பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பொது நூலகங்கள் - 2018 - 2019

பொது நூலகங்கள் - 2018 - 19 கொள்கை விளக்கக் குறிப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

பொது நூலகங்கள் மக்களின் கல்வி, பண்பாடு, மற்றும் தகவல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தகவல் மையங்களாகும். மாறி வரும் தகவல் தொழில்நுட்ப சூழலில், உலகளாவிய மாற்றங்களை மக்களுக்கு உணர்த்துவதில் பெரும் பங்காற்றி வருவதுடன், வாழ்நாள் கற்றல் மற்றும் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் உன்னதப் பணியின் முக்கியத்துவம் அறிந்து செயலாற்றி வருகிறது. வாசகர்களின் தேடல் மற்றும் கற்றல் வளங்கள் சார்ந்து குறைந்த செலவில் நிறைந்த மக்களின் ஆர்வம் மற்றும் தேவைக்கேற்ப புதுமையான உத்திகளைப் புகுத்தி, எல்லைகளையும், நோக்கங்களையும் விரிவுபடுத்தி செயல்படுத்துதல் என்ற இலக்கினை அடையப் பொது நூலகங்கள் அதிமுக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருகின்றன.

இலக்கு

சமுதாயத்திற்குத் தேவைப்படும் தகவல் மற்றும் அறிவாற்றலை வளர்ப்பதற்கான நெறிமுறைகளை ஆராய்தல், உருவாக்குதல் மற்றும் பகிர்ந்து கொள்ளும் பணியில் மக்களை ஒருங்கிணைத்து சமூக உருவாக்கத்தினை வலுப்படுத்துவதே இதன் இலக்கு.

தொலைநோக்கு

சமத்துவம், பாதுகாப்பு மற்றும் வரவேற்கத்தக்க உன்னதமான சூழலை உருவாக்கி, ஆக்கப்பூர்வமான தகவல் மற்றும் எண்ணங்களுடன் மக்களை ஒருங்கிணைத்தல்.

நோக்கங்கள்

• மக்களுக்குத் தரமான தகவல்களைக் குறித்த நேரத்தில் நேர்த்தியான முறையில் வழங்குதல்

*நூலகங்களில் வலுவான, பொருத்தமான வளங்களைத் உருவாக்குதல்

*புதுமையான சேவைகளுடன் மக்களை ஒருங்கிணைத்தல்.

*நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி, நூலகங்களை மேம்படுத்துதல்

*நமது கலாச்சாரக் கருப்பொருட்கள் மற்றும் ஆவணங்களை மின்னணு வடிவில் பாதுகாத்தல்

*அனைத்து சேவைகளையும் உள்ளடக்கியதாக நூலகங்களை உருவாக்குதல்

தமிழகத்தில் நூலகங்கள்

உலகத் தரத்திலான நூலக அமைப்பினை உருவாக்கி, வாசிக்கும் தன்மை, ஆராய்ச்சிப் பணிகளுக்கான உதவி மற்றும் மக்களுக்குத் தேவைப்படும் தகவல்களைப் பொலிவுடன் வழங்குவதற்கேதுவாக, தமிழ்நாடு பொது நூலகச் சட்டம், 1948 இன் படி பொது நூலகங்கள் நிறுவப்பட்டுள்ளன.

சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு வாசகர்களின் தகவல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக கீழ்க்காணும் 4,622 நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன:-.

1

கன்னிமாரா பொது நூலகம்

(மாநில மைய நூலகம்)

1

2

அண்ணா நூற்றாண்டு நூலகம்

2

3

மாவட்ட மைய நூலகங்கள்

32

4

கிளை நூலகங்கள்

1926

5

நடமாடும் நூலகங்கள்

14

6

ஊர்ப்புற நூலகங்கள்

1915

7

பகுதிநேர நூலகங்கள்

733

 

மொத்தம்

4622

கன்னிமாரா பொது நூலகம்

கன்னிமாரா பிரபு அவர்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் விதமாக 'கன்னிமாரா பொது நூலகம்” எனப் பெயரிடப்பட்டு, உருவாக்கப்பட்டது. சென்னை மாகாண ஆளுநர்சர் ஆர்தர் எலிபங்க் ஹாலக் அவர்களால் 05:12:1896 அன்று பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. கி.பி.1553க்கு முற்பட்ட தொன்மை வாய்ந்த அரிய நூல்கள், 8,49,779 நூல்களுடன், 3,500 பருவ இதழ்கள் மற்றும் 160 நாளிதழ்களை இந்நூலகம் தன்னகத்தே கொண்டுள்ளது.

இந்தியாவின் நான்கு தேசிய வைப்பு நூலகங்களில் ஒன்றான கன்னிமாரா பொது நூலகம், இந்தியாவில் வெளியாகும் அனைத்து நூல்கள், செய்தித் தாள்கள் மற்றும் பருவ இதழ்களின் ஒரு பிரதியினைப் பெற்று வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் வெளியீடுகள் மற்றும் பதிப்புகளின் வைப்பு நூலகமாகவும் செயலாற்றி வருகிறது.

கன்னிமாரா பொது நூலகம் - சென்னை (பழையபடம்)

பருவ இதழ் பிரிவு, இந்தியா முழுவதும் அகில இந்திய மொழிகளில் வெளியிடப்படும் நூல்களைக் கொண்ட மொழியியல் பிரிவு, பாடநூல்கள் பிரிவு, குடிமைப்பணி கல்வி மையம், அரிய நூல்கள் பிரிவு ஆகிய சில பிரிவுகள் பொது மக்களால் தொடர்ந்து பயன்படுத்தப்படும் பிரிவுகள் ஆகும். இணைய இதழ்கள் மற்றும் மின் புத்தகங்களின் அரிதான தொகுப்புகளடங்கிய இலக்கமுறை சேவையினை 24 மணி நேரமும் பயனாளிகளுக்கு வழங்கி வருகிறது.

