অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

டெங்கு - சிகிச்சை முறை

டெங்கு - சிகிச்சை முறை

கொசுக்களால் பரப்பப்படும் ஒருவித வைரஸ் நுண்கிருமிகளால் ஏற்படக்கூடியது இந்த டெங்கு காய்ச்சல். நான்கு  வகையான வைரஸ் கிருமிகளால் இந்த நோய் பரவுகிறது.

நோய் பரவும் வழிகள்

ஈடீஸ் எனப்படும் கொசுக்களால்தான் வைரஸ் கிருமிகள் பரவி டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. ஈடீஸ் வகைக் கொசுக்கள், பகல் நேரத்தில்தான் மனிதர்களைக் கடிக்கும். தேங்கிய நீர்நிலைகளில் முட்டையிட்டுப் பெருகக்கூடியவை.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபரைக் கொசு கடிக்கும் போது பாதிக்கப்ட்டவரின் உடலில் இருந்து வைரஸ் கிருமிகள் கொசுக்குப் பரவும்.

பிறகு, இந்தக் கொசு இன்னொருவரைக் கடிக்கும்போத அதன் உடலில் இருந்து வைரஸ் கிருமிகள் அவருக்கும் இந்தக் கிருமிகள் பரவி டெங்கு காய்ச்சலை ஏற்படுத்திவிடும்.

மழைக்காலங்களில் தான் கொசுக்கள் அதிகம் உற்பத்தி ஆகி நோயைப் பரப்புகின்றன. முதன் முறையாக கொசு கடித்து வைரஸ் கிருமிகள் உடலுக்குள் நுழைந்த மூன்று முதல் பதினான்கு நாள்களுக்கும் காய்ச்சல் ஏற்படும்.

ஏழு முதல் பத்து நாள்கள் வரை காய்ச்சல் இருக்கும்.

டெங்கு ரத்தக் கசிவு நோய்

இரண்டாவது முறை வைரஸ் தாக்கினால் டெங்கு ரத்தக் கசிவு நோய் ஏற்படும்.

ஒருவருக்கு ஏற்கெனவே டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு அதற்கான நோய் எதிர்ப்புச் சக்தி உடலுக்குள் உருவாகி இருக்கும் நிலையில், இன்னொரு வகையான வைரஸ் கிருமி தாக்கினால் இந்த நோய் ஏற்படும்.

மூன்று முதல் ஏழு நாள்கள் கழித்து காய்ச்சல் குறையும்போது பல மாற்றங்கள் நிகழும். ரத்தக் குழாய்கள் விரிவடைவதாலும், ரத்தத்தில் உள்ள புரதச் சத்துக்கள் வெளியேறுவதாலும், ரத்தம் கசிவதாலும் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும்.

ரத்தத்தில் ஏற்படும் அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். (நீர் குறைவதால்) நுரையீரலைச் சுற்றி நீர் கோத்துக் கொள்ளும். வயிற்றுப் பகுதிகளிலும் நீர் சேரும். முகத்தில் கண்களைச் சுற்றி வீக்கம் தெரியும்.

பல்வேறு இடங்களில் ரத்தக் கசிவு ஏற்படலாம். தோலில் கொசுக்கடி போன்ற சிவப்புப் புள்ளிகளும்,  வயிற்றுக்குள் ரத்தக்கசிவும் ஏற்படலாம்.

ரத்தம் உறைவதற்குத் தேவையான அணுக்கள் குறைவதால் இத்தகை பாதிப்புகள் ஏற்படும். நோயின் தீவிரம் அதிகரித்தால், இந்தப் பாதிப்புகளுடன் ரத்த அழுத்தமும் குறையும்.

நோயின் அறிகுறிகள்

காய்ச்சல் மிக அதிகமாக இருக்கும் (103 முதல் 108 டிகிரி ஃபாரன்ஹீட்), தலைவலி (குறிப்பாக நெற்றி மற்றும் கண்களுக்குப் பின்னால்), உடல் வலி, முக்கியமாக முதுகு வலி அதிகமாக இருக்கும்.

தோலில் தடிப்புகள் அதிகமாக இருக்கும். இவை 24 முதல் 48 மணி நேரத்துக்கு இருக்கும். வாந்தி மற்றும் வயிற்றுவலி இருக்கும். காய்ச்சல் இருக்கும் அளவுக்கு நாடித்துடிப்பு அதிகமாக இருக்காது.

பசியின்மை, உடல்சோர்வு, நெறிகட்டிகளால் வீக்கம், கை, கால்களில் வீக்கம் ஏற்படலாம். சில நாள்களில் காய்ச்சல் குறைந்து, பிறகு மீண்டும் காய்ச்சல் அதிகரிக்கலாம். பல்வேறு இடங்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டு ரத்த அழுத்தம் குறையலாம்.

பரிசோதனைகள்

ரத்தப் பரிசோதனைகள் மிகவும் இன்றியமையாதவை. சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் செயல்பாடுகளை அறிவதற்காக, ரத்தத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்களின் அளவு, ரத்தம் உறைவதற்கான நேரம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளைச் செய்யவேண்டும்.

