பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / சிறுநீரகம் / சிறுநீரகம் பற்றிய குறிப்புகள் / சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு தயாராவது எப்படி?
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு தயாராவது எப்படி?

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தயாராவதற்கான ஆலோசனைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

மருத்துவரின் கடமைகள்

சில மருத்துவமனைகளிலும் சிறுநீரக மாற்றுச் சிகிச்சையின் ஒவ்வொரு படியிலும் உங்களுக்கு அறிவுரை கூறி உங்களை வழி நடத்த பிரத்யேகமாக ஒரு ஒருங்கிணைப்பு செவிலியர்-ஒருவர் இருக்கக் கூடும். அது இல்லாத சமயத்தில் உங்கள் சிறுநீரக மருத்துவரே உங்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்க வேண்டியிருக்கும். இவருக்கு இரண்டு முக்கிய கடமைகள் உண்டு.

 1. உங்கள் மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு முன்பு உங்கள் உடல் தகுதி, உங்களுக்கு சிறுநீரக தானம் தர முன்வருபவரின் உடல் தகுதி மற்றும் பொருந்தும் தன்மை (இரத்த வகை, வயது, HLA வகை, க்ராஸ் மாட்ச் எனப்படும் பொருத்த பரிசோதனை), இவை அனைத்தும் சரி வந்தால் அறுவை சிகிச்சையின் தேதி, அதில் என்னென்ன நேரிடலாம் என்பது குறித்த விளக்கம் அளிக்க வேண்டும்.
 • அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த பிறகு வீட்டிற்கு சென்ற பின்பு உங்களை தொடர்ந்து குறிப்பிட்ட தேதிகளில் வரச்செய்து உங்களின் மாற்றி வைக்கப்பட்ட சிறுநீரகம் மற்றும் பொதுவான உடல் நலம் இவற்றை பரிசோதிப்பது இவற்றிக்கான கால அட்டவணை இவற்றை முன் கூட்டியே தீர்மானித்து உங்களுக்கு தெளிவான முறையின் விளக்கம் கூறுவது என்பது ஒன்று.
 • மேலும் இந்த ஒருங்கிணைப்பு செவிலியர் மாற்று சிகிச்சைக்கு முன்பும் அதன் பிறகும் நீங்கள் எப்படி ஜாக்கிரதையாகக் இருக்க வேண்டும். உங்கள் மருந்துகளை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்? எவ்வெப்போது மருத்துவப் பரிசோதனைக்கு சிறுநீரக மருத்துவரிடம் வர வேண்டும்? எந்தெந்த அபாய அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்? என்பது போன்ற கேள்விகளுக்கும் மேலும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை குறித்து எந்த வித சந்தேகங்களுக்கும் விடையளிக்கவும் அவர் கடமைப்பட்டவர்.

படி- 1

 • நீங்கள் உங்கள் உடல் நலன் பற்றி உங்கள் சிறுநீரக மாற்று சிகிச்சையை பற்றி கவலைப்படுவது இயற்கையானது. உங்களுக்கு பல கேள்விகள் இருக்கலாம். இந்த சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு பிறகு உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்? என்ற யோசனைகள் இருக்கலாம். இது போன்ற எண்ணங்கள் இத்தகைய தருணத்தில் வருவது இயல்பான ஒன்றாகும்.
 • வரப்போகும் அறுவை சிகிச்சைக்கு உங்களை மன ரீதியாகவும் அறிவுப்பூர்வமாகவும் தயார்படுத்திக் கொள்வது உங்கள் சிகிச்சையை எளியதாக்கும். இந்த கையேடு உங்களை ஒவ்வொரு படியாக மேலேற்றி தயார்படுத்தும் முயற்சியாகும்.
 • சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையைப் பற்றி அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்வது நீங்கள் உங்கள் சிகிச்சையை மன தைரியத்துடன் எதிர் கொள்ள இலகுவாக்கும்

படி-2: ஒரு நல்ல ஆரோக்யமான சிறுநீரகம் எப்படி இயங்குகின்றது என்பதை புரிந்து கொள்வது?

மனிதன் இயற்கையை ஆராயவும் செய்யலாம். இரசிக்கவும் செய்யலாம்.

ஒவ்வொரு சிறுநீரக செயலிழப்பு நோயாளியும் எப்போதாவது ஒரு முறை ஏன் எனக்கு மட்டும் இப்படி நேர்ந்தது என்று இந்த கேள்வியை கேட்டிருப்பார்? இதற்கு எளிதான விடை கிடையாது. இதற்குள் உங்கள் சிறுநீரக மருத்துவர் உங்கள் சிறுநீரக செயலிழப்பின் காரணங்களை பற்றி ஏதேனும் விளக்கம் அளித்திருக்கக் கூடும். காரணம் எதுவும் கண்டுபிடிக்கப்படாமலும் இருக்கலாம். என்னவானாலும் இது போன்ற ஒரு வியாதி எனக்கு ஏன் வந்தது என்று நம் உள்மனம் கேட்கும் கேள்விக்கு யாராலும் சரியான பதில் கூற முடியாததுதான் என்றாலும் இதனை நாம் மனதளவில் ஏற்று மனதை பக்குவப்படுத்தி இதன் பின்னர் இதற்கு மிகச் சிறந்த சிகிச்சை எது என்பதை அறிந்து அதன்படி நடக்க முயற்சிப்பதே வெற்றியின் முதல் படியாகும். நமது ஆரோக்யமான சிறுநீரகங்கள் எவ்வாறு சிறப்பாக இயங்கி நம்மை நல்ல முறையில் வைத்திருந்தன என்பதை புரிந்து கொள்வது இம்முயற்சியின் ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்.

சிறுநீரகம்

நம் ஒவ்வொருவருக்கும் இரண்டு சிறுநீரகங்கள் ஒவ்வொன்றும் வயிற்றிக்குள் ஆழமாக முதுகுப் புறமாக இடுப்புக்கு சற்றே மேலே உள்ளன. ஆயிரத்தில் ஒருவருக்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே கூட இருக்கலாம். அவர் அதைப் பற்றியே அறியாமல் தம் ஆயுளை முழு ஆரோக்யத்துடன் கழிக்க இயலும். ஏனெனில் நமக்கு ஆரோக்யமாக உயிர் வாழ ஒரு சிறுநீரகம் மட்டுமே கூட போதுமானது. இறைவன் ஒரு சிறுநீரகத்தை நமக்கு ஒரு உதிரிப் பாகமாகவே கொடுத்துள்ளார் ஒவ்வொரு சிறுநீரகத்திலும் நெப்ரான்கள் எனப்படும் அடிப்படை நுண்தமனி சிறுநீரக சுத்திகரிப்பு அலகுகள் சுமார் 10 இலட்சம் உள்ளன. இவை தொடர்ந்து ஓய்வில்லாமல் இரண்டு முக்கிய பணிகளை நாம் கருவாக இருந்த காலத்திலிருந்தே செய்து வருகின்றன. அவை

 1. நமது உடலில் உற்பத்தியாகும் கழிவு உப்புக்களை வடிகட்டி சிறுநீராகப் பிரித்து வெளியே அனுப்புகின்றன.
 2. நமது உடலில் இரத்தத்தில் பல்வேறு தாது உப்புக்களும் இரசாயனங்களும் சமசீராக இருந்து உடல் இயக்கங்கள் நல்ல முறையில் இயங்க வைக்கும் இரசாயன கட்டுப்பாட்டுக் கேந்திரமாகவும் உள்ளன.

