பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / சிறுநீரகம் / சிறுநீரக மாற்று சிகிச்சை பெற்றவர்களுக்கு வரும் வைரஸ் வகை கிருமி பாதிப்புகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சிறுநீரக மாற்று சிகிச்சை பெற்றவர்களுக்கு வரும் வைரஸ் வகை கிருமி பாதிப்புகள்

சிறுநீரக மாற்று சிகிச்சை பெற்றவர்களுக்கு வரும் வைரஸ் வகை கிருமி பாதிப்புகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன

அறிமுகம்

சிறுநீரக மாற்று சிகிச்சை பெற்றவர்கள் மாற்று சிறுநீரக ஒவ்வாமையை தடுக்கும் (Anti rejection) மருந்துகளை எடுத்துக் கொள்வதால் பல்வேறு வகை நோய்க் கிருமிகளை எதிர்க்கும் சக்தி அவர்களுக்கு வெகுவாக குறைந்து விடுகின்றது. இதனால் இவர்களுக்கு சில வகை வைரஸ் கிருமிகளால் ஏற்படும் நோய்கள் வரலாம். சில வகை வைரஸ் கிருமிகள் நம் அனைவருக்குமே வந்து குணமாகி விடுகின்றன.

இதில் சிலருக்கு அந்த வைரஸ் கிருமிகள் உடலிற்குள்ளேயே ஒளிந்து கொண்டிருக்கும். சாதாரணமான ஆரோக்யம் உள்ளவர்களுக்கு இதனால் உடலிற்கு எந்த பிரச்சனையும் வருவதில்லை.

ஆனால் சிறுநீரக மாற்று சிகிச்சை பெற்ற சிலருக்கு உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளதால் மறைந்திருந்த இந்த வைரஸ் கிருமிகள் மீண்டும் தலை தூக்கி நோயாக மாற அதிக வாய்ப்பு உள்ளது.

வைரஸ் கிருமிகள்

  1. சைடோமெகலோ வைரஸ் (Cytomegalo Virus – Cmv)
  2. எப்ஸ்டீன் பார் வைரஸ் (Ebstein – Barr virus)
  3. ஹெர்பிஸ் சிம்ப்ளெக்ஸ் வைரஸ் (Hopes Simplex virus)
  4. ஹெர்பிஸ் ஜாஸ்டர் வைரஸ் (Herpes Zoster Virus)
  5. பாபில்லோமா வைரஸ் (Papilloma Virus)
  6. BK வைரஸ் (BK Virus)

இவை பெரும்பாலான சமயங்களில் எளிதில் குணப்படுத்தக் கூடியவை. ஆனால் ஆரம்பத்திலேயே சரியாக கண்டறிந்து சிகிச்சை செய்ய வேண்டும்.

சைடோமெகலோ வைரஸ் (Cytomegalo Virus – CMV)

சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு CMV என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த வைரஸ் கிருமித் தாக்கம் மிக முக்கியமானது.

இந்தியாவில் அநேகமாக நாம் அனைவருமே சிறுவயதிலேயே இந்த வைரஸ் கிருமியினால் ஃப்ளு காய்ச்சல் போன்ற பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து குணமடைந்திருப்போம். இந்த CMV வைரஸ் கிருமியினால்தான் காய்ச்சல் வந்தது என்பது தெரியாமலேயே பாதிப்பு சரியாகி இருக்கும். அதே சமயம் இந்த கிருமித் தாக்கம் வந்த சிலருக்கு இந்த வைரஸ் உடலினுள்ளே பதுங்கி விடுகின்றது. இதனால் உடல் ஆரோக்யத்திற்கும் எந்த பங்கமும் வருவதில்லை. சிறுநீரக மாற்று சிகிச்சை பெற்ற சிலருக்கு சிறுநீரக மாற்று மருந்துகளால் இந்த உடலிற்குள் பதுங்கி தூங்கிக் கொண்டிருந்த சைடோமெகலோ வைரஸ் மீண்டும் உயிர்த்தெழுந்து வீரியம் பெற்று உடலின் பல பாகங்களுக்கும் பரவி நோயாக மாற அதிக வாய்ப்பு உள்ளது.

சைடோமெகலோ வைரஸ் உடலின் எந்த பாகத்தையும் பாதிக்கலாம். என்றாலும் மாற்றுச் சிறுநீரகம், ஈரல், கண், இரைப்பை, குடல், நுரையீரல், இரத்த அணுக்கள் ஆகியவற்றை இது முக்கியமாக பாதிக்கலாம்.