இந்நூலகப் பராமரிப்புப் பணிகளுக்காக தமிழக அரசால் தொடர் செலவினத்தில் 50% மற்றும் தொடராச் செலவினத்தில் 1/3 பங்கு செலவிடப்பட்டு வருகிறது. எஞ்சிய செலவினம் மைய அரசால் வழங்கப்படுகிறது. 2017-18 ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்ட மொத்த மானியம் ரூ.44.00 இலட்சம் ஆகும்.

அண்ணா நூற்றாண்டு நூலகம்

அண்ணா நூற்றாண்டு நூலகம் மிகுந்த கலைநயத்துடன், பசுமைக் கட்டட அமைப்பிற்கான ஆற்றலுடன் 3.75 இலட்சம் சதுர அடியில் ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாக சென்னை, கோட்டூர்புரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்நூலகம் சுமார் 5.71 இலட்சம் பலதரப்பட்ட பொருள்கள் அடங்கிய நூல்களை உள்ளிருத்தி வாசகர் சமூகத்திற்கு சேவையாற்றிவருகிறது.

அண்ணா நூற்றாண்டு நூலகம் - சென்னை

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள நூல்களின் தொகுப்பு முழுவதும் இணைய வழியாக எந்த இடத்திலிருந்தும் எளிமையாகவும், விரைவாகவும் அணுகும் வகையில் இந்நூலகத்தில் ஒருங்கிணைந்த நூலக மேலாண்மை அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நூல்களுக்கு RFID குறியிடுதல் முறையினால் தானியங்கி செயல்பாட்டின் மூலம் நூல்கள் பாதுகாக்கப்படுகின்றன. கண்காணிப்புப் புகைப்படக் கருவிகள் தகுதியான இடங்களில் நிறுவப்பட்டுள்ளதன் வாயிலாக நூலக வளாகத்தில் பாதுகாப்பு சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நூலகத்தில் தனித்துவமாக விளங்கும் பார்வையற்றோருக்கான பிரிவில் 2,000 க்கும் மேற்பட்ட பதிவுபெற்ற உறுப்பினர்கள் மற்றும் 950 க்கும் மேற்பட்ட இணையதள உறுப்பினர்கள் (braileacl.googlegroups.com) உள்ளனர். இப்பிரிவில் 2600 க்கும் மேற்பட்ட பிரெய்லி நூல்கள், ஒலித்தொகுப்பின் குறுந்தகடுகள், DVD மற்றும் 11 TB பிற இலக்கமுறைப் பொருட்கள் உள்ளன.

15,000 சதுர அடியில் பரந்து விரிந்து, 1.6 இலட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள், பலதரப்பட்ட ஊடக உபகரணங்கள், செயற்கை முறையில் அமைக்கப்பட்ட மரம் ஆகியவற்றைக் கொண்ட குழந்தைகள் பிரிவு 4 முதல் 14 வயதுடைய குழந்தைகள் மகிழ்ச்சியாக, கருத்தாழத்துடன் படிப்பதற்கேற்ற இடமாகவும், திறமைகளை வளர்ப்பதற்கான மேடையாகவும் உள்ளது. கதை சொல்லுதல், வினாடிவினா, அறிவியல் ஆய்வுகள், பொம்மலாட்டம், சதுரங்க வகுப்புகள் மற்றும் பிற சிறப்பு நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடத்தப்பட்டு வருகிறது.

அண்ணா நூற்றாண்டு நூலகம் - குழந்தைகள் பிரிவு

கீழ்த்திசை சுவடிகள் நூலகப் பிரிவில், விலை மதிப்பற்ற 50,180 பனை ஓலைச் சுவடிகள் மற்றும் 22,134 காகிதச் சுவடிகள் உள்ளன. இந்நூலகம் தமிழ், சமஸ்கிருதம் மற்றும் பிற தொன்மையான இந்தியக் கலாச்சாரம் சார்ந்த துறைகளில் முனைவர் மற்றும் ஆய்வு நிலை நிறைஞர் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கான ஆராய்ச்சி மையமாக சென்னைப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

2017-18 ஆம் நிதியாண்டில் அண்ணா நூற்றாண்டு நூலகப் பராமரிப்புப் பணிகளுக்காக ரூ.449.80 இலட்சம் செலவிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம்

உலகப் புகழ் பெற்ற அறிவுக் களஞ்சியமாகவும், அரிய பனை ஓலைச் சுவடிகள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் பழமை வாய்ந்த அரிய நூல்களைக் கொண்டதாக "தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வுமையம்” திகழ்கிறது.


சரசுவதி மகால் நூலகம் - தஞ்சாவூர்

இந்தியாவின் பழமை வாய்ந்த நூலகங்களில் ஒன்றான இந்நூலகம் 1535 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, மன்னர் சரபோஜி (1798-1832) காலத்தில் தனது புகழின் உச்சத்தை அடைந்தது. 1918 ஆம் ஆண்டு முதல் இந்நூலகம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நூலகத்தில் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், மராட்டியம் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதப்பட்ட சுமார் 47,334சுவடிகளில் 24,165பனை ஓலைச் சுவடிகள் மற்றும் 23,169 காகிதச் சுவடிகள், 45,000 புத்தகங்கள், கலை, பண்பாடு மற்றும் இலக்கியம் சார்ந்த வரைபடங்கள், ஓவியங்கள் மற்றும் சித்திரங்கள் உள்ளன. 3,578 பழமையான, மதிப்புமிக்க, அரிய கையெழுத்துப் பிரதிகள் இலக்கமுறைப்படுத்தப்பட்டன. தஞ்சாவூரின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒலி-ஒளிக் காட்சி மற்றும் ஆவணப்படம் இந்நூலகத்தில் திரையிடப்படுகிறது.