மேலும் நம் உடலில் உள்ள தண்ணீரின் சதவிகிதத்தையும் இவைவே நிர்ணயிக்கின்றன.

சிறுநீரகங்களின் சில உதிரிப் பணிகள்

 1. நம் எலும்பு மஜ்ஜையில் இருந்து இரத்த சிவப்பணுக்களை உண்டாக்க உதவும் எரித்ரோபாயிட்டின் என்ற நொதிப் பொருளை சிறுநீரகங்களே உற்பத்தி செய்கின்றன. சிறுநீரக செயலிழப்பில் இதன் அளவு குறைவதால் இரத்த சோகை ஏற்படுகின்றது.
 2. நம் எலும்புகளை உறுதியாக வைத்திருக்கும் கால்சியம் எனப்படும் சுண்ணாம்புச் சத்தினை கட்டுப்படுத்தும் கால்சிட்ரியால் எனப்படும் இன்னொரு சத்தினையும் சிறுநீரகம் உற்பத்தி செய்கின்றது. சிறுநீரக செயலிழப்பில் இதன் அளவு குறைவதால் எலும்புகள் பலமிழக்கின்றன.
 3. சிறுநீரக மாற்று சிகிச்சையில் சிறுநீரகத்தின் இந்த அத்தனை வேலைகளும் மீண்டும் பழையபடியே சரி செய்யப்பட்டுவிடுவதால் நீங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும். டயாலிசிஸ் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த அளவு ஆரோக்யம் முன்னேற்றமடையாது.

படி-2 : உங்கள் சிறுநீரக மாற்று மருத்துவக் குழுவை நன்கு அறிந்து கொள்ளுங்கள்

உங்கள் சிறுநீரக மாற்று சிகிச்சை குழுவில் பல்வேறு மருத்துவர்கள் இருப்பர். ஒரு சிறுநீரக மருத்துவ நிபுணர் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், செவிலியர்கள், உணவியல் நிபுணர், மனவியல் நிபுணர் சிறுநீரக மாற்று சிகிச்சை திட்ட ஒருங்கிணைப்பாளர் என பலர் இருப்பர். இவர்களில் சிறுநீரக மருத்துவ நிபுணர் அல்லது சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் குழுத் தலைவராக இருப்பார். அவரையோ அவரைச் சார்ந்தவர்களையோ நீங்கள் எந்த தயக்கமோ கூச்சமோ இன்றி அணுகி உங்களுடைய சகல சந்தேகங்களையும் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு மருத்துவமனையைச் சேர்ந்த சிறுநீரக மாற்று சிகிச்சை செயல் திட்டமும் ஒவ்வொரு விதமாக இருக்கலாம். ஒரு மருத்துவமனையின் சிறுநீரக மாற்று சிகிச்சையில் வெற்றிச் சதவிகிதம், உங்களுக்கு அருகாண்மை, மொத்த செலவு ஆகியவற்றை யோசித்து நீங்கள் உங்கள் சிறுநீரக மாற்று சிகிச்சையைத் தேர்ந்தெடுக்க வேண்டிவரும்.

படி-4 : சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு முன்பு உங்கள் உடல் நிலையை பூரணமாக பரிசோதித்தல்.

சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு முன்பு நீங்கள் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு முழு உடல் தகுதி உள்ளவராக இருக்கின்றீர்களா? என்பதையும் உங்களுக்கு வேறொருவரிடம் இருந்து பொறுத்தப்படவுள்ள மாற்றுச் சிறுநீரகம் உங்களுக்கு பொருந்தக் கூடியதா? என்பனவற்றை அறிய பல்வேறு பரிசோதனைகள் செய்யப்படும். எதற்கு இவ்வளவு பரிசோதனைகள்? இவை எப்போது முடியும் என்று கூட உங்களுக்கு தோன்றலாம். ஆனால் இந்த பரிசோதனைகளை மேற்கொள்ள ஆரம்பிப்பதன் மூலம் நீங்கள் சிறுநீரக மாற்று சிகிச்சையின் முதல் படியை தாண்டுகின்றீர்கள் என்பதை நினைத்துக் கொள்ளுங்கள். மேலும் உங்களுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை முடிந்த பிறகு சில தொந்தரவுகள் வர வாய்ப்புக்கள் உண்டா என்பதையும் சிறுநீரக மாற்று சிகிச்சை மருத்துவர் முன்பே அறிந்து கொள்ளவும் இந்த பரிசோதனைகள் உதவுகின்றன.

இதே போன்ற பரிசோதனைகள் உங்களுக்கு சிறுநீரக தானம் தருபவருக்கும் செய்யப்படும். உங்கள் பரிசோதனைகள் அனைத்தும் முடிந்த பிறகு அவைகளின் முடிவுகளை ஆராய்வதின் மூலம் உங்களது முழு ஆரோக்யத்தையும் பற்றி உங்களது மருத்துவர் முடிவு செய்ய ஏதுவாக இருக்கும்.

உங்களது மருத்துவக்குழு பொதுவாக கீழ்கண்ட பரிசோதனைகளை உங்களுக்கு பரிந்துரைக்கலாம். இவை இடத்துக்கு இடம் மாறுபடவும் செய்யலாம்.

