பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

அலர்ஜி

தோல் அலர்ஜி ஏற்பட காரணங்கள் மற்றும் அதன் தடுப்பு முறைகள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அலர்ஜிக்கான காரணங்கள்

ஒவ்வாமை... இது எப்போது வேண்டுமானாலும் யாருக்கும் வரலாம். நேற்று வரை நன்றாக இருந்த ஒருவருக்கு இன்று திடீரென ஏதோ ஒன்று  அலர்ஜியாகி அவதியைக் கொடுக்கலாம். அலர்ஜிக்கான காரணங்கள் ஆயிரக்கணக்கானவை. சின்ன தூசியிலிருந்து, சூரிய ஒளி வரை எது, யாருக்கு,  எப்போது அலர்ஜியை தரும் என்று சொல்வதற்கில்லை.

அறிகுறிகள்

அரிப்பு, வலி, எரிச்சல், சிவந்து போதல், தடிப்பு, நடுவில் வெள்ளைப் புள்ளியுடன் கூடிய சிவந்த, வட்ட வடிவத் தடிப்புகள் போன்றவை தென்படும். இது சில நிமிடங்களில் இருந்து, சில மணி நேரம் வரை நீடிக்கலாம். ஒவ்வாமைக்குக் காரணமான பொருளுடன் மறுபடி தொடர்பு ஏற்படாத வரை  பிரச்னை இருக்காது. கான்டாக்ட் டெர்மாடைட்டிஸ் எனப்படுகிற இந்தப் பிரச்னைக்கு கிட்டத்தட்ட  30 ஆயிரம் காரணிகள் இருப்பதாக  சொல்லப்பட்டாலும், அவற்றில் 25 காரணிகள்தான் பெரும்பாலான அலர்ஜிகளை ஏற்படுத்துகின்றன.

அலர்ஜியின் வகைகள்

உண்ணும் உணவிலிருந்து, உடுத்தும் உடை, உறைவிடம் வரை எது வேண்டுமானாலும் ஒருவருக்கு  ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.  உதாரணத்துக்கு... முட்டை, பால், பாதாம், இறால், சீஸ், மகரந்தம் மற்றும் குறிப்பிட்ட சில மருந்துகள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.  சிலருக்கு  வாட்ச், கவரிங் நகைகள், நிக்கல், தங்கம், குரோமியம் உள்ளிட்ட உலோகங்கள் கூட ஒவ்வாமையை உருவாக்கலாம்.

கெமிக்கல் உபயோகத்தாலும் ஒவ்வாமை வரலாம். ஆல்கஹால், டர்பன்டைன், அசிட்டோன், கீடோன், லேட்டக்ஸ், மண்ணெண்ணெய் உள்ளிட்ட  ரசாயனங்களுடன் தொடர்புடைய வேலையில் இருப்போருக்கு இந்த அலர்ஜி வரலாம். வீட்டில் பாத்திரம் தேய்க்கவோ, துணி துவைக்கவோ  உபயோகிக்கிற சோப் மற்றும் டிடர்ஜென்ட் கூட ஒவ்வாமையைத் தரலாம். பியூட்டி பார்லர்களில் வேலை பார்க்கிற பெண்களுக்கு, சோடியம் லாரல்  சல்ஃபேட் உள்ளிட்ட குறிப்பிட்ட சில அழகுசாதனங்களைக் கையாள்வதன் மூலம் ஒவ்வாமை வரலாம்.

போட்டோ கான்டாக்ட் டெர்மடைட்டிஸ் என்பது  துணியால் மூடப்படாத சருமப் பகுதிகளில் உண்டாகக் கூடிய ஒருவித அலர்ஜி. எளிமையாகச்  சொல்வதானால் சூரிய வெளிச்சமும், யுவி கதிர்களும் சருமத்தில் பட்டு, அதன் விளைவாக ஏற்படுகிற ஒவ்வாமை இது. சிவந்த நிறத் தடிப்புகள்,  செதில் செதிலான தோற்றம், சின்னச் சின்ன கட்டிகள் போன்றவை இதன் அறிகுறிகள்.

எப்படிக் கண்டுபிடிப்பது?

உணவுகளால் ஏற்படுகிற அலர்ஜியை கண்டுபிடிக்க ஒரு எளிமையான வழி உள்ளது. ஒவ்வாமை ஏற்படுகிற அன்று என்னவெல்லாம் சாப்பிட்டீர்கள்  எனப் பட்டியல் போட்டு வையுங்கள். இரண்டாவது முறை ஒவ்வாமை ஏற்படும்போதும் அன்றைய தினம் சாப்பிட்ட உணவுகளைப் பட்டியலிடுங்கள்.  இரண்டு நாளைக்கும் பொதுவான உணவு ஏதேனும் உண்டா எனப் பாருங்கள். மூன்றாவது முறையும் அப்படி இருந்து, மூன்று முறைக்கும் பொதுவான  உணவு இருப்பது உறுதி செய்யப்பட்டால், அதுதான் உங்கள் அலர்ஜிக்கான காரணமாக இருக்கும்.

மிகவும் குறைந்த அளவு ஒவ்வாமை என்றால், ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். பிளெயின் கேலமைன் லோஷன் தடவலாம். அரிப்பும் எரிச்சலும்  சிவந்து போதலும் அதிக மானால், மருத்துவரிடம் ஆயின்மென்ட், ஆன்ட்டி ஹஸ்டமைன் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். எதற்கும் கேட்காமல்  தொடரும் அலர்ஜி என்றால் சரும மருத்துவரிடம் முழு ஆலோசனை மேற்கொள்வதே சிறந்தது. அவர் அலர்ஜிக்கான காரணத்தைக் கண்டறிய ரத்தப்  பரிசோதனையோ, பேட்ச் டெஸ்ட்டோ செய்யப் பரிந்துரைப்பார். அலர்ஜிக்கான காரணம் தெளிவாகத் தெரிந்ததும், அதற்கேற்ப சிகிச்சை ஆரம்பிக்கப்படும்.

தடுப்பு முறைகள்

வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும். குறிப்பாக 11 முதல் 3 வரையிலான வெயிலைத் தவிர்க்கவும். பெரும்பாலான சன் ஸ்கிரீன் கிரீம் மற்றும்  லோஷன்களில் பிஏபிஏ என்கிற கெமிக்கல் இருக்கும். சூரிய வெளிச்சத்தால் அலர்ஜி ஏற்படுகிறவர்கள், அதைத் தவிர்க்க வேண்டும். பிஏபிஏ  கலப்பில்லாத சன் ஸ்கிரீனை கவனமாகத் தேர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டும்.

சருமம் முழுவதும் மறைகிற மாதிரி உடையும், தலைக்குத் தொப்பியும் அணிவது பாதுகாப்பானது. கெமிக்கல் தொடர்பான வேலையில் இருப்போர்,  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். உதாரணத்துக்கு கைகளுக்கு கிளவுஸ் அணிவது, பாதுகாப்பான உடை அணிவது,  கெமிக்கல் பாதிப்பைத் தடுத்து நிறுத்தும் கிரீம் உபயோகித்து வேலை பார்ப்பது போன்றவற்றைப் பின்பற்ற வேண்டும்.  டிடர்ஜென்ட், சோப்  போன்றவற்றை வைத்து வீட்டுவேலை செய்கிற பெண்களும், ஷாம்பு, கலரிங், பிளீச் போன்றவற்றைக் கையாளும் பார்லர் வேலையில் ஈடுபடுகிற  பெண்களும் கைகளுக்கு கிளவுஸ் அணிய வேண்டும்.

வேலை செய்து முடித்ததும், கைகளை நன்கு கழுவித் துடைத்துவிட்டு, மாயிச்சரைசர் தடவ வேண்டும்.  அலர்ஜிக்கு காரணமான உலோகங்களை  உபயோகிப்பதைத் தவிர்க்கவும். சில நேரங்களில் சிலவித சத்துக் குறைபாடுகள் கூட ஒவ்வாமைக்கு இடம் கொடுக்கலாம். அதைத் தெரிந்து கொண்டு,  ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸும், வைட்டமின் ஏ, சி, இ, டி மற்றும் பி காம்ப்ளக்ஸ் உள்ள மல்ட்டி வைட்டமின் மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம்  இதிலிருந்து தப்பிக்கலாம். மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தினமும் குறிப்பிட்ட அளவு வைட்டமின் சி மற்றும் டி சத்து நிறைந்த  மாத்திரைகளை எடுத்துக் கொள்வதும் நல்லது. நாள்பட்ட ஒவ்வாமையாகத் தெரிந்தால்,  சரும மருத்துவரைப் பார்த்து ஆலோசனையும் சிகிச்சையும் எடுப்பதே சிறந்தது.’’

ஆதாரம் : தினகரன் நாளிதழ்

3.18181818182
shankar Mar 17, 2018 09:39 PM

நல்ல பயனுள்ள தகவல்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top