2013 ஆம் ஆண்டில் இந்நூலகத்தை சர்வதேச ஆராய்ச்சி நூலகமாக தரம் உயர்த்திடும் பொருட்டு, மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலைமையின் கீழ் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டம், 1975 இன்படி, 1986 இல் அன்றைய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் காலஞ்சென்ற டாக்டர்.எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களின் வழிகாட்டுதலின் படி தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம் தமிழ்நாடு பதிவாளர் சங்கத்தின் கீழ் பதிவுபெற்ற சங்கமாகப் பதிவு செய்யப்பட்டது. இந்நூலகத்தின் வளர்ச்சிக்கும், பணியாளர்களின் நலனுக்குமான பராமரிப்பு மானியத்தை தமிழ்நாடு அரசு ரூ.40 இலட்சத்திலிருந்து ரூ.75 இலட்சமாக உயர்த்தியுள்ளது. மேலும், 2017-18 ஆம் நிதியாண்டில் பணியாளர்களின் ஊதியம் மற்றும் படிகள் உட்பட பிற செலவினங்களுக்கான பராமரிப்பு மானியத் தொகையாக ரூ1765இலட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

டாக்டர். உவே.சாமிநாத அய்யர் நூலகம் , சென்னை

தமிழறிஞரும், நூல் ஆராய்ச்சியாளருமான டாக்டர்.உ.வே.சாமிநாத அய்யர் அவர்களின் நினைவாக அவரது புதல்வர் திரு.சா.கலியாணசுந்தரம் மற்றும் திருமதி.ருக்மணி தேவி அருண்டேல் ஆகியயோர் பெரும் முயற்சியால் 05.07.1943 அன்று டாக்டர் உ.வே.சாமிநாத அய்யர் நூலகம் தொடங்கப்பட்டது. இந்நூலகத்திற்கான புதிய கட்டடம் 2.04.1967 அன்று திறக்கப்பட்டது. இந்நூலகத்தில் தொன்மை வாய்ந்த 2,200 அரிய தமிழ் நூல்கள் ஓலைச்சுவடிகளாகவும் மற்றும் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களின் கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன.

மேலும், தமிழறிஞர்கள் பலர் டாக்டர்.உ.வே.சாமிநாத அய்யர் அவர்களுக்கு எழுதிய 3,421 கடிதங்கள், தனிப்பாடல்கள், 1883 முதல் 1939 முடிய டாக்டர்.உ.வே.சாமிநாத அய்யர் அவர்கள் எழுதிய நாட்குறிப்புகள் மற்றும் பயன்படுத்திய பொருட்கள், 37,355 புத்தகங்கள், 855 கையெழுத்துப் பிரதிகள் மற்றும் சேகரித்த 2170 பனை ஓலைச் சுவடிக் கட்டுகள் போன்றவற்றை இந்நூலகம் பாதுகாத்து வருகிறது. 1923 ஆம் ஆண்டிலிருந்து கிடைக்கப்பெற்ற பழமையான, அரிய, அச்சிடப்பட்ட புத்தகங்கள் மற்றும் கடிதங்கள் இலக்கமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்நூலகத்தின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பிற்கும், பணியாளர்களின் நலனுக்கும் அரசு ஒவ்வோர் ஆண்டும் மானியம் அனுமதியளித்து வருகிறது. 2017-18 ஆம் நிதியாண்டில் மானியமாக ரூ17,88 இலட்சம் வழங்கியுள்ளது.

மறைமலை அடிகள் நூலகம்

புத்தகங்கள் மீது தீராத பற்றுக் கொண்ட மறைமலை அடிகள், தமது வருமானத்தின் பெரும் பகுதியை ஆய்வு நோக்கிலான வாசகர்களுக்குப் பயன் தரும் நூல்களை வாங்கி, பாதுகாத்து வந்ததைத் தொடர்ந்து, அன்னாரது மறைவுக்குப் பின் 1958 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ வி.சுப்பையா பிள்ளை என்பவரால் மேற்படி நூல்களுடன் பல அரிய வகை நூல்களையும் சேர்த்து, சென்னை லிங்கி செட்டி தெருவில் மறைமலை அடிகள் நூலகம்" துவக்கப்பட்டது. தற்போது இந்நூலகம் கன்னிமாரா பொது நூலக வளாகத்தில் செயல்பட்டு வருகின்ற போதிலும், தொடர்ந்து தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நூலகத்தில் உள்ள 80,000 புத்தகங்களில் 1400 புத்தகங்கள் பழமை வாய்ந்த அரிய நூல்களாகும். ஒவ்வோர் ஆண்டும் ரூ.1.00 இலட்சம் பராமரிப்புமானியமாக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்ட மைய நூலகங்கள்

