங்கள் / பணித்தளங்களில் நிறுவுதல் உள்ளிட்ட பல்வேறு தொடர்பு முறைகள் செயல்படுத்தப்படும். இதனால், தொழிலாளர்கள் திட்டம் குறித்த விழிப்புணர்வு, பணி குறித்த கடமைகள் மற்றும் உரிமைகளையும் தெரிந்துகொள்வார்கள்.

திட்ட செயலாக்கம்

•திட்டப் பணிகளைத் தெரிவு செய்தல், பணிகளை செயல்படுத்துதல் ஆகியவை கிராம ஊராட்சியின் கடமைகளாகும்.

•கிராம ஊராட்சிகளில் தயார் செய்யப்பட்ட பணிகளின் பட்டியலில் இருந்து முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளுக்கு மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் நிர்வாக அனுமதி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஊராட்சிக்குரிய தொழிலாளர்கள் மதிப்பீடு அந்த ஊராட்சியின் கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட செலவினத்தின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

•ஒரு குடியிருப்பில் உள்ளோர் பணி செய்ய வேண்டிய இடத்திற்கு எளிதாக வரும் பொருட்டு, அக்கிராம ஊராட்சிகளில் உள்ள குடியிருப்புகள் தொகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒரு தொகுதிக்கு குறைந்தபட்சம் ஒரு பணி செய்திட வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு ஊராட்சியில் உள்ள 10 குக்கிராமங்கள், 4 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 4 பணிகள் அவ்வூராட்சியில் நடைபெறும்.

நிதி ஒதுக்கீடு

•மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கான நிதி மத்திய அரசிடமிருந்து மாநில வேலை உறுதி நிதி வழங்கப்படுகிறது. பின்னர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைகளுக்கு வழங்கப்பட்டு, சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிகளின் வங்கி கணக்குகளுக்கு பிரித்தளிக்கப்படுகிறது.

திட்ட செயல்பாடுகள்

1)மாநில அளவில் திட்டத்தினை செயல்படுத்துதல்

மாநில அரசுக்குத் திட்டத்தினை செயல்படுத்திட அறிவுரை வழங்குதல்

மாநிலத்தில் திட்டம் செயல்படுத்தப்படுவதை கண்காணித்தல்

மத்தியல் உள்ள வேலை உறுதித் திட்டக் குழுவுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல்

ஆண்டறிக்கை தயார் செய்து மாநில சட்டமன்றத்திற்கு அளித்தல்

திட்டத்திற்கான மாநில ஒருங்கிணைப்பாளர் ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர்/ ஆணையர் ஆவார்

இயக்குநர் / ஆணையர் ஊரக வளர்ச்சித் துறை மாநில வேலை உறுதித் திட்ட நிதிக்கு ஒருங்கிணைப்பாளர் ஆக செயல்படுகிறார்

2)மாவட்ட அளவில் திட்டத்தினை செயல்படுத்துதல்

மாவட்ட ஆட்சித் தலைவர் இத்திட்டத்திற்கான ஒருங்கிணைப்பாளராகவும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர், இணை திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுகின்றனர். அவர்களின் பணி பின்வருமாறு.-

 • வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் ஒருங்கிணைந்த திட்டத்தினை செயல்படுத்திட ஊராட்சிகளில் தயாரிக்கப்பட்ட செயல்திட்டத்தில் இருந்து வேலைகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கி, நிதியினை விடுவித்தல்.
 • நடைபெறும் பணிகளை கண்காணித்தல்.
 • குறைகள் மற்றும் புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல்
 • மாநில அரசுக்கு காலமுறையில் அறிக்கை அனுப்புதல்

3)வட்டார அளவில் திட்டத்தினை செயல்படுத்துதல்

வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊ) வட்டார அளவில் திட்ட அலுவலராக பணியாற்றுகிறார். அவரின் பணி பின்வருமாறு.-

 • ஊராட்சிகளிலிருந்து பணிகளுக்கான செயல்திட்டத்தினை பெற்று ஒருங்கிணைத்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்தல்
 • தொழிலாளர்களுக்கு உரிய காலத்தில் ஊதியம் வழங்குவதை உறுதி செய்தல் மற்றும் கிராம சபைகள் நடத்திட நடவடிக்கை எடுத்தல்
 • ஊராட்சிகளில் பணிகள் நடைபெறுவதை கண்காணித்தல்
 • மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கைகளை அனுப்பி வைத்தல்

4)ஊராட்சி அளவில் திட்டத்தினை செயல்படுத்ததுல்

ஊராட்சி மன்றத் தலைவர் திட்ட செயலாக்க அலுவலராக செயல்படுகிறார். அவரின் பணி பின்வருமாறு.-