சிறுநீரக மாற்று மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள், வேறு காரணங்களுக்காக நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் (உதாரணம் - புற்று நோய்க்கு மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள்) ஆகியவர்களுக்கு இந்த கிருமி நோயாக மாறும் அபாயம் உள்ளது. இந்த கிருமியின் தாக்கம் லேசானதாகவும், கடுமையானதாகவும் இருக்கலாம். பல உறுப்புகளின் பாதிப்பாக வெளிப்படலாம். காய்ச்சல், இரத்த அணுக்கள் குறைவு, அதனால் இரத்தக் கசிவு, குடல் புண், வயிற்று வலி, மலத்தில் இரத்தம் வெளியேறுதல், இருமல், சளி, கண் பார்வை பாதிப்பு என பல வகை தொந்திரவுகள் வரலாம்.

சில சமயம் இந்த கிருமி மாற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும். அதனால் இரத்தத்தில் கிரியேட்டினின் அதிகரிக்கும். அது கிருமி பாதிப்பதனாலா? மாற்று சிறுநீரக ஒவ்வாமையா? (ரிஜக்ஷன் - Rejection) என்ற குழப்பங்கள் வரலாம்.

தடுக்கும் முறைகள்

சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு முன்பு சிறுநீரகம் கொடுப்பவரின் இரத்தமும் தானம் பெறுபவரின் இரத்தமும் அவருக்கு முன்பே சைடோமெகலோ வைரஸ் தாக்கம் வந்துள்ளதா? என்பதை அறியும் பரிசோதனைக்கு ஆட்படுத்தப்படம் அப்போது சிறுநீரக மாற்று பெறுபவர்களுக்கு முன்பே இந்த கிருமித் தாக்கம் வராமல் இருந்தால் கான்சைக்ளோவீர் (Gancyclovir) போன்ற மருந்துகள் குறிப்பிட்ட காலம் வரை கொடுப்பதன் மூலம் CMV வைரஸ் தாக்கத்தை குறைக்கலாம். ஆனால் இந்தியாவில் பெரும்பாலானவர்களுக்கு இந்த கிருமி சிறு வயதிலேயே வந்திருக்கும் என்பதால் பெரும்பாலான சிறுநீரக மாற்று நோயாளிகளுக்கு இந்த திட்டம் பொருந்துவதில்லை.

சிகிச்சை செய்யும் முறை

சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொண்ட எவருக்கும் மேற்கூரிய தொந்திரவுகளான காய்ச்சல், இருமல், இரத்த அணுக்கள் குறைவு , கிரியேட்டினின் அதிகரித்தல் ஆகியன இருந்தால் சிறுநீரக மருத்துவர் அவருக்கு CMV வைரஸ் கிருமித் தாக்கம் இருப்பதாக சந்தேகிக்கலாம். அப்போது இரத்த அணுக்களின் முழு எண்ணிக்கை (complete Blood Count – CBC) , மாற்று சிறுநீரகத்திற்கான அல்ட்ராசவுண்ட் ஸ்கான், இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு ஆகிய அடிப்படை பரிசோதனைகளைச் செய்யச் சொல்வார். அத்தோடு CMV வைரஸ் கிருமி உள்ளதா என்பதை அறிய உதவும் சில சிறப்பு பரிசோதனைகளும் செய்யப்படும். அவை CMV வைரஸ் கிருமியின் எதிர் உயிர்ச்சத்தான CMV IgM ஆன்டிபாடி, CMV வைரஸ் கிருமியையே நேரடியாக இரத்தம் மற்றும் உடல் திரவங்களில் கண்டுபிடிக்க உதவும் CMV  PCR பரிசோதனை ஆகியன. இப்பரிசோதனைகளில் CMV வைரஸ் இருப்பதாக உறுதி செய்யப்பட்டால் இந்த கிருமிக்குண்டான கான்சைக்ளோவிர், வால்கான்சைக்ளோவிர் என்ற மருந்துகள் மாத்திரைகளாகவோ அல்லது ஊசி மருந்தாகவோ குறிப்பிட்ட காலம் வரை கொடுக்கப்படும். பொதுவாக CMV கிருமி இந்த மருந்துகளுக்கு நன்கு கட்டுப்படும் நீங்கள் பூரண குணமடையலாம்.

வைரஸ் கிருமி பாதிப்புகளை பாதிப்புகள்

எப்ஸ்டீன் பார் வைரஸ் (Ebstein – Barr Virus)

இந்த வைரஸ் கிருமியினால் வரும் பாதிப்பு நீண்ட நாள் காய்ச்சல், அக்குள், தொடை போன்ற பகுதிகளில் உள்ள நிணநீர்க் கட்டிகள் (Lymph Nodes) வீங்குதல் (நெறிகட்டுதல்) போன்ற தொந்திரவுகளாக வெளிப்படலாம். அபூர்வமாக தோலைப் பாதிக்கும் ஒரு வகை. அபூர்வ புற்று நோய்க்கு இந்த கிருமி காரணமாக இருக்கலாம், இந்த கிருமியை சில சிறப்பு இரத்த பரிசோதனைகள் மூலம் மட்டுமே அறிய முடியும். இந்த வைரஸ் கிருமி பாதிப்பு வந்தால் அதற்குண்டான வைரஸ் கிருமி மருந்துகளுடன் சிறுநீரக மாற்று மருந்துகளின் அளவைக் குறைப்பதன் மூலமே சரி செய்ய முடியம்.