தமிழ்நாடு பொது நூலக விதிகள் 1950, விதி எண். 45 (2) (அ) மற்றும் 45(4) (அ) இன்படி மாவட்ட மைய நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 32 மாவட்ட மைய நூலகங்கள் பின்தங்கிய மற்றும் ஏழை மக்களின் கல்வித் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கும், தரம் வாய்ந்த அறிவு சார்ந்த தகவல்களை வழங்கும் வகையிலும் செயலாற்றி வருகின்றன. மிகக் குறைந்த கட்டணத்தில் ஒருவர் நூலக உறுப்பினராக முடியும். நூலகத்தின் அண்மையில் வசிக்கும் எவரும், காப்புத்தொகை ரூ.50 செலுத்தி நூலகத்தின் உறுப்பினராகப் பதிவு செய்து, ஒரே நேரத்தில் அதிகபட்சமாக மூன்று நூல்களை இரவல் பெற்றுக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டு வருகிறது. எவ்வித பாகுபாடும் இன்றி ஒவ்வொரு உறுப்பினரிடமிருந்தும் ஆண்டு சந்தாவாக ரூ.10 பெறப்படுகிறது. இதுநாள் வரை 10,12,181 நபர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர் மற்றும் 32,73,611 வாசகர்கள் நூலகங்களை பயன்படுத்தி உள்ளனர். இந்நூலகங்கள் பல்வேறு துறை சார்ந்த 31,42,210 நூல்கள் மற்றும் விரிவான பத்திரிகைத் தொகுப்புகளுடன் செயல்படுகின்றன. ஒவ்வொரு மாவட்ட மைய நூலகமும் பருவ இதழ்கள், பார்வைக் குறிப்பு நூல்கள், குடிமைப்பணி தேர்வுகள் , பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் சொந்த நூல்கள் வாசிக்கும் பிரிவுகளுடன் இணையவசதி செய்யப்பட்டுள்ளது.

கிளை நூலகங்கள்

பெருமளவிலான மக்கள் தொகைக்குச் சேவையாற்றும் நோக்கில், 5,000 முதல் 50,000 வரை மக்கள் தொகை கொண்ட நகர மற்றும் கிராமப்புற பகுதிகளில் அமைக்கப்பட்டதே கிளை நூலகங்கள். தற்போது சிறந்த உட்கட்டமைப்பு மற்றும் வளங்கள் கொண்டுள்ள 1,926 கிளை நூலகங்கள் மூலம் 56,12,613 உறுப்பினர்களும் 2017-18ஆம் ஆண்டில் மட்டும் 3,87,31,144 பார்வையாளர்களும் பயன் பெற்றுள்ளனர். மேலும், இந்நூலகங்களில் குழந்தைகள், மாணாக்கர்கள், பெண்கள், பணிநாடுவோர் மற்றும் முதியோர்களுக்கு சேவைகள் வழங்கப்படுகின்றன. இத்துறை மூலம் நடைமுறைப் படுத்தப்பட்ட "வகுப்பறை நூலகம்” என்ற திட்டத்தின் வாயிலாக 3,593 பள்ளிகளைச் சேர்ந்த 16,94,367 மாணாக்கர்கள் பயன்பெற்றுள்ளனர்.

ஊர்ப்புற நூலகங்கள்

கிராமப்புற மக்களை உறுப்பினர்களாகச் சேர ஊக்குவிக்கும் உன்னதத் திட்டத்தின்படி, 1996 ஆம் ஆண்டு முதல் 1915 ஊர்ப்புற நூலகங்கள் மாநிலம் முழுவதும் பரவலாக அமைக்கப்பட்டிருக்கின்றன. சமுதாயத்தில் உயர் மதிப்பைப் பெற களம் அமைத்து நல்கும் இடமாகவும், மக்களை ஒருங்கிணைக்கும் இடமாகவும் செயல்படும் ஊர்ப்புற நூலகங்களிலுள்ள 102,81,883 நூல்களின் மூலம் 17,77,976 உறுப்பினர்கள் மற்றும் 1,61,24,317 வாசகர்கள் பயன் பெற்றுள்ளனர். மின்னணு யுகத்தில் நவீன தொழில்நுட்ப வசதியினைப் பயன்படுத்தி ஊர்ப்புற நூலகங்களில் கணினி வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நடமாடும் நூலகங்கள்

மலைப்பகுதிகளில் வாழும் ஏழை மக்களைச் சென்றடையும் வகையில், புத்தகங்கள் மற்றும் பருவ இதழ்களைத் தன்னகத்தே தாங்கி, வாகனத்தின் மூலம் மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களில் நடமாடும் நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தொகுக்கப்பட்ட புத்தகங்கள், நில வரைபடங்கள், குறுந்தகடுகள் போன்றவற்றுடன் படைப்பாற்றல், தொடர் முன்னேற்றம் மற்றும் சமூக ஒத்துழைப்பை உருவாக்கும் பணியில் ஆர்வம் கொண்டு செயல்படுத்தப்பட்டதன் விளைவாக, 1,33,099 பார்வையாளர்கள் மற்றும் 26,019 உறுப்பினர்கள் நடமாடும் நூலகங்கள் மூலம் பயன்பெற்றுள்ளனர்.

பகுதிநேர நூலகங்கள்

வளர்ந்து வரும் மாநிலத்தில், முழுமையான கல்வியறிவு என்ற இலக்கினை அடைவதற்கு, அடித்தட்டு நிலையிலும் பயனுள்ள பொது நூலகச் சேவையை செயல்படுத்துவது இன்றியமையாதது என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு பொது நூலக விதிகள், 1950, விதி எண்.45(4)(சி) இன்படி ஒவ்வொரு கிராமத்திலும் பகுதி நேர நூலகங்கள் அல்லது புத்தக விநியோக மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் உள்ள 733 பகுதிநேர நூலகங்களின் வழியாக 2017-18 ஆம் ஆண்டில் 2,45,694 உறுப்பினர்கள் மற்றும் 25,37,602 வாசகர்கள் பயனடைந்துள்ளனர்.

மாநில ஆதார வள மையம்


பிசியோதெரப்பி - மாநில ஆதார வள மையம் - சென்னை

சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க, மாநில ஆதார வளமையத்தில் ரூ.17.00 இலட்சம் செலவில் நூலகப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள் புத்துயிர் பெற்று ஆற்றலை வளர்க்கும் நோக்கத்தில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆதார வளங்களுடன் இம்மையம் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வகைப்பட்ட குறைபாடுகள், சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதற்கு இம்மையத்தில் தனிப்பிரிவு உள்ளது.