 1. நெஞ்சு, நுரையீரல் இவற்றிக்கான மார்பக எக்ஸ்-ரே படம் இதன் மூலம் உங்கள் நுரையீரல் நல்ல ஆரோக்யமாக உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
 2. இதயத் துடிப்பு சுருள்வரை படம் ECG (Electrocardiogram) இதன் மூலம் உங்கள் இதயத்தின் ஆரோக்யத்தை தெரிந்து கொள்ளலாம். அதுவரை தெரிந்து கொள்ளாத இதயக் கோளாறுகள் இப்போது தெரியவரலாம்.
 3. எக்கோ கார்டியோகிராம்- இதயத்திற்கான சிறப்பு நுண் ஒலி ஸ்கான் படம் மூலம் இதயத்தின் செயல் திறன், அதன் சுவர்களின் தடிமன் வால்வுகளில் உள்ள கோளாறுகள் போன்றவற்றை மேலும் துல்லியமாக தெரிந்து கொள்ளலாம். சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு முன்பாகவே இதயத்தின் ஆரோக்யத்தை உறுதி செய்து கொள்வது மிகவும் அவசியம்.
 4. ட்ரெட் மில் பரிசோதனை இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்பு உள்ளதா? அதனால் மாரடைப்பு வர வாய்ப்பு உள்ளதா என்பதை ஒரு ஓடுபாதையில் நடக்க விட்டு ECG மூலம் அறியும் பரிசோதனை. இதில் ஏதேனும் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டால் ஆஞ்சியோகிராம் எனப்படும் இதயத்தின் இரத்தக்குழாய்களை படம் பிடித்து பரிசோதிக்கும் பரிசோதனை தேவைப்படலாம். முக்கியமாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படும் போது அவர்களின் இதயமும் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புக்கள் அதிகம் என்பதால் அவர்களுக்கு இந்த பரிசோதனை அவசியம் தேவைப்படும்.
 5. எலும்புகளுக்கான எக்ஸ்-ரே படங்கள் உங்கள் எலும்புகளின் ஆரோக்யத்தை உறுதி செய்யும் பரிசோதனை.
 6. மேல் குடல் வயிறு உள்நோக்கிக் கருவி பரிசோதனை Upper GI Endoscopy Series - உங்களுக்கு வயிற்றில் ஏதும் புண் (அல்சர்) உள்ளதா என்று கண்டறியும் பரிசோதனை சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு பின் தரப்படும் சில மருந்துகள் அல்சரை அதிகப்படுத்தக் கூடியவை.
 7. வயிறு உறுப்புகளின் நுண் ஒலி அதிர்வு வரைபடம் (Ultrasonogram of Abdomen) உங்கள் வயிற்றுனுள் உள்ள மற்ற உறுப்புக்களின் ஆரோக்யத்தை அறிய உதவும் பரிசோதனை. உதாரணமாக, பித்த நீர்ப்பையில் கல் முதலியன. அப்படி ஏதேனும் கண்டுபிடிக்கப்பட்டால் அது சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு முன்பே சரி செய்யப்பட வேண்டும்.
 8. இரத்தப் பரிசோதனைகள்- உங்களுடைய ஈரல் ஆரோக்யமாக உள்ளதா என்பதை அறிய உதவும் இரத்த பரிசோதனைகள், கொழுப்புச் சத்துக்களின் அளவுகள், சிலவகை கிருமிகள் உங்கள் உடலில் மறைந்திருக்கின்றனவா என்பதை அறிய உதவும் இரத்த பரிசோதனைகள், உங்களுக்கும் உங்களுக்கு சிறுநீரகம் தருபவருக்கும் உள்ள பொருத்தத்தை கண்டறிய உதவும் இரத்த பரிசோதனைகள் என பல வகையான இரத்தப் பரிசோதனைகள் செய்யப்படும்.
 9. நுரையீரல் சம்பந்தப்பட்ட பரிசோதனைகள்:- உங்களில் ஒரு சிலருக்கு (உதாரணமாக புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்) நுரையீரலின் ஆரோக்யத்தை அறிய உதவும் சில பரிசோதனைகள் தேவைப்படலாம். அப்போது உங்களை ஒரு இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட குழாயினுள் ஊதச் சொல்லி உங்களின் நுரையீரல், மூச்சுக் குழாய் இவற்றின் ஆரோக்யத்தை பரிசோதனை செய்ய வேண்டி வரும்.
 10. மற்ற பரிசோதனைகள்:- பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை, பெண் மருத்துவரால் கர்ப்பப்பை, பெண் உறுப்புக்கள் இவற்றில் கிருமிகள் இல்லை என்பதும் வேறு கோளாறுகள் இல்லை என்பதும் உறுதி செய்யப்படும். மேலும் இருபாலாருக்கும் காது மூக்கு தொண்டை, பற்கள் இவ்வுறுப்புக்களில் கிறுமிகள், புற்றுநோய் போன்றவை இல்லை என்பது சம்மந்தப்பட்ட துறை சிறப்பு நிபுணர் மற்றும் கல்ட்சர் எனப்படும் கிருமி வளர்ப்பு சோதனைகளால் உறுதி செய்யப்படும். சிலருக்கு சிடி ஸ்கான் போன்ற சில பரிசோதனைகள் தேவைப்படலாம்.

இந்த பரிசோதனைகளை முடிக்க சில காலம் தேவைப்படலாம். மேற்கூறிய பரிசோதனைகளில் ஏதேனும் கோளாறு இருப்பதாக கண்டறியப்பட்டால் அவைகளை சரி செய்த பிறகே நீங்கள் சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு தகுதி உடையவராகின்றீர்கள். எனவே இந்த பரிசோதனைகளை நீங்கள் பொறுமையுடன் செய்து கொள்ள வேண்டும்.

படி-6 சிறுநீரக தானம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

அன்பு நம்மை குணப்படுத்துகின்றது. அன்பு கிடைக்கப்பட்டவர் மட்டுமல்ல. அன்பைத் தருபவர்களுக்கும் அது நன்மை செய்கின்றது.

 1. உங்களுடன் இரத்த சம்பந்தப்பட்ட இரண்டு சிறுநீரகங்களும் ஆரோக்யமாக உள்ள உறவினர்கள். உதாரணமாக தாய், தந்தை, அக்கா, அண்ணன், மகன், மகள் போன்றோர். (வாழும் உறவினரின் சிறுநீரக தானம்).
 2. உங்களுடன் இரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் உறவு உடையவர்கள் - உதாரணமாக மனைவி, நண்பர்கள் (வாழும் உறவில்லாதவரின் சிறுநீரக தானம்).
 3. இறந்தவர்களின் சிறுநீரக தானம். (மூளை இறந்தவர்கள் உதாரணமாக விபத்தில் இறந்தவர்கள், மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டதால் இறந்தவர்கள்)

இரத்த சம்பந்தமுள்ள உறவினர் சிறுநீரக தானம்.

ஆரோக்யமாக உள்ள ஒருவர் தன் இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றை தானம் தருவதால் அவருக்கு பின்னாளில் எந்த உடல் நலச் சீர்கேடும் வருவதில்லை என்பது இது வரை அப்படி சிறுநீரக தானம் தந்த உலகெங்கும் உள்ள பல்லாயிரக்கணக்கானவர்களை பல வருடங்களுக்கு தொடர்ந்து கண்காணித்ததில் தெரிந்த அறிவியல் உண்மை.

