பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சிறுநீரக நுண்ணொலி கதிர் வரை படம் KIDNEY ULTRASOUND SCAN

சிறுநீரக வியாதிகளுக்கு செய்யப்படும் சிறுநீரக நுண்ணொலிக் கதிர் வரைபடம் (Ultrasound Scan - ஸ்கான்) பற்றிய தகவல்.

சிறுநீரக நுண்ணொலி கதிர் வரைபடம் (கிட்னி ஸ்கான்) என்றால் என்ன?

கிட்னி ஸ்கானில் நம் செவிக்கு எட்டாத (கேட்காத) அதிக அதிர்வு எண் கொண்ட நுண்ணொலிகளை நம் வயிற்றுக்குள் அனுப்பி சிறுநீரகம் மற்றும் அதனைச் சார்ந்த உறுப்புகளை (சிறுநீர்க்குழாய்கள், சிறுநீர்ப்பை. ப்ராஸ்டேட் சுரப்பி இவைகளை) படம் பிடித்து அதனை ஆராய்ந்து இந்த உறுப்புக்களில் உள்ள கோளாறுகளை கண்டு பிடிக்கும் ஒரு வலியில்லாத பரிசோதனையாகும்.

இந்த பரிசோதனையில் ஒரு கையில் பிடிக்கக் கூடிய ஒரு கருவியின் மூலம் ஸ்கான் செய்யப்பட வேண்டிய உறுப்பின் மீது வைத்து அதிலிருந்த நுண்ணொலிகளை உடலிற்குள் அனுப்பி அவ்வதிர்வலைகள் உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளின் மீது பட்டு திரும்புவதை மீண்டும் பிடித்து அந்த சமிக்கைகளை கணினியின் உதவி மூலம் வரைபடங்களாக்கி அவற்றை கணினியின் திரையில் போட்டு ஒரு நுண்கதிர் பட ஆராய்வு சிறப்பு நிபுணர் (Radiologist)  பல்வேறு உறுப்புக்களின் அமைப்பு, நோய் பாதிப்பு உள்ள உறுப்புகளின் மாற்றங்களின் தன்மையை ஆராய்ந்து ஒரு மருத்துவ அறிக்கையைத் தருவார். அதனை அடிப்படையாக வைத்து மற்ற பரிசோதனைகளின் முடிவையும் சேர்த்து ஆராய்ந்து உங்கள் சிறுநீரக மருத்துவர் முடிவு செய்வார்.இந்த நுண்ணொலி கதிர் ஸ்கான் மூலம் பல்வேறு உறுப்புகளின் அமைப்புக் கோளாறுகள் அடைப்பு, வீக்கம், கற்கள், கட்டிகள் இவைகளை கண்டறியலாம்.

இந்த பரிசோதனைக்கு எப்படித் தயாராவது?

சிறுநீரகங்களையும் அதனைச் சார்ந்த உறுப்புக்களையும் ஸ்கான் செய்ய சிறுநீர்ப்பை சிறுநீரால் நிரம்பி இருக்க வேண்டியது அவசியம். இதற்கு ஸ்கான் செய்யும் முன்பு நன்கு நீர் குடித்து சிறுநீர்ப்பை நிரம்பி சிறுநீர் கழிக்கும் முன் உள்ள உணர்வு இருக்க வேண்டும். சில சமயம் எளிதில் பல்வேறு இடங்களை பரிசோதிக்க உங்களை மருத்துவமனை கவுன் அணிந்து கொள்ளச் சொல்லியிருக்கலாம்.

ஸ்கான் அறையில் என்ன நடக்கும்?

நீங்கள் உங்களின் முன்பதிவின்படி ஸ்கான் அறைக்குள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். ஸ்கான் மருத்துவர் உதவிக்கு செவிலியர் ஆகியோர் இருக்கலாம். அந்த அறை ஓரளவிற்கு இருட்டாக இருக்கும். ஏனெனில் அப்போதுதான் கணினியின் திரையில் படங்களை தெளிவாகக் காண முடியும். உங்களுக்கு ஸ்கான் செய்யப்பட வேண்டிய உறுப்பைப் பொறுத்து உங்கள் உடைகள் விலக்கப்பட்டு அல்லது நீக்கப்பட்டு அந்த இடத்தில் ஒரு ஜெல் தடவப்பட்டு ஸ்கான் மருத்துவர் கையில் பிடிக்கக் கூடிய ப்ரோப் (Probe) என்னும் கருவியால் வெவ்வேறு உறுப்புகளின் மேல் சிறிது அழத்தி தடவி அதன் மூலம் உண்டாக்கப்பட்டு கணினியின் திரையில் தெரியும் படங்களை ஆராய்வார்.

இவை கணினியில் சேமிக்கப்பட்டு பின்னர் அச்சிடப்பட்டும் உங்களுக்கு தரப்படும். இந்த-செயல்களின் போது உங்களுக்கு வலி ஏதுவும் இருக்காது. சிலசமயம் சில இடங்களில் மருத்துவர் சிறிது அதிகமாக அழுத்துவதால் லேசான தொந்திரவாக தோன்றலாம். சிறுநீரகக் கோளாறுகளுக்காக ஸ்கான் செய்யும்போது உங்களை சிறுநீர்ப்பை நிரம்பி இருக்கும் போது ஒரு முறையும் சிறுநீர் கழித்த பின்னர் சிறுநீர்ப்பை காலியான பின்னரும் இரண்டு தடவையாக ஸ்கான் செய்வார்கள். இதன் மூலம் சிறுநீர்ப்பையில் அடைப்பு கிருமிகளின் பாதிப்புகள், வீக்கம், கற்கள், ப்ராஸ்டேட் சுரப்பியின் வீக்கம், தன்மை ஆகியவற்றை ஆராய முடியும்.