நிதி ஆதாரம்

நூலக வரி

பொது நூலகங்களின் செயல்பாடுகளுக்கான முக்கிய வருவாய் வசூலிக்கப்படும் வீட்டு வரி / சொத்து வரியில் பெறப்படும் நூலக வரியாகும். தமிழ்நாடு பொது நூலகச் சட்டம், 1948 இல் பிரிவு 12 (1) (a) இன்படி, 1950 ஆம் ஆண்டிலிருந்து ரூபாய்க்கு 3 காசுகள் வீதம் வசூலிக்கப்பட்டு வந்த நூலக வரியானது, நூலக ஆணைக்குழுக்களின் அதிகரித்து வரும் தேவைகளை நிறைவு செய்வதற்காக, அரசாணை (நிலை) எண்.252, கல்வித் துறை, நாள் 22.02.1972 இன்படி, 01.041972 முதல் ரூபாய்க்கு 5 காசுகள் என உயர்த்தியும், அரசாணை (நிலை) எண்.492, கல்வித் துறை, நாள் 19.05.1992 இன்படி, 01.04.1992 முதல் ரூபாய்க்கு 10 காசுகள் எனவும் உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நூல்கள் வாங்குதல், செய்தித் தாள்கள் / பருவ இதழ்கள் வாங்குதல், தகவல் தொழில்நுட்ப வசதிகள், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள், புதிய நூலகக் கட்டடங்கள் கட்டுதல் / பராமரித்தல், அரிய மற்றும் பழமையான நூல்களை மின்னுருவாக்கம் செய்தல், நூலகங்களை அறிவுசார் தகவல் மையங்களாக மாற்றுதல், இணையதள சேவைகளை ஏற்படுத்துதல் உட்பட அனைத்து பணிகளுக்குமான செலவினங்கள் யாவும் நூலக வரியிலிருந்தே மேற்கொள்ளப்படுகின்றன. 2017-18 ஆம் நிதியாண்டில் ரூ.138.24 கோடி நூலக வரி வசூலிக்கப் பட்டுள்ளது.

இராஜா ராம் மோகன் ராய் நூலக அறக்கட்டளை

மானியம்

இராஜா ராம் மோகன் ராய் நூலக அறக்கட்டளை இந்தியாவில் உள்ள பொது நூலகங்கள் யாவற்றையும் கண்காணித்து, வளர்ச்சிப் பணிகளை மேம்படுத்தி, ஒருங்கிணைக்கும் பணியில் செயல்படும் மைய அரசின் நிறுவனமாகும். இவ்வறக்கட்டளை துவங்கப்பட்ட 1972 ஆம் ஆண்டு முதல், பொது நூலகம் மற்றும் தனியார் நூலகங்களுக்கான தொடர் வளர்ச்சியினை மேம்படுத்தி, பொது மக்களுக்குப் பயன் தரும் வகையில் ஏராளமான வசதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. மாநில நூலகங்களுக்கான நிதியுதவி இணை மானியம் மற்றும் இணையில்லா மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. 2017-18 ஆம் நிதியாண்டில் இத்துறைக்கு ரூ.600 இலட்சம் நிதியுதவி பெறப்பட்டுள்ளது.

பொதுநூலகங்களின் உட்கட்டமைப்பு

பொது நூலகங்களுக்கு வரையறுக்கப்பட்ட அடிப்படை நிதி ஆதாரங்களைக் கொண்டு, துறையின் ஒருங்கிணைந்த தொடர் பெருமுயற்சியின் காரணமாக, 1,779 நூலகங்கள் சொந்தக் கட்டடங்களிலும், 2,511 நூலகங்கள் இலவசக் கட்டடங்களிலும், 318 நூலகங்கள் வாடகைக் கட்டடங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2017-18 ஆம் ஆண்டில் நூலகத்திற்கான புதிய கட்டடங்களுக்கு ரூ.408.50 இலட்சம் மற்றும் நூலகக் கட்டடப் பராமரிப்புப் பணிகளுக்கு ரூ.150 இலட்சம் செலவிடப்பட்டுள்ளது.

நூல்கள் மற்றும் பருவ இதழ்கள் வாங்குதல்

வாசகர்களின் தேவை மற்றும் அன்றாடம் மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப, அறிவியல், சமூக வரலாறு, இலக்கியம், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் அறிவு சார்ந்த தேடல்களைக் கருத்தில் கொண்டு நூல்கள் மற்றும் பருவ இதழ்கள் நூல் தேர்வுக் குழுவினால் தேர்வு செய்யப்படுகின்றன. ஒரு ஆண்டின் நூலக வரியிலிருந்து 25% நூல்கள் மற்றும் 6.5% பருவ இதழ்கள் வாங்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்டுதோறும் ரூ.300 இலட்சம் மதிப்பில் இராஜா ராம் மோகன் ராய் நூலக அறக்கட்டளை நிறுவன நிதியுதவியின் வாயிலாகவும் நூலகங்களுக்கு நூல்கள் வழங்கப்படுகின்றன.

கணினிமயமாக்குதல்

வளர்ந்து வரும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு தானியக்கத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, முன்னுரிமை அளித்து பொது நூலகங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. இதனால், நூலகச் சேவைகளின் தரம் உயர்ந்துள்ளதுடன், தகவல் தேடல் பணிகளும் எளிமையாக்கப்பட்டுள்ளது. இணையதள வசதியுடன் கூடிய கணிப்பொறிப் பிரிவு 32 மாவட்ட மைய நூலகங்களிலும், 191 முழுநேர கிளை நூலகங்களிலும், ஊர்ப்புறங்களில் செயல்படும் 27 நூலகங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனைத் தவிர்த்து, 123 கிளை நூலகங்களிலும் கணிப்பொறி மற்றும் அதன் உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன.

