பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / சிறுநீரகம் / சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு வரும் ஈறு வீக்கம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு வரும் ஈறு வீக்கம்

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு வரும் ஈறு வீக்கம் பற்றிய குறிப்புகள்

ஈறு வீக்கம்

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த சிலருக்கு பல் ஈறுகள் மிகவும் வீங்கி பற்கள் பார்ப்பதற்கே மிகவும் அசிங்கமாகவும் பற்களை ஈறுகள் மூடியிருப்பதால் உணவுப் பொருட்களை கடிக்கவோ, அரைக்கவோ முடியாமலும் பேசுவதற்கு கூட சிரமப்படவும் வரலாம். இதற்கு முக்கிய காரணம் சிறுநீரக அறுவைசிகிச்சைக்கு பின்னர் எடுத்துக் கொள்ளும் சில மருந்துகளே ஆகும்.

சைக்ளோஸ்போரின் (Cyclosporin), நிபிடபின் (Nifedipine) ஆகிய மருந்துகள் சிலருக்கு இவ்வாறு பக்க விளைவை உண்டாக்கலாம். ஏன் இந்த மருந்துகள் அதிக ஈறுவளர்ச்சியை சிலருக்கு உண்டாக்குகின்றன என்பது தெரியவில்லை. ஆனால் பற்களில் காரை படிவதும், ஈறுகளில் கிருமிகளால் அழற்சி உண்டாவதும ஈறுவீக்கத்தை அதிகபடுத்த வாய்ப்புண்டு.

இது யார் யாருக்கு வரும்? எப்படி சரி செய்வது?

சிறுநீரக மாற்று சிகிச்சை பெற்றவர்களுக்கு வரும் ஈறு வீக்கம் அதிகமாக குழந்தைகளையும், சிறு வயதினரையும் பாதிக்கின்றது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்து 3-6 மாதங்களுக்கு பிறகே வரும். ஆனால் இது எவருக்கும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். இவ்வாறு வந்தால் மேற்கூறிய மருந்துகளுக்கு மாற்று மருந்துகளை மாற்றியதும் ஈறு வீக்கம் படிப்படியாக குறைய ஆரம்பித்துவிடும்.

இந்த ஈறுவீக்கம் வராமல் தடுக்க முடியுமா?

சில சமயம் ஈறு வீக்கத்தை உண்டாக்கும் மருந்துகளுக்கு மாற்று மருந்து தர முடியாத சூழ்நிலை இருக்கலாம். அவ்வாறெனில் இதை வராமல் தடுக்க சில நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்.

சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு முன்பே பல் மருத்துவரை கலந்தாலோசித்து உங்கள் பற்களில் உள்ள காரைகளை சுத்தம் செய்தல், சொத்தைப் பற்களை அடைத்தல் அல்லது எடுத்தல் ஆகியவற்றை செய்து வைத்துக் கொள்ளுங்கள். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்த பின்னரும் கூட சிறுநீரக மருத்துவரின் ஆலோசனைப்படி உங்கள் பல் மருத்துவரை முறையான இடைவெளிகளில் கலந்தாலோசித்து உங்கள் பற்கள் ஈறுகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்கள் பல் மருத்துவரிடம் நீங்கள் சிறுநீரக மாற்று சிகிச்சை பெற்றவர் என்பதையும் தற்போது நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் மருந்துகளைப் பற்றியும் கூறிவிடுங்கள். உங்களுக்கு பற்களை அகற்றவோ அல்லது பற்களுக்கு அறுவை சிகிச்சையோ தேவைப்பட்டால் அதற்குமுன் கிருமித் தாக்கம் வராமல் தடுக்க ஆன்டி பயாடிக்ஸ் எனப்படும் கிருமித் தடுப்பு மருந்துகள் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை சிறுநீரக மருத்துவரை கலந்து கொண்டு பல் மருத்துவருக்கு ஞாபகமூட்டுங்கள் ஈறு வீக்கம் வந்தால் அதை சரி செய்ய சில எளிய அறுவை சிகிச்சைகளை பல் மருத்துவர் பரிந்துரைக்கக் கூடும்.

ஈறு வீக்கம் மிகவும் அதிகமானால் என்ன செய்வது?

ஈறுவீக்கம் மிகவும் அதிகமானால் அதை அறுவை சிகிச்சை மூலமே சரி செய்ய முடியும். அப்படி செய்தால் தொடர்ந்து பற்களையும், ஈறுகளையும் ஆரோக்யமாக வைத்துக் கொள்வதன் மூலம் இது மீண்டும் வராமல் தடுக்க முடியும். ஆரம்பத்திலேயே இதை சரி செய்யாவிட்டால் பற்களை ஈறுகள் முற்றிலும் மூடி பற்களை சுத்தம் செய்வதில் சிரமம் ஏற்பட்டு பல் சொத்தை ஈறு வியாதிகள் வரலாம். இதனால் கெட்ட சுவை, வாயில் துர்நாற்றம் ஆகியனவும் ஏற்படலாம். எனவே 6 மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரை கலந்தாலோசித்து பற்களின், ஈறுகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்து கொள்வது இத்தகைய தொந்திரவுகள் வராமல் தடுக்க மிகவும் சிறந்த வழி.

ஆதாரம் : பத்மா கிட்னி சென்டர், ஈரோடு

2.9375
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top