அவ்வாறு உங்கள் உறவினரோ அல்லது மற்றுள்ளவரோ சிறுநீரக தானம் தர முன் வந்தால் அவர் உங்களுக்கு சிறுநீரக தானம் தர முடியுமா என்பதை அறிந்து கொள்ள சில பரிசோதனைகள் உண்டு.

அ). அவரது இரத்த வகையும் உங்கள் இரத்த வகையும் ஒத்துப் போக வேண்டும். அதற்கு உங்கள் இரத்தமும் அவரது இரத்தமும் ஒரே க்ருப் ஆக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. கீழ்க்கண்ட படி ஒருவது இரத்த வகைக்கு மற்ற இரத்த வகை(க்ருப்) உள்ளவர்கள் சிறுநீரக தானம் செய்யலாம் / பெறலாம்.

இரத்த வகை

சிறுநீரக தானம் பெறலாம்

சிறுநீரகம் கொடுக்கலாம்

O

O

O,A,B,AB

A

A,O

A,AB

B

B,O

B,AB

AB

A,B,O,AB

AB

இரத்த சம்பந்தமுள்ள உறவினர் என்பது நமக்கு மிக நெருங்கிய சொந்தங்களான அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, மகன், மகள் ஆகியோர். நமது நாட்டில், தமிழகத்தில் இவ்வாறு இரத்த சம்பந்தம் உள்ள உறவினர்கள் சிறுநீரக தானம் தர முன் வந்து சம்மதித்தாலும் அவர்கள் உண்மையிலேயே இரத்த சம்பந்தம் உள்ளவர்கள்தானா என்பதனை கண்டறிய HLA டெஸ்ட் என்ற பரிசோதனையை செய்து பார்த்து அது சரியாக இருந்தால் மட்டுமே சிறுநீரக தர முடியும். மேலும் இந்த HLA பரிசோதனையின் மூலம் சிறுநீரகம் தருபவருக்கும் வாங்கிக் கொள்பவருக்கும் உள்ள மரபணு ஒற்றுமை எவ்வளவு சதவிகிதம் என்பது தெரிய வரும். அதிக ஒற்றுமை இருந்தால் மாற்றி வைக்கப்பட்ட சிறுநீரகம் பல வருடங்களுக்கு தள்ளப்படாமல் வைக்கப்பட்டவரின் உடலில் நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் என்பதை யூகிக்க முடியலாம்.

ஆ). மேலும் சிறுநீரகம் தருபவர், பெற்றுக் கொள்பவர் ஆகியோரின் இரத்த வகை ஒத்துப் போனாலும் அவர்களின் இரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்களான வெள்ளை அணுக்கள் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகின்றனவா? என்பதை அறிய க்ராஸ் மேச் எனப்படும் இரத்த ஒப்புமைப் பரிசோதனையும் செய்யப்பட்ட வேண்டும்.

இ). இவ்வாறு உயிருள்ள ஒருவர் சிறுநீரக தானம் தருவதால் நாம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை நன்கு திட்டமிட்டு செய்யவும் சீக்கிரம் செய்து கொள்ளவும் ஏதுவாக இருக்கும்.

இரத்த சம்பந்தமில்லாத உறவினர் சிறுநீரக தானம்.

மேற்குறிய வகை இல்லாத உறவினர்கள் உதாரணமாக மனைவி அல்லது கணவன், பெரியப்பா, சித்தப்பா, அத்தை, மாமா, அவர்களுடைய மக்கள், நண்பர்கள் ஆகியோர் இதில் அடங்குவர். இத்தகையவர் சிறுநீரக தானம் அளிக்க முன்வந்து அது பொருந்தி வந்தாலும் தற்போது தமிழ்நாட்டில் உள்ள சட்ட திட்டங்களின் படி இவர்களை தமிழக அரசின் மாற்று உறுப்பு சிகிச்சை அனுமதிக் குழுவிற்கு அனுப்பி அவர்களின் அனுமதி பெற்ற பிறகே மாற்று சிகிச்சைக்கு உற்படுத்த முடியும்.

இறந்தவர்களின் சிறுநீரக தானம்.

ஒருவர் இறந்து போகும் போது முதலில் மூளை இறந்து செயலற்றதாகி விடுகின்றது. அதன் பின்னரே ஒவ்வொரு உறுப்பாக செயலிழக்கத் தொடங்குகின்றது. சிலவகையான நோய்களில் உதாரணமாக விபத்தில் தலைக்காயம் அதனால் மூளையில் இரத்த கசிவு, உயர் இரத்த அழுத்தத்தால் மூளையில் இரத்த கசிவு போன்ற பாதிப்புகளின் போது மருத்துவமனையில் உள்ள இத்தகு நோயாளிக்கு உயிர் பிரிவதற்கு முன்பு மூளை இறந்து போகும். மூளை இறந்த பிறகும் கூட சில மணி நேரம் இதயத்துடிப்பு, இரத்த ஒட்டம் இருக்கும். ஆனால் மூளை இறந்ததாக மருத்துவமனையில் வைத்து இரண்டிற்கும் மேற்பட்ட மருத்துவர்களால் (நரம்பியல் மருத்துவர் உட்பட) உறுதி செய்யப்பட்ட நபர் இறந்தவரே ஆவார். அதன் பின்னர் சில மணி நேரங்களில் அவரது மற்ற அனைத்து உறுப்புக்களும் படிபடியே இறக்கத் தொடங்கும். இந்த சில மணி நேர இடைவெளியில் அந்நோயாளியின் உறவினர்கள் மனமுவந்து அவரது உறுப்பிக்களை தானமாக தர முன்வந்தால் அவரது சிறுநீரகங்கள் உட்பட பல்வேறு உறுப்புக்களை (இதயம், ஈரல், கணையம், குடல், எலும்பு, தோல் போன்ற) எடுத்து தேவையுள்ளவர்களுக்கு பொறுத்துவதன் மூலம் அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கலாம்.

அதே நோயாளி இதயத்துடிப்பு நின்ற பிறகு இதனை செய்ய முடியாது. நமது நாட்டில் இன்னும் இந்த மூளை இறப்பு என்பது அந்நபரே இறப்பது போலத்தான் என்கின்ற உண்மை இன்னும் பொது மக்கள் எல்லோரும் புரிந்து கொள்கின்ற அளவிற்கு சென்றடையவில்லை அதனால் எத்தனையோ உறுப்புக்கள் உபயோகமில்லாமல் மண்ணில் புதைக்கப்படுகின்றன. அவ்வாறு முளை இறந்த நபரின் உறவினர்கள் சம்மதித்தால் அவர்களின் சிறுநீரகங்களை பொருந்துகின்ற இரண்டு நபர்களுக்கு எடுத்து வைக்கலாம். ஆனால் நமது நாட்டில் இது இன்னும் பரவலாகவில்லை என்றே சொல்ல வேண்டும். தற்போது சில பெரு நகரங்களில் மட்டுமே இந்த வசதி உள்ளது.

மூளை இறந்தவர்களின் உறுப்புக்களை மண்ணுக்குள் புதைத்து வீணாக்காமல் ஈரல், சிறுநீரகம், இதயம் போன்ற முக்கிய உறுப்புக்களின் முற்றிய நிலை செயலிழப்பால் உயிருக்கு, போராடிக்கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு தானம் செய்ய அவர்களின் உறவினர்கள் முன்வந்தால் பல உயிர்கள் காப்பாற்றப்படும். பல குடும்பங்கள் வாழ்வு பெறும். இதைப் பற்றிய செய்தி பொது மக்களிடையே இன்னும் சரியாக சென்று சேரவில்லை. இதனைப் பற்றி பொதுமக்களை அறிவுறுத்தி பலரும் முன்வந்து இறந்த பிறகு அவர்களின் உறுப்புக்களை தானம் செய்வது சற்றே அதிகரித்தால் கூட பல ஆயிரம் சிறுநீரக நோயாளிகள் புத்துயிர் பெற முடியும்.

வெளிநாடுகளில் மூளை இறந்தவர்களின் உறுப்புக்களை தேவைப்படும் நோயாளிகளுக்கு பகிர்ந்தளிக்க UNOS எனப்படும் கணிணி முறை செயல் திட்டம் உள்ளது. இதன்படி முற்றிய நிலை செயலிழப்பு உள்ள நோயாளிகள் ஒரு காத்திருப்பு வரிசையில் தங்கள் பெயரை பதிவு செய்து இருக்க வேண்டும். குழந்தைகள், அதிக நோய் வாய்ப்பட்டவர்கள் அபூர்வ இரத்த வகை உள்ளவர்கள் போன்றோர்க்கு முன்னுரிமை புள்ளிகள் அளிக்கப்படும். இதன்படி ஒரு சிறுநீரக செயலிழப்பு நோயாளியின் முறை வந்ததும் அவருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவருக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு இறந்தவரின் சிறுநீரகம் எடுத்து வரப்பட்டு (பல சமயங்களில் விமானம் மூலம் - ஏனெனில் இறந்தவரின் சிறுநீரகம் சில மணி நேரங்களுக்குள் பொறுத்தப்பட வேண்டும்) ஆனால் இது போன்ற வசதிகள் நம் நாட்டில் தற்போதைக்கு இல்லை.

தற்போது நமது நாட்டில் 99 சதவிகித சிறுநீரக மாற்றி சிகிச்சை உறவினர்கள் அல்லது நண்பர்கள் சிறுநீரக தானம் தருவதால் மட்டுமே நடக்கின்றது. ஆபூர்வமாக சில சமயங்களில் மூளை இறந்தவர்களின் உறவினர்கள் சம்மதிக்கும் பட்சத்தில் அவ்வகையிலும் சிறுநீரக மாற்று சிகிச்சை அவ்வப்போது நடைபெறுவது உண்டு.

எனவே அநேகமாக உங்களுக்கு உயிருள்ள ஒருவரின் சிறுநீரக தானம் மூலமே சிறுநீரகம் பெற இருப்பீர்கள் அவ்வாறெனில் இதற்கான பரிசோதனைகள், ஏற்பாடுகள் ஆகியன நமது கட்டுப்பாட்டில் நடை பெறுவதாக இருக்கும். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின் தேதியும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு இருக்கும். எனவே நீங்கள் அதற்கு தகுந்தபடி தயாராகிக் கொள்ள வேண்டும்.

படி-6 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு தயாராகுதல்

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பு நீங்கள் உடல், மனம் மற்றும் பொருளாதார ரீதியாக தயாராக வேண்டும். உடல் ரீதியாக நீங்கள் தயாராக உள்ளதை உங்கள் சிறுநீரக மருத்துவர் முன்பே உறுதி செய்திருப்பார். செய்த பின்பே உங்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான தேதி குறிக்கப்பட்டிருக்கும். அந்த இடைப்பட்ட நாட்களில் சளி, இருமல் போன்ற நோய்த் தொற்று வராமல் வந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனென்றால் அப்படி ஏதும் வந்தால் அறுவை சிகிச்சை தள்ளி வைக்கப்படும். மேலும் சரியான உணவு, மருந்துகள், டயாலிசிஸ் உறக்கம், மருத்துவர் பரிந்துரைத்த அளவிற்கு கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். பல கஷ்டங்கள், முயற்சிகளுக்கு இடையே சிறுநீரக அறுவை சிகிச்சை என்ற தீர்வு நெருங்கி வரும் வேளையில் நாம் இன்னும் கூடுதல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்.

மாற்று அறுவை சிகிச்சைக்காக நீங்கள் காத்திருக்கும் நேரத்தில் உங்கள் மனத்தில் பல கவலைகள், சிகிச்சை வெற்றி பெறுமா என்பது போன்ற பல சந்தேகங்கள் எழலாம். இவைகள் மன அழுத்தத்தை அதிகரிக்கக் கூடும். பயம், நடுக்கம், தூக்கமின்மை என அது வெளிப்படலாம். அப்படி இருந்தால் நீங்கள் உங்கள் மருத்துவக்குழுவினரிடம் இதைப்பற்றி மனம் விட்டு பேசுங்கள். உங்களுக்கு ஈடுபாடுள்ள ஒரு நடவடிக்கையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். தியானம், வழிபாடு முதலியன உங்கள் மன அழுத்ததை மெலிதாக்க உதவும்.

மேலும் இந்தியாவைப் பொறுத்த வரை சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் பலரும் சிறுநீரக மாற்று சிகிச்சை பெற முடியாமல் போவதற்கு ஒரு முக்கிய காரணம் அவர்களின் பொருளாதார நிலைமைதான். சிறுநீரக மாற்று சிகிச்சையில் இரண்டு அறுவை சிகிச்சை குழுக்கள், அதற்குண்டான மருந்துகள், பரிசோதனைகள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்துக் கண்காணிப்பு, மருத்துவமளையில் தங்கும் செலவுகள் என மொத்தம் செலவு கண்டிப்பாக ஒரு பெரிய தொகையாக இருக்கும்.