டெங்கு காய்ச்சல்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேறு சில பரிசோதனைகளைச் செய் வேண்டும். எக்ஸ்-ரே, ஸ்கேன் (வயிற்றுப் பகுதி) ஆகியவற்றை எடுக்கவேண்டும். அடிக்கடி ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டியவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குக் கீழ்க்கண்ட அறிகுறிகள் இருந்தால், அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க  வேண்டும்.

சோர்வாக இருத்தல் அல்லது ஆசுவாசப்படுத்த முடியாமல் அழுதல்.

ரத்தக் கசிவு (எவ்வளவு குறைவான அளவாக இருந்தாலும்)கை கால்கள் நீலம் பூத்திருத்தல்.

உடல் சில்லிட்டுப்போதல். வயிற்று வலி மிக அதிகமாக இருத்தல். ரத்த அணுக்கள் குறைவாக இருத்தல்.

நுரையீரலைச் சுற்றியோ, வயிற்றிலோ நீர் கோத்துக் கொள்ளுதல். ரத்த அழுத்தம் குறைவது; நாடித் துடிப்பு சீராக இல்லாத நிலை. உணவு சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவோ முடியாத நிலை.

சிகிச்சை

டெங்கு காயச்சலுக்கென பிரத்யேக மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. காய்ச்சல் குறைவதற்கு பாரசிடமால் கொடுக்க வேண்டும்.

உணவு சாப்பிட முடியாத குழந்தைகளுக்கு தேவையான அளவு நீர்ச்சத்து கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால், குழந்தைகளை மருத்துவமனைல் சேர்த்து சிவப்பு அணுக்களோ அல்லது வேறு ரத்த அணுக்களோ  ஏற்ற வேண்டும்.

தடுக்கும் வழிகள்

  • ஏடிஸ் இஜிப்டி வகை கொசுக்கள் பகலில் மனிதர்களை கடிக்கின்றனர். இவை தேங்கி நிற்கும் தண்ணீர் தொட்டிகளில் முட்டையிடுகின்றன. ஆகவே காலி பூந்தொட்டிகள் இருந்தால் சுத்தமாக வைக்கவும் அல்லது மூடி வைக்கவும்.
  • கொசு விலக்கி கீரிம்களை இரவிலும் பகலிலும் தொடர்ந்து பயன்படுத்தவும்.
  • உங்கள் ஜன்னல் மற்றும் கதவு திரைகளில் ஓட்டைகள் இல்லை என்பதை உறுதிபடுத்திக் கொள்ளவும்.
  • உங்கள் வீட்டில் டெங்கு நோயாளிகள் இருந்தால் அவர்களை கொசு கடிக்காமல் பார்த்துக்கொள்ளவும்.
  • எப்பொழுதும் கொசு வலையின் கீழ் தூங்கவும்.
  • வீட்டில் கூலர் பயன்படுத்தினால் அந்த தண்ணீரை அவ்வப்பொழுது சுத்தம் செய்யவும்.
  • குப்பை தொட்டியை மூடி வைக்கவும்.
  • ஜன்னல் ஓரம் துளசி செடியை வளர்ப்பது இயற்கையாக கொசுவை விரட்ட உதவும்.
  • கற்பூரத்தை ஒரு அறையில் ஏற்றி ஜன்னல். கதவுகளை மூடுவதும் கொசுவை விரட்டுவதற்கான எளிய வழி என்பதை நினைவில் கொள்க.
  • உபயோகப்படுத்தாத வாளி மற்றும் பாத்திரங்களை மூடி வைக்கவும்.

கேள்வி பதில்கள்

1. என்ன சிகிச்சை?

டெங்கு நோய்க்கென்று தனியாகச் சிகிச்சையோ, தடுப்பூசியோ இல்லை. டெங்கு தானாகத்தான் சரியாக வேண்டும். அதுவரை ரத்தக்கசிவு, குறை ரத்த அழுத்தம் போன்ற ஆபத்தான விளைவுகளைக் கட்டுப்படுத்தவே சிகிச்சை தரப்படும்.

2. என்ன பரிசோதனைகள் உள்ளன?

என்.எஸ்.ஐ 1 ஆன்டிஜென் (Non Structural 1 Protein அல்லது NS1 antigen) பரிசோதனை செய்யலாம். இது, நோயாளியின் ரத்தத்தில் டெங்கு கிருமிகளுக்கான ஆன்டிஜென் உள்ளதா எனக் கண்டறியும் பரிசோதனை.

3. டெங்கு சரியாகி விட்டது என எப்படி தெரிந்து கொள்வது?

டெங்கு ஐ.ஜி.எம்., ஹெமெட்டோகிரிட் மற்றும் தட்டணுக்கள் பரிசோதனைகளை நோயாளிக்குக் காய்ச்சல் குறைந்த பின், அதாவது நோய் ஆரம்பித்த இரண்டாவது வாரத்தில் மீண்டும் செய்தால் தெரிந்துவிடும்.

ஆதாரம்: அண்ணாநகர் டெய்லி பேப்பர் & தினமலர் நாளிதழ்

கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate