பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / மருத்துவ முறைகள் / இயன்முறை மருத்துவம் / உடல்நலத்திற்கு உதவும் மிதிவண்டிப் பயிற்சி
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

உடல்நலத்திற்கு உதவும் மிதிவண்டிப் பயிற்சி

உடல்நலத்திற்கு உதவும் மிதிவண்டிப் பயிற்சி

மிதிவண்டிப் பயணம்

காலபோக்கில் நிறைய உயிர்க்கொல்லி நோய்கள் ஆக்கிரமித்துவிட்ட கொடிய கால கட்டத்தில் நாம் பயணித்து கொண்டுள்ளோம் அது தவறாகாது. எண்ணில் அடங்காத நோய்கள் இன்று மனித சமுதயாத்தைக் கொன்று குவிக்க தயாராகிவிட்ட ஒரு முறையற்ற வாழக்கையை நாம் பின்பற்றத் தொடங்கி விட்டோம். நம் அவசர ஓட்டத்தில் எதுமே நம் கை தூரத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசையில் ஆரோக்கியத்தை அள்ளித்தந்த மிதிவண்டி ஓட்டும் பயனுள்ள பழக்கத்தை மறந்தே போய்விட்டோம். தொழில்புரட்சியின் காரணமாகக் கணக்கில் அடங்கா வாகன உற்பத்தி, அதை கையாளும் எளிமை போன்ற காரணங்களால் நம் சமுகம் இந்த ஆரோக்கிய பயணத்தைத் தொலைந்து போக செய்துவிட்டது. அது மட்டுமில்லாமல் வாகன பெருக்கம், சாலை நெரிச்சல், மக்கள் தொகை, குறித்த காலத்தில் சேர வேண்டும் போன்ற பல காரணங்களால் நாம் மிதிவண்டி உபயோகிக்கும் பழக்கத்தை தூர எரிந்து விட்டோம்.

உடல்நலம் நம் முழு மூச்சாக இருக்கும் பட்சத்தில் மிதிவண்டிப் பயணம் ஒரு நல்ல தேர்வாக அமையும். நான் அதற்காக உங்களை மிதிவண்டியை எடுத்து கொண்டு உச்சி வெயிலில் தார்ச் சாலையின் நடுவில் பயணிக்க சொல்லவில்லை. அப்படி செய்தாலும் நாம் மீண்டும் வீடு வந்து சேருவோம் என்ற உத்திரவாதம் இல்லை. எல்லோரும் பெட்ரோலிய வாகனங்களைப் பயன்படுத்தப் பழகி விட்ட காலத்தில் நாம் மட்டும் மிதிவண்டியில் பயணித்தால் இந்த சமுதாயம் நம்மை ஒரே வார்த்தையில் முட்டாள் என்று கூறி விடும். அதற்காகக் கண்டுபிடிக்கபட்ட ஒன்று தான் நிலையான மிதிவண்டி இதை ஆங்கிலத்தில் (static bicycle or stationary bicycle) என்று கூறுவர்.

மிதிவண்டிப் பயணம் நம் முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற ஒரு உடல்நலப் பயணம். மிதிவண்டி மிதிப்பதால் நம் கால்கள் வலுப் பெறுவதோடு நம் இதயத்தின் இயங்கு திறனை வலுபடுத்தும் என்பது மருத்துவர்கள் நிருபித்த ஒன்று. இது போன்ற உபகரணம் இப்பொழுது அனைத்து உடற்பயற்சி நிலையங்களிலும் நாம் காணலாம். அதில் யாராவது ஒருத்தர் அமர்ந்து அதனை ஓட்டிக் கொண்டு இருப்பதை நீங்கள் காணலாம், என்னடா இது உட்கார்ந்த இடத்திலேயே ஓட்டிகிட்டு இருக்கான் என்று சிரிப்பு கூட வரலாம். உடற்பயிற்சி நிலையங்களுக்குச் செல்ல முடியாதவர்கள் இதனை வீட்டில் வாங்கி வைத்து கொண்டு தங்கள் பயிற்சியைத் தொடரலாம்.

இதற்குப் பெரிய பரிந்துரைகளோ ஆலோசனையோ தேவை இல்லை. நீங்க உடல்நலமாக இருக்கும் பட்சத்தில் இந்த உடற்பயிற்சியைக் காலையிலோ, மாலையிலோ உங்களால் முடிந்தால் இந்த மிதிவண்டியை வீட்டில் வாங்கி வைத்து கொண்டு பயிற்சியைத் தொடருங்கள். குறைந்தது தினமும் அரை மணி நேரம் மிதிவண்டி மிதிப்பதால் இதயமும் அதனைச் சுற்றி உள்ள தசைப் பகுதியும் வலுப்பெரும். இதய தசைகள் வலுப்பெருவாதால் நம் உடலில் ரத்த இயக்கம் சீராக்கப்படுகிறது. நாம் நம்மை இருதய நோய்களில் இருந்து முற்றிலும் காத்துக் கொள்ளலாம்.

மிதிவண்டிப் பயிற்சியின் பயன்கள்

 1. உங்கள் உடம்பில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைத்து, அதாவது அரைமணி நேர மிதிவண்டி பயிற்சி குறைந்தது உடம்பில் உள்ள 300 கலோரி கொழுப்பின் அளவை எரிக்கும் சக்தி வாய்ந்தது. அதாவது தொடர்ந்து வாரத்திற்கு 5 அல்லது 6 முறை செய்வதால் 1500 முதல் 2000 கலோரி கொழுப்பு எரிக்கப்படும். இதனால் உடல் பருமன் உள்ள அனைவருக்கும் இது ஒரு சிறந்த பயிற்சியாகும்.
 2. உடம்பில் சேரும் தேவையற்ற கொழுப்பின் அளவைக் குறைத்து இரத்த ஓட்டத்தைச் சீராக்குவதால் இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை தவிர்த்து இரத்தக் கொதிப்பு, இதய நோய்களிலிருந்து நம்மை முற்றிலும் பாதுகாக்கிறது.
 3. மிதிவண்டி மிதிப்பதற்கு நம் கால்களை உபயோகிக்கும் போது, கால்களில் உள்ள தசைகள் வலுப்பெறுகிறது. அதாவது, கால்களின் பின் புறத்தில் உள்ள இரண்டு வலுவான தசைகள் (calf muscle) நம் காலுக்கு வரும் இரத்த ஓட்டத்தைப் புவிஈர்ப்பு விசைக்கு எதிராக மேல் நோக்கி உந்தி இதயத்தை நோக்கித் தள்ளிக் கால்களில் இரத்த ஓட்டம் தேங்காமல் இருக்க உதவுகிறது. இதற்கு மிதிவண்டி பயற்சி மிகவும் பயனுள்ள ஒன்று.
 4. மேலும் நீங்கள் செய்யும் அரை மணி நேர பயிற்சியின் போது சுவாசம் சீராக்கபடுவதால் மூளைக்குத் தேவையான சுத்தமான பிராணவாயு (oxygen) கிடைக்கிறது. இதனால் மூளை சீராக இயக்கப்படும் போது தேவையற்ற பயம், மன அழுத்தம் போன்ற நோய்கள் நம்மை அண்டாது. அதோடு மட்டும் இல்லமால் நம் அன்றாடச் செயல் திறனை அதிகபடுத்தி, சோம்பல் தனத்தில் இருந்து விடுவிக்க உதவுகிறது.
 5. இந்த பயிற்சி மூட்டு வலி உள்ளவர்களுக்கும் ஆரோக்கியமான ஒன்று. கால்களின் தசைகள் வலு பெரும் போது, தொடைப் பகுதியில் உள்ள தசையான (quadriceps) வலுப்பெற்று எலும்புத் தேய்மானத்தைத் தடுத்து வலியில் இருந்து முழு நிவாரணம் அளிக்கும்.
 6. இடுப்பில் அதிகமாகத் தேங்கும் கொழுப்பைக் குறைக்க மருத்துவர்களாலும், உடற்பயிற்சி வல்லுனர்களாலும் பரிந்துரைக்கப்படும் உடற்பயிற்சியில் மிதிவண்டிப் பயற்சி மிக முக்கிய இடம் வகிக்கிறது.
 7. தொடர்ந்து இதனைச் செய்து வருவதால் இதயத்தின் இயக்கம் நல்ல செயல் திறனை அடைந்து மாரடைப்பு (Heart Attack) நோயில் இருந்து நம்மை முழுதும் பாதுகாத்து கொள்ள முடியும். அது மட்டும் இல்லாமல் ரத்தில் உள்ள சர்க்கரையின் அளவைச் சீராக்கி சர்க்கரை நோயால் வரும் பாதிப்புகளை தடுப்பதற்கும் உதவும்.
 8. உடற்பயிற்சி செய்யும் போது உடம்பில் உள்ள தேவையற்ற அழுக்கு வியர்வை மூலம் வெளியேறுவதால் நாம் புத்துணர்ச்சி பெறுவதோடு சிறப்பான உடல்நலத்தையும் தரும்.
 9. கொழுப்பு உடலிருந்து எரிக்கப்படுவ்தால் இரத்த நாளங்களில் ஏற்படும் (artherosclerosis) என்ற நோயை (கொழுப்பு தேங்குவதை) தடுக்கிறது, இதனால் இரத்தக் கொதிப்பு, பக்கவாதம் போன்ற நோய்களிருந்து பாதுகாக்கிறது. இதனால் நம் வாழ்நாள் கூடுவதோடு, நோயற்ற வாழ்வு வாழலாம்.

யார் இதனைச் செய்யலாம்?

வயது வந்த அனைவருக்கும் இந்த பயிற்சி ஒரு நல்ல தடுப்பு நிவாரணி. அதாவது, இதய நோய்களிலிருந்து முற்றிலும் நம்மைப் பாதுகாப்பதால் இதனை ஆரோக்கியமாக உள்ள யார் வேண்டுமானாலும் செய்யலாம். அதாவது நோய் வரும்முன் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் சிந்தனை உள்ள அனைவரும் இதனைச் செய்யலாம்.

இரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்கள், உடம்பில் கொழுப்பின் அளவு அதிகம் உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், இதய இயக்கத்தின் அல்லது அதன் செயல் திறன் குறைவாக உள்ளவர்கள் உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி இதனைச் செய்யலாம்.

எவ்வளவு நேரம் செய்யலாம்

 1. தினமும் குறைந்தது பதினைந்து நிமிடம் முதல் அரை மணி நேரம்.
 2. வாரத்திற்கு குறைந்தது 4 அல்லது 5 நாட்கள் செய்வது

மேற்சொன்ன அனைத்துப் பயன்களையும் மிதிவண்டிப் பயிற்சி உங்களுக்கு அள்ளித்தரும். தொடருங்கள்...தொலைத்துவிட்ட உங்கள் மிதிவண்டிப் பயணத்தைத் தொடருங்கள்!

உடற்பயிற்சிக்கான, நிலையான மிதிவண்டியை வாங்கிப் பயிற்சி எடுப்பதை விட, உண்மையாகவே மிதிவண்டியை வாங்கி ஓட்டினால் பெட்ரோலியச் செலவுகள் மிச்சப்படுவதுடன் சிறந்த உடல் நலமும் மருத்துவச் செலவும் மிச்சமாகும்.

அப்படியே செய்யுங்கள் உடல்நலத்துடன் உங்கள் பணமும் சேமிப்பாகும்.

ஆதாரம் : முத்துக்கமலம் இணைய இதழ் (டாக்டர். தி. செந்தில்குமார்)

3.11428571429
குழந்தைசாமி Apr 16, 2017 12:29 PM

மருந்தில்லா மருத்துவம் = மிதி வண்டி, மாசு குறையும்.

Tamilmuthu Dec 19, 2015 12:14 PM

மிக முக்கியமான உடல்நலத் தகவல்கள். நன்றி

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
Back to top