பரிசோதனை முடிந்த பிறகு உங்கள் உடலில் பூசப்பட்ட ஜெல் துடைக்கப்பட்டு நீங்கள் வெளியே வந்து விடலாம். சில நிமிடங்களில் உங்கள் ஸ்கான் அறிக்கை தயாரானதும் உங்களுக்கு அளிக்கப்படும். அதனை நீங்கள் சிறுநீரக மருத்துவரிடம் கொண்டு சென்று கலந்தாலோசிக்க வேண்டும். அவர் உங்களுடைய மருத்துவ பரிசோதனை, மற்ற பரிசோதனை முடிவுகள் ஆகியவற்றையும் சேர்த்து ஆராய்ந்து உங்கள் சிறுநீரக நோயை அடையலாம் காண்பார்.

கிட்னி ஸ்கான் செய்வதால் என்னென்ன சிறுநீரக நோய்கள் கண்டுபிடிக்கப்படும்?

முதலில் ஸ்கான் என்பது நாம் மறைமுகமாக வயிற்றின் உள்ளுறுப்புக்களை படம் பிடித்துப் பார்க்கும் ஒரு மருத்துவ பரிசோதனை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே ஸ்கான் செய்வதால் கிடைக்கும் தகவல்கள் ஒரு அனுமானம் மட்டுமே. இந்த அனுமானங்களை மற்ற பரிசோதனை முடிவுகளையும் சேர்த்து ஆராய்ந்து உங்கள் நோயின் தன்மையை உங்கள் சிறுநீரக மருத்துவர் மட்டுமே முடிவு செய்வார். அதே சமயம் சில வியாதிகள் ஸ்கானில் தெரியாது.

நீண்ட நாள் (நிரந்தர) சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களுக்கு  இரண்டு சிறுநீரகங்களும் அவைகளின் சாதாரண அளவை விட (பெரியவர்களுக்கு சிறுநீரகத்தின் நீளம் 10-11செ.மீ) குறைந்து சிறுநீரகங்கள் சுருங்கிக் காணப்படும். சிறுநீரகக் குழாய்களில் அடைப்பு இருந்தால் அடைப்பிற்கு மேலே குழாய்கள் பலூன் போல வீங்கிக் காணப்படும் இந்த அடைப்பு சிறுநீரகக் கற்கள், கட்டிகள், இரத்தக் கட்டி, ப்ராஸ்டேட் சுரப்பியின் வீக்கம் போன்றவற்றால் இருக்கலாம்.

அடைப்புக்கான காரணங்கள் எந்த இடத்தில் அடைப்பு, கற்களின் அளவு ஆகியவற்றையும் ப்ராஸ்டேட்  வீக்கத்தின் தன்மை அளவு ஆகியவற்றையும் ஸ்கானில் அனுமானிக்கலாம். சிறுநீரகங்களில் வரும் பரம்பரை மரபணு நீர்க் கட்டிகள், புற்றுநோய் சிறுநீரகங்களை பாதிக்கும் அழற்சி வகை வியாதிகள், சீழ் கட்டிகள், பிறவியிலேயே வரும் சிறுநீர அமைப்புக் கோளாறுகள் உதாரணம்-ஒரே ஒரு சிறுநீரகம், ஒட்டி அமைந்த சிறுநீரகங்கள், இடம் மாறி அமைந்த சிறுநீரகங்களின் இரத்தக் குழாய்ச் சுருக்கத்தால் ஒரு பக்க சிறுநீரகம் மட்டும் சுருங்கிக் காணப்படும். இதனை மேலும் உறுதி செய்ய டாப்ளர் அல்ட்ரா சவுண்ட் ஸ்கான் என்ற சிறப்பு ஸ்கான் மூலம் சிறுநீரகங்களுக்கான இரத்தக் குழாய்களின் இரத்த ஓட்டத்தை ஆராய்ந்து முடிவு செய்யலாம்.

கிட்னி ஸ்கான் வேறு எந்த வகையில் சிறுநீரக மருத்துவத்தில் உபயோகப்படுகின்றது?

சில வகை சிறுநீரக நுண்தமனி அழற்சி வியாதிகளுக்கு சிறுநீரக சதைத் துணுக்கு பரிசோதனை (கிட்னி பயாப்ஸி- Kidney Biopsy) தேவைப்படும். இதை ஸ்கான் உதவியுடன் மட்டுமே செய்ய முடியும். சில சமயம் சிறுநீரகங்களில் உள்ள கட்டிகளில் இரத்தக் கசிவு, கிருமித் தாக்கம் ஆகியவற்றால் மிகுந்த வலி உண்டாகலாம். அப்போது ஸ்கான் உதவியுடன் நாம் வெளியிலிருந்தே நீண்ட ஊசி மூலம் நீர், சீழ் ஆகியவற்றை எடுத்து வடலாம்.

சிறுநீரக குழாய்களில் கற்கள் உள்ள சிலருக்கு கற்கள் வெளியேறி விட்டனவா? என்பதை மீண்டும் மீண்டும் ஸ்கான் செய்து உறுதி செய்ய வேண்டும். முக்கியமாக மாற்று சிறுநீரக பொறுத்தப்பட்டவர்களுக்கு வரும் பல்வேறுவித பிரத்யேகமான சிறுநீரக பாதிப்புகளை ஆராய, கண்டுப்பிடிக்க கிட்னி ஸ்கான் மிகவும் உபயோகமானதாகும்.

ஆதாரம் : பத்மா கிட்னி சென்டர்,

2.95
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top