குடிமைப்பணி கல்வி மையம்

பொது நூலகங்களை மக்களின் மைய நிறுவனங்களாக மாற்றும் பொருட்டு குடிமைப்பணி கல்வி மையங்கள் பொது நூலகங்களில் அமைக்கப்பட்டுள்ளன. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்குத் தேவையான நூல்களை அணுகி பெறுவதற்கும், பிற போட்டியாளர்களுடன் இணைந்து பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பும் இக்கல்வி மையங்களில் உருவாக்கப்படுகிறது. 32 மாவட்ட மைய நூலகங்கள் உட்பட 285 பொது நூலகங்களில் குடிமைப்பணி கல்வி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசுத் துறைகள் சார்ந்த பணிகளுக்குரிய போட்டித்தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு, போட்டித் தேர்வுகளுக்கான விண்ணப்பங்களை கணினி வழியில் பதிவு செய்யும் வசதி கன்னிமாரா பொது நூலகம் மற்றும் மாவட்ட மைய நூலகங்களில் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், 32 மாவட்ட மைய நூலகங்களில் ரூ.32 இலட்சம் மதிப்பீட்டில் போட்டித் தேர்வுப் பயிற்சி மையங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

வாசகர்வட்டம்

சமூகத்தின் கலை மற்றும் கலாச்சார வளர்ச்சியில் கவனம் செலுத்தும் வகையில், பொது நூலகத்தின் ஒரு முக்கியப் பங்காக வாசகர் வட்டம் உருவாக்கப்படுகிறது. கலை, கலாச்சார நிகழ்ச்சிகள், இலக்கியச் சொற்பொழிவு, இலக்கிய விவாதங்கள், பட்டிமன்றம், கட்டுரை, மேடைப் பேச்சு மற்றும் வினாடி வினா ஆகிய நிகழ்ச்சிகள் வாசகர் வட்டங்கள் வாயிலாக நடத்துவதன் மூலம் அடித்தட்டு மக்களைச் சென்றடைவதற்குப் பாலமாக இவ்வமைப்பு செயல்படுகிறது. அறிவுத் தாகத்தில் ஒத்த நண்பர்கள் மற்றும் மனிதர்களுக்கு இது சிறந்த இடமாகத் திகழ்கிறது.

உறுப்பினர்கள் வாசகர்கள் புரவலர்கள்

பொது மக்களிடையே கல்வியறிவு மற்றும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்து, அன்றாட நூலக வாசகர்களுக்கு பல்வேறு துறைகளின் தகவல் மற்றும் அறிவை மேம்படுத்தும் வகையில் சிறப்பு இயக்கம் ஏற்பாடு செய்யப்பட்டதன் விளைவாக, கடந்த ஆண்டுகளில் 74,28,694 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒருவர் நூலகத்திற்கு ரூ.1,000/- வழங்குவதன் மூலம் புரவலராகவும், ரூ.5,000/- செலுத்துவதன் வாயிலாக பெரும் புரவலராகவும் மற்றும் ரூ.10,000/- வழங்குவதன் மூலம் கொடையாளராகவும் ஆகிறார்கள். இதுவரை 1,17,278 பேர் புரவலராகவும் மற்றும் 869 பேர் பெரும் புரவலராகவும், 328 பேர் கொடையாளராகவும் ரூ.1,249.03 இலட்சம் பங்களித்துள்ளனர். இந்த நிதியானது நிரந்தர வைப்பாக வங்கியில் செலுத்தப்பட்டு, அதன் மூலம் பெறப்படும் ஆண்டு வட்டித் தொகை நூலகங்களை வலுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

பொது நூலகங்களின் புள்ளிவிவரம்

ஆண்டு

2014-15

2015-16

2016-17

2017-18

நூலிருப்பு

6 கோடி

6.39 கோடி

7.76 கோடி

8.15 கோடி

வாசகர்கள்

7.02 கோடி

8.28 கோடி

8.44 கோடி

8.49 கோடி

உறுப்பினர்கள்

68.83 இலட்சம்

69.95 இலட்சம்

72.88 இலட்சம்

74.29 இலட்சம்

புரவலர்கள்

99,114

1,06,768

1,10,623

1,17,278

நூல்களில் பயன்பாடுகள்

6.88 கோடி

6.45 கோடி

6.46 கோடி

8.79 கோடி

நூலக நிகழ்ச்சிகள்

நூலகர் தினம்

நூலகவியலில் தனது அடிப்படை சிந்தனையின் மூலம் பிரசித்திபெற்ற ஐந்து விதிகளை வகுத்த நூலகவியலின் தந்தை முனைவர்.எஸ்.ஆர். அரங்கநாதன் அவர்களுக்கு மரியாதை மற்றும் புகழ் மிக்க அஞ்சலி செலுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு திங்கள் 12 ஆம் நாள் நூலகர் தினம்" இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. மக்களின் சமூக மற்றும் தொழில் நுட்பத் தகவல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஏற்ற வகையில் தொடர்ச்சியாக செயலாற்ற வேண்டுமென்பதனை நூலகர்களுக்கு உணர்த்த இது உதவுகிறது. இந்நாளில் மாநிலம் முழுவதும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணிகள் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் போன்றவை அனைத்து மாவட்ட ஆட்சியர்களின் மிகுந்த ஒத்துழைப்புடன் துறையால் நடத்தப்படுகிறது.