 • முன்னுரிமை அடிப்படையில் பணிகளை தேர்வு செய்து, கிராம சபையின் ஒப்புதல் பெற்று வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தல்
 • வேலை அடையாள அட்டை கோருபவர்களின் விவரங்களை பதிவு செய்து அவர்களுக்கு அட்டை வழங்குதல்
 • வேலை நடைபெறுவதை மேற்பார்வையிடுதல்
 • தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குதல்
 • திட்டத்திற்கான பதிவேடுகள் பராமரித்தல்
 • வேலை நடைபெறும் இடங்களில் அடிப்படை வசதிகளை செய்து வைத்தல்
 • வேலை நடைபெறும் இடங்களில் பணியாளர்களுக்கு காயம் அல்லது விபத்து ஏற்பட்டால் அதற்கான அறிக்கையினை அனுப்பி வைத்தல்

திட்டத்தில் பயன்பெற மற்றும் திட்டத்தைப் பற்றிய இதர விவரங்களை பெற அணுகவேண்டிய அலுவலர்கள்

மாநில அளவில் : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர், சென்னை-15.

மாவட்ட அளவில் : மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை

வட்டார அளவில் : வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி)

ஊராட்சி அளவில் : ஊராட்சி மன்றத் தலைவர்

குறை தீர்க்கும் அமைப்பு மற்றும் அணுக வேண்டிய அலுவலர்கள்

வ.எண்

விபரம்

தொடர்பு அலுவலர்

கால அளவு

மேல் முறையீட்டு அலுவலர்

1

வேலை அடையாள அட்டை வேண்டி தனிநபர்கள் பதிவு செய்தல்

ஊராட்சி மன்றத் தலைவர்

15 நாட்கள்

வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.)

2

வேலை வழங்குதல்-வருடத்திற்கு ஒரு குடும்பத்திற்கு 100 நாட்கள்

ஊராட்சி மன்றத் தலைவர்

15 நாட்கள்

வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.)

3

பணியிடத்தில் அடிப்படை வசதிகள் (குடிநீர் மற்றும் முதலுதவி)

ஊராட்சி மன்றத் தலைவர்

-

வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.)

4

விபத்து அல்லது மரணம் – வேலையின் போது விபத்து ஏற்பட்டு காயமுற்றால் தலைவர் இலவச மருத்துவ உதவி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நாட்களுக்கு அரை ஊதியம் - மரணம் ஏற்பட்டால் ரூ.25,000

ஊராட்சி மன்றத் தலைவர்

-

வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.)

5

வேலையில்லா படி – வேலை கோரி 15 நாட்களுக்குள் வேலை வழங்கப்படவில்லை என்றால்

ஊராட்சி மன்றத் தலைவர்

ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமை

வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.)

6

ஊதியக் குழுவின் முன்னிலையில் ஊதியம் வழங்குதல்

ஊராட்சி மன்றத் தலைவர்

ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமை

வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.)

7

வழங்கப்படாத ஊதியத்தினை வங்கியில் செலுத்துதல்

ஊராட்சி மன்றத் தலைவர்

ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமை

வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.)

8

தொழிலாளர் குடியிருப்பு பகுதியிலிருந்து 5 கிமீக்கு மேல் பணியிடம் இருந்தால் பயணப்படி (10ரூ ஊதியம்)

ஊராட்சி மன்றத் தலைவர்

ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமை

வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.)

9

குறை மற்றும் புகார்களை தெரிவிக்க வேண்டிய இலவச தொலைபேசி எண்.1299

இணை திட்ட ஒருங்கிணைப்பாளர்

அலுவலக நேரம்

மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்

10

சமூக தணிக்கை

ஊராட்சி மன்றத் தலைவர்

வருடத்திற்கு மற்றும் சிறப்பு கிராமசபைகள்

வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.)

11

40 சதவிகிதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் 50 சதவிகித வேலைக்கு முழு ஊதியம் வழங்குதல்

ஊராட்சி மன்றத் தலைவர்

-

வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.)

ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்.

3.0
தமிழன் Oct 21, 2017 08:58 PM

வேலை செய்யவில்லை எனில் யாரிடம் முறையிடுவது

தேவதாஸ் Nov 07, 2016 12:15 PM

சம்பளம் வழங்க நியமனம் செய்யப்பட்ட நபர் செய்யும் முறைகேடுகளை வங்கி கிளையில் தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை மேற்கொண்டு எங்கு முறையீடு செய்வது

வி. முத்து லெட்சுமி Aug 31, 2016 04:19 PM

எனது கணக்கு விவரங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்

நா.மணி Jun 23, 2016 12:01 PM

வேலையை பொறுத்து ஊதியம் வழங்கப்படுகிறதா!

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top