இந்தியாவில் நூற்றுக்கு தொண்ணூற்றெட்டு சதவிகிதத்தினர் உடல் காப்பீடு செய்து கொள்வதில்லை. இதனால் பெரும்பாலானவர்கள் இது போன்ற அதிகம் செலவு வைக்கக் கூடிய வியாதிகள் அந்த குடும்பத்தினருக்கு பெரும் பொருளாதார சுமையாகவே அமைகின்றன. இதற்கான தொகையை நீண்ட கால சேமிப்புகளிலிருந்தும், சொத்துக்களை விற்றும் சில சமயம் கடன் வாங்கியோ, சேவை அமைப்புகளிலிருந்து உதவி பெற்றோதான் சரிகட்ட வேண்டியிருக்கின்றது. எனவேதான் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு முன்பே நன்கு திட்டமிடல் (ஒரு வருடத்திற்கு முன்பேகூட) அவசியம்.

நாள்பட்ட செயலிழப்பு உள்ள ஒருவர் சரியான மருத்துவரை அணுகி அவரின் ஆலோசனைப்படி அதற்குறிய சமயங்களில் அந்தந்த சிகிச்சைகளை (உதாரணமாக தொடர்ந்து டயாலிஸ் சிகிச்சை செய்து கொள்ள கையில் AV ஃபிளஸ்டுலா எனப்படும் இரத்தநாள ஒட்டு அறுவை சிகிச்சையை முன்பே செய்து கொள்ளுதல், டயாலிசிஸ் செய்து கொள்ளும் காலம் வரும் முன்பே நன்கு திட்டமிட்டு டயாலிசிஸ் சிகிச்சையில் நீண்ட நாட்கள் காலத்தையும், காசையும் செலவழிக்காமல் நேரடியாக சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு தயார்படுத்திக் கொள்ளுதல்) என ஒரு திட்டத்துடன் செயல்பட்டால் வீணான மன உளைச்சல், பொருள் விரயம், ஆரோக்ய சீர்கேடு ஆகியவற்றை தடுக்கலாம். நம் நாட்டில் சிறுநீரக செயலிழப்பிற்கு அதை முழுவதுமாக சரி செய்வதாக சொல்லி ஏமாற்றும் நாட்டு வைத்தியர்களை நம்பி உடல் நலத்ததையும் , பணத்தையும் வீணாக்குவது என்பது அடிக்கடி நடக்கக் கூடிய ஒன்று. இத்தகைய ஆபத்துகளிலிருந்து தப்பி ஒரு சரியான மருத்துவரை சென்றடைந்து அவரது முழு கவனத்தில் படிப்படியாக முன்னேரி கடைசியாக சிறுநீரக மாற்று சிகிச்சை என்ற கட்டத்தை அடைவது என்பது நம் நாட்டில் சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளில் சிலருக்கே வாய்க்கின்றது என்பது ஒரு நடைமுற உண்மை.

படி – 7 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

பொதுவாக சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு ஓரிரு நாட்கள் முன்பாகவே நீங்களும் உங்களுக்கு சிறுநீரக தானம் தருபவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவீர்கள். மூளை இறந்த நபரிடம் இருந்து சிறுநீரகம் கிடைக்கும் என்று காத்திருப்பவர்களுக்கு அவருடைய மருத்துவமனையிலிருந்து செய்தி வரும். நீங்கள் அதற்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும். சாப்பிடாமல் உடனே கிளம்பி மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு உங்களுக்கும் சிறுநீரகம் தருபவருக்கும் மீண்டும் ஒரு முறை நுரையிரல் எக்ஸ்-ரே படம், ஈ.சி.ஜி எனப்படும் இதயத்துடிப்பு சுருள் படம் போன்ற பரிசோதனைகள் எடுக்கப்படும். மாற்று சிகிச்சைக்கு முந்தைய நாள் உங்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை ஒரு முறை செய்யப்படும். க்ராஸ் மேட்ச் எனப்படும் இரத்த ஒப்புமைப் பரிசோதனையும் மீண்டும் ஒரு முறை செய்யப்படும்.

சிலசமயங்களில் சில மருத்துவக் காரணங்களுக்காக உங்கள் மாற்று அறுவை சிகிச்சை தள்ளி வைக்கப்படலாம்.

உதாரணமாக உங்களுக்கு புதிய கிருமித் தொற்று நோய் (Infection-இன்ஃபெக்ஷ்ன்) இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டாலோ அல்லது மாற்றி வைக்கப்படும் சிறுநீரகத்தையோ சிறுநீரகம் மாற்றி வைக்கப்பட்ட பின் உங்கள் உடல் நலத்தையோ பாதிக்ககூடியது என்று புதிய உடல் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டால் (உதாரணமாக இதய பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு) ஆகியன சிலசமயம் கடைசியாக செய்யப்படும் இரத்த ஒப்புமை பரிசோதனை சாதகமாக இல்லாவிட்டால் (அப்படி அறுவை சிகிச்சை செய்யப்பட்டால் மாற்றி வைக்கப்பட்ட சிறுநீரகம் உடனே ஒதுக்கப்படும்) அப்படி நேர்ந்தால் நீங்கள் அதற்கும் தயாராக இருக்க வேண்டும். இது தற்காலிக பின்னடைவுதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் உடல் நிலை சரியாகும் வரையோ அல்லது உங்களுக்கு பொருந்தும் வேறோரு சிறுநீரகம் கிடைக்கும் வரையோதான் நீங்கள் மீண்டும் காத்திருக்க வேண்டி வரும். இதுவரை நீங்கள் செய்து கொண்ட பரிசோதனைகள் சிரமங்கள் ஏதுவும் இழக்கப்பட போவதில்லை என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எல்லாம் சரியாக இருந்து அறுவை சிகிச்சை நடக்க உள்ள போது.

அறுவை சிகிச்சைக்கு முதல் நாள் உங்கள் இரத்த நரம்பில் ட்ரிப் பொறுத்தப்பட்டு மருத்துவ திரவம் செலுத்தப்படும். இதனால் மாற்று சிறுநீரகம் உடனே வேலை செய்ய ஏதுவாக இருக்கும். மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட உள்ள இடம் நன்கு சவரம் செய்யப்பட்டு சுத்தப்படுத்தப்படும். இதனால் குடலில் உள்ள கிருமிகள் நீக்கபட்டு அறுவை சிகிச்சைக்கு பின் மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகள் வராமல் இருக்க ஏதுவாகும். முதல் நாள் இரவு உங்களுக்கு தூக்கம் வர ஏதேனும் தூக்க மருந்துகள் கொடுக்கப்படலாம். அறுவை சிகிச்சைக்கு முன்பு கிருமித் தொற்று வராமல் இருக்க கிருமிக்கொல்லி (ஆன்டிபயாட்டிக்) மருந்துகள் கொடுக்கப்படும்.

சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு நீங்கள் அழைத்துச் செல்லப்பட்டு திரும்ப மயக்க மருந்திலிருந்து விழித்து எழும்போது உங்களுக்கு ஒரு புதிய சிறுநீரகமும் ஒரு புதிய வாழ்க்கையும் கிடைத்திருக்கும்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

 • அறுவை சிகிச்சையின் போது உங்களுக்கு எதுவும் நினைவிருக்காது. உங்களுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருக்கும். உங்களுடைய வலது அல்லது இடது தொடையின் மேற்புறம் உள்ள வயிற்றில் 8-10 இன்ச் அளவிற்கு திறக்கப்பட்டு உங்களது புதிய சிறுநீரகத்தின் சிறுநீர்க் குழாய் உங்கள் சிறுநீர்ப்பையுடன் இணைக்கப்படும். உங்களுடைய சொந்த சிறுநீரகங்கள் அப்படியே விட்டு வைக்கப்படும். அவை நீக்கப்பட மாட்டாது. அறுவை சிகிச்சை 4-5 மணி நேரம் பிடிக்கக் கூடும்.
 • அறுவை சிகிச்சை முடிந்த பிறகு மயக்க மருந்தின் அனுபவத்திலிருந்து நீங்கள் ஒரு பிரத்யேக சிறுநீரக மாற்று சிகிச்சை அறையில் கண் விழிப்பீர்கள். நீங்கள் கீழ்கண்டவற்றை எதிர்பார்க்கலாம்.
 • அறுவை சிகிச்சை செய்த இடத்தில் வலி இருக்கலாம். ஆனால் அதற்கு வலி நிவாரண மருந்துகள் கொடுக்கப்படும்.
 • உங்களுக்கு சில சமயம் வாந்தி வருவது போல இருக்கலாம். அப்படி இருந்தால் நீங்கள் அதை செவிலியரிடம் சொன்னால் அதற்குரிய மருந்துகள் கொடுக்கப்படும்.
 • நீங்கள் அடிக்கடி நன்கு இருமச் சொல்லி அறிவுறுத்தப்படுவீர்கள். இதனால் உங்கள் நுரையீரல்கள் நன்கு விரிவடைந்து நுரையீரலில் கிருமிகள் வராமல் உதவும். அவ்வாறு செய்யும் போது உங்களுக்கு வலி ஏதும் இருந்தால் உங்கள் செவிலியரின் உதவியுடன் உங்கள் வயிற்றையும் பின்பக்கத்தையும் கை கொண்டோ அல்லது தலையணை கொண்டோ பிடித்துக் கொள்ளச் சொல்லி இருமினால் வலி குறையும்.
 • சில சமயம் உங்களுடைய சுவாசம் சீராக வரும்வரை உங்கள் மூச்சுக்குழாயில் ஒரு குழாய் பொறுத்தப்பட்டிருக்கலாம். உங்கள் சுவாசம் சரியானதும் அது எடுக்கப்பட்டு விடும். இந்த ட்யூப் பொறுத்தப்பட்ட தொண்டை பகுதியில் சில நாட்கள் லேசான வலியோ, கரகரப்போ இருக்கலாம். சில நாட்களில் அது தானாகவே சரியாகிவிடும்.
 • உங்களுடைய இரத்த நரம்பில் மருந்துகள், திரவங்கள் செலுத்துவதற்கு ஊசி பொறுத்தப்பட்டிருக்கும்.
 • நீங்கள் வாய் வழியாக ஆகாரங்கள் சாப்பிட ஆரம்பித்ததும் இவைகள் நீக்கப்பட்டுவிடும்.
 • சில சமயம் உங்களுடைய கழுத்தருகில் ஒரு குழாய் பொறுத்தப்பட்டிருக்கும். உங்களுடைய இரத்தக் குழாய்களின் இரத்த அளவு அவை மாற்றப்பட்ட சிறுநீரகத்திற்கு சரியான அளவு இரத்தத்ததை வழங்குகின்றனவா? என்பதை எளிதில் அறிந்து உடனுக்குடன் தேவையான மருத்துவ திரவம் அல்லது மருந்துகள், இரத்தம் போன்றவற்றை செலுத்த முதல் சில நாட்களில் இந்த குழாய் மிகவும் உதவியாக இருக்கும் உங்களுடைய இரத்த அழுத்தம், சிறுநீரகத்தின் வேலைத்திறன் ஆகியன நிலையானதும் இந்த குழாயும் எடுக்கப்பட்டு விடும்.
 • உங்களுக்கு சிறுநீர்க்குழாயிலும் ஒரு குழாய் பொறுத்தப்பட்டிருக்கும். மாற்று சிறுநீரகம் நன்கு வேலை செய்து நிமிடத்திற்கு நிமிடம் சிறுநீர் எதிர்ப்பார்க்கும் அளவு வருகின்றனவா என்பதை நாம் தொடர்ந்து கண்காணிக்க இது உதவும். மேலும் புதிய உள்சிறுநீர்க்குழாய் சிறுநீர்ப்பையில் பொறுத்தப்பட்டுள்ளது நன்கு ஆறும் வரை இது இருக்க வேண்டியது அவசியம். இது இருப்பதால் சில சமயம் உங்களுக்கு எப்போதும் சிறுநீர் கழிக்க வேண்டும் போல இருக்கலாம். கொஞ்சம் உறுத்தலாக இருக்கலாம். ஆனால் இதை சில நாட்கள் நீங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
 • உங்களில் ஒரு சிலருக்கு அதிலும் மூளை இறந்தவர்களின் சிறுநீரகத்தை தானமாகப் பெற்றவர்களுக்கு அந்த மாற்று சிறுநீரகம் உடனே வேலை செய்யாமல் போகலாம். ஆனால் இது தற்காலிகமானதுதான். சில நாட்களில் முதலில் வேலை செய்யாமல் இருந்த சிறுநீரகம் கூட கொஞ்சம் கொஞ்சமாக முழுத்திறனுடன் வேலை செய்ய ஆரம்பித்து விடும். அதுவரை உங்களுக்கு தற்காலிகமாக டயாலிசிஸ் சிகிச்சை சில நாட்களுக்கு தேவைப்படலாம். உறவினர், நண்பர்கள் இவர்களிடமிருந்து தானம் பெற்றவர்களுக்கு 90%க்கு மேல் மாற்று சிறுநீரகம் உடனே இயங்க ஆரம்பித்து விடும்.
 • நீங்கள் மருத்துவமனையில் தங்கும் நாட்கள் உங்கள் மாற்று சிறுநீரகம் எவ்வளவு சீக்கரம் உடனே வேலை செய்கின்றது என்பதையும் வேறு தொந்தரவுகள் எதுவும் வராததையும் பொறுத்தது. மாற்று சிறுநீரகம் உடனே வேலை செய்து எந்த பாதிப்பகளும் இல்லாமலும் இருந்து விட்டால் நீங்கள் 10-14 நாட்களுக்குள் வீடு திரும்பலாம்.
 • மேற்கூறிய படிகள் மருத்துவமனைக்கு மருத்துவமனை சிறிது மாறுபடலாம். உங்களுடைய எந்த சந்தேகங்களையும் உங்கள் குடும்ப மருத்துவர்/சீறுநீரக மருத்துவரிடம் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

படி -8-உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம்.

நீங்கள் நன்கு உடல் நிலை தேறிய பிறகு.... ஒரு ஆரோக்யமான சுதந்திரமான வாழ்க்கையை பல வருடங்களுக்கு எதிர்ப்பார்க்கலாம். ஆனால் நீங்கள் உங்கள் குறிக்கோளை அடைந்து விட்ட போதும் உங்கள் பயணம் இன்னும் முடியவில்லை என்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

இனிமேல் நீங்கள் எப்படி எப்படி இருக்க வேண்டும் என்று உங்கள் சிறுநீரக மாற்று மருத்துவக் குழு உங்களை அறிவுறுத்தியபடி கவனமாக நடந்து கொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்காக தயாரித்து கொடுத்துள்ள வழிமுறைகள் உங்களுக்காக மட்டுமே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டவையாகும். அவை ஒவ்வொரு சிறுநீரக மாற்று சிகிச்சை பெற்ற நபருக்கும் வேறுபடலாம். அவை இனி உள்ள உங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை சீர்பட தொடர உதவும்.

இந்த வழிமுறைகள் பொதுவாக கீழ்கண்ட தலைப்புக்களில் இருக்கும். நீங்கள் உங்கள் மருத்துவக் குறிப்பேட்டில் இவற்றை தனியாக உங்கள் உபயோகத்திற்கு குறித்தும் வைத்துக் கொள்ளலாம்.

 1. ஆகார முறைகள்
 2. மருந்துகள் மற்றும் அவற்றை எடுத்துக் கொள்ள வேண்டிய முறைகள்
 3. செய்ய வேண்டிய உடற்பயிற்சி முறைகள்
 4. கண்டிப்பாக செய்யக் கூடாதவை
 5. சிறுநீரக மாற்று சிகிச்சை முடிந்த சில வாரங்களுக்கு 15 கிலோ எடைக்கு மேல் தூக்க வேண்டாம்.
 6. மாற்று சிறுநீரகம் உள்ள இடத்தினை அழுத்தக் கூடிய எந்த செயலையும் உதாரணமாக அந்தப் பக்கம் வளைவது, நீட்டி நிமிர்வது, வேறு பொருட்களினால் அந்த இடத்திற்கு அழுத்தம் கொடுப்பது போன்றவற்றை செய்தல் கூடாது.
 7. முதல் 4 வாரங்களுக்கு கார், இரு சக்கர வண்டி இவைகளை ஓட்ட வேண்டாம்.
 8. உங்கள் சிறுநீரக மாற்று மருந்துகளின் அளவை நீங்களாகவே மாற்ற வேண்டாம். ஏதேனும் மருந்தை எடுத்துக் கொள்ள மறந்து விட்டால் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். நீங்களாக அடுத்த முறை மருந்தை இரண்டு மடங்காக எடுத்துக் கொள்வது போன்ற செயல்களைச் செய்யக் கூடாது.
 9. ஜலதோஷம், இருமல் போன்ற கிருமித் தொற்று நோய் உள்ளவர்களிடத்தில் செல்லக் கூடாது.
 10. வெறுங்காலில் நடக்க வேண்டாம். இதனால் காலில் புண் போன்றவற்றை தவிர்ப்பது மட்டுமின்றி பல வகை கிருமிகளால் வரக் கூடிய தொற்று நோய்களையும் தவிர்க்கலாம்.
 11. செல்லப் பிராணிகளை கொஞ்சுவதோ அவைகளின் கழிவுகளை சுத்தம் செய்வதோ கூடாது.
 12. முடிந்த வரை ஹோட்டல்களில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
 13. மது வகைகளை தவிர்க்கவும். அது ஈரலை பாதிக்கும்.
 14. புகை பிடிப்பதையும் புகையிலையை வேறு வகைகளில் உபயோகிப்பதையும் தவிர்க்கவும். புகையிலை மற்ற எல்லா உறுப்புகளையும் பாதிக்கும்.

5. கண்டிப்பாக செய்ய வேண்டியவை

 1. முன்பே நிச்சயிக்கப்பட்ட பதிவின்படி சிறுநீரக மருத்துவரை சந்தித்து சொல்லப்பட்ட பரிசோதனைகளை செய்து ஆலோசனை பெற வேண்டும்
 2. சிறுநீரக மாற்று மருந்துகளை சற்றும் மாறாமல் மருத்துவர் சொன்னபடி எடுத்துக் கொள்ள வேண்டும்.
 3. வேறு எந்த மருத்துவர் எந்த மருந்தை கொடுத்தாலும் அதை எடுத்துக் கொள்ளலாமா என்பதை உங்கள் சிறுநீரக மருத்துவரை கலந்து கொண்டு சாப்பிடுங்கள்.
 4. சில எச்சரிக்கைகள் உங்களுக்கு சொல்லித் தரப்பட்டிருக்கும். சில அறிகுறிகள் வந்தால் உடனே தாமதிக்காமல் சிறுநீரக மருத்துவரை அணுகவும்.

ஆதாரம் : Dr. V. கண்ணன் M.D., D.M (Nephro), பத்மா கிட்னி சென்டர்

3.10465116279
கருப்பையா Aug 01, 2020 09:05 PM

ரத்த சொந்தம் உள்ள உறவினர்களின் முலம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய எவ்வளவு செலவாகும்

K.santhoshkumar Oct 22, 2019 07:31 AM

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு எப்படி அரசு அனுமதி வாங்குவது

ராஜன் Aug 16, 2019 12:21 PM

டயாலிஸ், கிரியாட்டின் அளவு எவ்வவளவு இருக்கும் போது தேவைப்படுகிறது.

சந்திரசேகர் Jun 10, 2019 06:34 PM

மிகத் தெளிவாக புரிந்தது

அ.கிரி Sep 27, 2018 08:48 AM

அருமை

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top