நூலகதினம்

நூலக வளங்களின் பயன்பாட்டினை அதிகரிக்கவும், சமூகத்தில் நூலகத்தின் பங்கினை உறுதி செய்யவும், அதன் முக்கியத்துவத்தை உணரும் வகையில், ஆண்டுதோறும் மே திங்கள் 2 ஆம் நாள் நூலக தினம்" கொண்டாடப்படுகிறது.

தேசிய நூலக வாரவிழா

இச்சமூகத்திற்கு தரமான புத்தகங்களை நன்கொடையாக வழங்கும் எழுத்தாளர்களை அங்கீகரிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் திங்கள் 14 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை தேசிய நூலக வார விழா கொண்டாடப்படுகிறது. சமூக ஆதரவைத் திரட்டும் வகையில் இசை நிகழ்ச்சிகள், விழிப்புணர்வுப் பேரணிகள், இலக்கியச் சொற்பொழிவுகள், விவாதங்கள், புதிய எழுத்தாளர்கள் மற்றும் புதிய நூல்கள் அறிமுகம் போன்றவை நடத்தப்படுகின்றன.

உலகப் புத்தக தினம்

உலகப் புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர் A.வில்லியம் ஷேக்ஸ்பியர் அவர்களால் வழங்கப்பட்ட மதிப்புமிக்க சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக, அவரது பிறந்த நாளான ஏப்ரல் 23 ஆம் நாள் உலகப் புத்தக தினம் மற்றும் காப்புறுதி தினமாகக் கொண்டாட யுனெஸ்கோ அறிவித்துள்ளதனைத் தொடர்ந்து, புத்தகங்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உலகப் புத்தக தின விழா ஆர்வத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஒவ்வொருவருக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கு வாசிப்பின் இனிமை மற்றும் எழுத்தாளர்களின் ஈடுசெய்ய முடியாத பங்களிப்பின் பலன்களைப் புதுப்பித்து ஊக்கமளிக்கப்படுகிறது.

புத்தகக் கண்காட்சி மற்றும் திருவிழா

ஆண்டுதோறும் நடைபெறும் இலக்கிய நிகழ்ச்சியான புத்தகக் கண்காட்சி மற்றும் திருவிழாவில் நடைபெறும் எழுத்தாளர்களின் உரைகள், குழு விவாதங்கள், படைப்பாற்றல் ஆகிய நிகழ்வுகளால் பிரசித்திபெற்ற எழுத்தாளர்களையும், ஆயிரக்கணக்கான புத்தக விரும்பிகளையும் ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கிறது. கடந்த பத்து ஆண்டு கால வரலாற்றில் தேசிய புத்தகத் திருவிழாவானது, மாநிலத்தில் நடைபெறும் இலக்கிய நிகழ்வுகளுள் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. இந்நிகழ்வுளின் மீது பெரிதும் ஆர்வம் கொண்ட வாசகர்களைக் கருத்தில் கொண்டு, கன்னிமாரா பொது நூலகத்தில் நிரந்தரப் புத்தகக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் பொன்மாலைப்பொழுது

தமிழ் இலக்கியம், திரைப்படம், ஊடகம், மருத்துவம் என பல்வேறு களங்களில் உயர்ந்து, புகழ் பெற்ற பிரமுகர்களின் உரையாடல்கள் மூலம் பார்வையாளர்களின் ஆர்வம் மற்றும் புதுமை உணர்வுகளைத் தூண்டி கற்பனை வளத்தை உருவாக்குவதற்கும் ஒவ்வொரு சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு 'பொன்மாலைப் பொழுது” என்ற இலக்கிய நிகழ்ச்சி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.youtube.com/aclchennai வழியாக ஒளிபரப்பப்படுகிறது.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் போட்டித் தேர்வாளர்களுக்கான வழிகாட்டும் திட்டம்

இந்திய ஆட்சிப் பணி / இந்திய காவல் பணி, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், இரயில்வே தேர்வு வாரியம், வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம், ஆசிரியர் தகுதித் தேர்வு, வங்கித் தேர்வுகள் போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்து வரும் போட்டியாளர்களின் எதிர்கால சாதனைகளுக்கு, உள்ளார்ந்த திறன்களை ஊக்குவித்து வளர்ப்பதற்கான வழிகாட்டும் திட்டங்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை காலை 11.00 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறுகின்றன. இந்நிகழ்ச்சியின் மூலம் இந்திய ஆட்சிப் பணியில் மூத்த அலுவலர்கள், துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் போட்டியாளர்களுடன் தொடர்பு கொண்டு விழிப்புணர்வு, தெளிவு மற்றும் அறிவாற்றலுக்கான நுண்ணறிவு ஆகியவற்றை வழங்குகின்றனர். இந் நிகழ்வுகளை நேரலையாகவும், பதிவுகளாகவும் நூலகத்தின் www.youtube.com/aclchennai என்ற வலைத்தளத்தில் காணலாம்.

பயிலரங்கம் மற்றும் கருத்தரங்குகள் - நூலகம் மற்றும் தகவல் அறிவியல் வல்லுநர்களுக்கானவை

தேசிய மாநாடு, கருத்தரங்கம், சிறப்பு விரிவுரைகள், பட்டறைகள், நூலக வார விழாக் கொண்டாட்டங்கள் ஆகியவற்றின் மூலம் நூலகம் மற்றும் தகவல் அறிவியலாளர்களுக்கு தொழில்சார் அறிவு மற்றும் திறன்களை வழங்குவதில் அண்ணா நூற்றாண்டு நூலகம் முக்கிய பங்கு வகிக்கிறது.