ஹெர்பிஸ் சிம்ப்ளெக்ஸ் வைரஸ் (Herpes Simplex Virus – HSV)

இந்த கிருமியும் உடலில் மறைந்து கொண்டிருக்கும். உடலின் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாகும் போது தலை தூக்கி நரம்புகளின் வழியாக வெளியே வருகின்றது. வந்து வாய்ப்புண், ஜனன உறுப்புகளின் தோலில் நீர்க் கொப்புளங்களாக இது வெளிப்படலாம். அதோடு தோலில் வலி எரிச்சல் இருக்கலாம். இந்த பாதிப்பை அசைக்ளோவிர் (Acyclovir) என்ற மருந்தை மாத்திரைகளாகவோ தோலுக்கு கிரீமாகவோ உபயோகிப்பதன் மூலம் எளிதில் குணப்படுத்தலாம்.

ஹெர்பிஸ் ஜாஸ்டர் வைரஸ் (Herpes Zoster Virus – HZV)

இந்த வைரம் கிருமியும் மேற்கூரிய ஹெர்பிஸ் வைரஸ் போல உடலில் நரம்பு மண்டலத்தில் மறைந்திருக்கும். எதிர்ப்பு சக்தி குறைந்த சமயங்களில் வெளிவரும். ஊடலின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் (அதிகமாக மார்பு, வயிற்றுப் பகுதியில்) கொப்புளங்களாக வெளிப்படும். அதனோடு அதீத எரிச்சலான வலி இருக்கலாம். இந்த கிருமியும் பெரும்பாலும் அசைக்ளோவிர் மருந்திற்குக் கட்டுப்படும். ஆனால் சில சமயம் சிறுநீரக மாற்றுப் பெற்றவர்களுக்கு தோல் மட்டுமல்லாமல் பரவி மூளை, நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளையும் கடுமையாக பாதிக்கலாம். இதை தோல் பரிசோதனை மற்றும் சில சிறப்பு பரிசோதனைகள் மூலம் தெளிவாக அறியலாம். இதற்கும் அசைக்ளோவிர் மருந்தை மாத்திரைகளாகவோ அல்லது ஊசி மருந்தாகவோ கொடுத்து சரி செய்யலாம்.

பாப்பில்லோமா வைரஸ் (Papilloma Virus)

இந்த கிருமி தோலில் மருகு எனப்படும் கட்டிகளுக்கு காரணமாகும். ஆரோக்யமானவர்களுக்கும் இது வரலாம் என்றாலும் சிறுநீரக மாற்று பெற்றவர்களுக்கு வந்தால் அதிக அளவிலும் வேகமாக பல இடங்களில் பரவவும் வாய்ப்புகள் அதிகம். இதை ஆரம்பத்திலேயே க்ரையோதெரபி (Cryotherapy) என்ற சிறப்பு சிகிச்சையை தோல் மருத்துவர் மூலம் செய்து கொண்டால் பரவாமல் குணப்படுத்திக் கொள்ளலாம்.

BK வைரஸ் (BK Virus)

இந்த வைரஸ் மாற்று சிறுநீரகத்தையும் அதன் சிறுநீர்க் குழாய்களையும் பாதிக்கின்றது. சிறுநீரில் இரத்தம், காரணம் தெரியாத மாற்று சிறுநீரக செயலிழப்பு என இந்த பாதிப்பு வெளிப்படலாம். இந்த கிருமி இருப்பதாக சந்தேகித்தால் ஒரு சிறப்பு சிறுநீர்ப் பரிசோதனை, சிறப்பு இரத்த பரிசோதனை (இரத்தத்தில் BK வைரஸுக்கு எதிரான உயிர்சத்துகளின் (ஆன்டிபாடீஸ் - Antibodies) அளவைப் பரிசோதித்தல்), சில சமயம் மாற்று சிறுநீரக சதைத் துணுக்கு பரிசோதனை ஆகியவற்றின் மூலம் அறியலாம். இந்த பாதிப்பு உள்ளதாக உறுதி செய்யப்பட்டால் மாற்று சிறுநீரக மருந்துகளின் அளவைக் குறைக்க வேண்டியிருக்கும். இதை உங்கள் சிறுநீரக மருத்துவ நிபுணர் முடிவு செய்வார்.

ஆதாரம் : பத்மா கிட்னி சென்டர், ஈரோடு

3.05376344086
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top