இலக்கமுறை நூலகம்

பாரம்பரிய நூலகத்திலிருந்து மாறுபட்ட, உரை, காட்சி, ஒலி / ஒளி சார்ந்த இலக்க முறை கருவிகளின் தொகுப்புகளுடன் ரூ.1.43 கோடி செலவில் மின்னணு நூலகம் ஈரோட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வாசிக்கும் பிரிவு, குறிப்பெடுக்கும் பிரிவு, இணைய வசதியுடன் கூடிய கணிப்பொறி பிரிவில் மின் புத்தகங்கள், மின் இதழ்கள், மின் கலைக்களஞ்சியங்கள், மின் ஆய்வறிக்கைகள் மற்றும் நிகழ்நிலை பொது அணுகல் அட்டவணை (OPAC) ஆகிய வசதிகள் உள்ளன.

கன்னிமாரா பொது நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் 32 மாவட்ட மைய நூலகங்களில் எல்லா மொழிகளிலும் வெளிவரும் அனைத்து மின் இதழ்கள் இங்கு உள்ளன. கிராமப்புற மாணாக்கர்கள் முன்னணி ஆங்கில இதழ்களை அணுகிப் படிப்பதற்கும், தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் ஈடுபட ஊக்கப்படுத்துவதற்கும் உதவும் வகையில் 32 மாவட்ட மைய நூலகங்களுக்கு 61 முன்னணி பருவ இதழ்கள், 241 முழு நேர கிளை நூலகங்களுக்கு 34 பருவ இதழ்கள், 320 கிளை நூலகங்களுக்கு 19 பருவ இதழ்கள் சந்தா செலுத்தி, பதிவு செய்து, வாங்கிவழங்கப்பட்டுள்ளன.

2017-18 ஆம் ஆண்டில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திடமிருந்து பெறப்பட்ட ரூ.130 கோடி நிதியுதவி மூலம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மின் பருவ இதழ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, தேசிய மற்றும் சர்வதேச அளவில் முக்கியமான அச்சு மற்றும் இணையவழி நூல்கள் வாங்கப்பட்டுள்ளன.

2017-18ஆம் ஆண்டின் புதிய முயற்சிகள்

* கோயம்புத்தூர், கரூர், வேலூர், திருச்சிராப்பள்ளி, விருதுநகர், திருநெல்வேலி, நாமக்கல் மற்றும் கடலூர் ஆகிய மாவட்ட மைய நூலகங்களில் திறம்பட செயலாற்றும் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் போன்று, இதர 24 மாவட்ட தலைநகரங்களில் செயல்படும் மாவட்ட மைய நூலகங்களில் ரூ.24 இலட்சம் செலவில் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன

* யாழ்ப்பாணம் நூலகம் மற்றும் மலேசியா நூலகம் போன்ற தமிழர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் உள்ள நூலகங்களுக்கு ஒரு இலட்சம் அரிய தமிழ் நூல்கள் நன்கொடையாக வழங்க சேகரிக்கப் பட்டுள்ளது

* புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்களின் அனைத்து பங்கேற்புடன் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன

* பள்ளி மாணாக்கர்களின் வாழ்நாள் கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு 12 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் நடமாடும் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டுள்ளன

சிறந்த சேவைக்கான விருதுகள்

முனைவர். எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது

நூலக அறிவு மேலாண்மைக் கருத்தாக்கத்தில் சிறந்து விளங்கும் நூலகர்களுக்கு முனைவர்.எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதாக ரூ.2,000/- பணமுடிப்புடன் கூடிய வெள்ளிப் பதக்கம் வழங்கப்படுகிறது. உறுப்பினர்கள், வாசகர்கள், புரவலர்கள் மற்றும் பெரும் புரவலர்களின் எண்ணிக்கையினை அதிகரித்து நூலக வளர்ச்சியின் பொருட்டு உண்மையாகவும், உற்சாகத்துடனும் பணியாற்றும் நூலகப் பணியாளர்களை உவந்து பாராட்டி, உற்சாகப்படுத்தும் வகையில் இவ்விருதானது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. 14.11.2017 அன்று அர்ப்பணிப்புடன் பணியாற்றிய 33 நூலகர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த நூலகங்களுக்கான கேடயம்

நூலகங்களின் அறிவுசார் நுட்பங்களை மேம்படுத்தும் கூட்டு முயற்சிகளை ஊக்கமளித்து, ஊக்குவிக்கும் பொருட்டு 2012-13 ஆம் ஆண்டிலிருந்து சிறந்த நூலகங்களுக்கு கேடயங்கள் வழங்கப்படுகின்றன. உறுப்பினர்கள் மற்றும் புரவலர்கள் சேர்க்கையினை அதிகரித்தல், நன்கொடை பெறுதல், மாணவ சமுதாயத்திற்கு அறிவு சார் மேலாண்மை அளித்தல், மின்னணு மூலம் கற்றல் போன்ற செயல்பாடுகளில் மாநில அளவில் சிறப்பு முனைப்புடன் செயல்படும் நூலகங்களுக்கு இவ்விருதானது வழங்கப்படுகிறது.

நூலக ஆர்வலர்விருது

மாநில அளவில் செயல்படும் நூலகங்களின் தரத்தை மேம்படுத்தி, சிறப்பான நிலையினை எட்டுவதற்கு மிகுந்த ஊக்கம் மற்றும் பங்களிப்புடன் பணியாற்றும் வாசகர் வட்ட தலைவர்களை அங்கீகரிக்கும் விதமாக, சிறந்த மூன்று வாசகர் வட்ட தலைவர்களுக்கு ரூ.5,000/- மதிப்புள்ள கேடயம் மற்றும் சான்றிதழ் அடங்கிய 'நூலக ஆர்வலர் விருது வழங்கப்படுகிறது.

நிதி ஒதுக்கீடு

2018-19 ஆம் நிதியாண்டிற்கு நிதி ஒதுக்கீடு ரூ120.67 கோடி ஆகும்.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை

2.90909090909
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top