অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

இளம் தாய்மார்களுக்குத் தேவையான லேகியங்கள்

இளம் தாய்மார்களுக்குத் தேவையான லேகியங்கள்

பிரசவ லேகியம்

பாரம்பரியமிக்க லேகியம் இது. சுக்கு, கொத்துமல்லி, பனை சர்க்கரை, கதகுப்பை நெய் சேர்த்த பிரசவ லேகியம் 7 மாத கர்ப்பம் முதல் குழந்தையின் ஒரு வயது வரை தாய்க்குத் தருவது வழக்கம். இதன் மூலம் கர்ப்பச் சூடு குறையும், இயற்கையான இரும்பு மற்றும் கால்ஷியம் சத்தும் கிடைக்கிறது. இதனுடன் உரை மருந்தும் தருவது வழக்கம். பூண்டு லேகியம் நன்றாகப் பால் சுரக்க உதவும். இந்த மூன்று லேகியத்தின் செய்முறையும் பார்க்கலாம்.

தேவையானவை

  • சுக்கு - 2 அல்லது 3 துண்டுகள்
  • சித்தரத்தை - 2 துண்டுகள்
  • கண்டந்திப்பிலி - 1 துண்டு,
  • அரிசி திப்பிலி - சிறிதளவு
  • ஏல அரிசி - சிறிதளவு
  • கசகசா - 2 டீஸ்பூன்
  • சோம்பு - 2 டீஸ்பூன்
  • ஓமம் - 2 டீஸ்பூன்
  • கிராம்பு - 10,
  • பட்டை - 1/2 துண்டு,
  • வசம்பு - 2 துண்டு,
  • மிளகு - 50 கிராம்,
  • சீரகம் - 2 டீஸ்பூன்
  • இஞ்சி - 3 துண்டு,
  • வெல்லம் - 250 கிராம்,
  • சாத்துக்குடி சாறு - 1/2 கப்
  • நெய் - 3 டீஸ்பூன்
  • நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
  • தேன் - 3 டீஸ்பூன்

அரிசி திப்பிலி, ஏல அரிசி, கசகசா, சோம்பு, ஓமம், கிராம்பு, பட்டை, மிளகு, சீரகத்தை தனித் தனியாக வெயிலில் ஒரு நாள் முழுதும் காய வைத்து எடுத்துத் தனியே வைத்துக் கொள்ளவும்.

  • சுக்கு, வசம்பு, சித்தரத்தை, கண்டந்திப்பிலியை சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வெறும் வாணலியை வைத்து, தனித்தனியாக பொருட்களை பொன் வறுவலாக வறுத்துக் கொள்ளவும்.
  • ஆறியதும் மிக்ஸியில் போட்டு, நைசாக அரைக்கவும்.
  • அரைத்தவற்றை நன்றாகச் சலித்து வைக்கவும்.
  • இஞ்சியை தோல் சீவி, அரைத்து சாறை வடிகட்டி வைக்கவும்.
  • கொஞ்ச நேரம் கழித்து தெளிந்ததும், மேலாக வடித்தெடுத்து கொள்ளவும்.
  • அத்துடன் சாத்துக்குடி சாறையும் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
  • வெல்லத்தை தூள் செய்து அதில் கொட்டவும்.
  • வெல்லம் கரைந்ததும் வடிக்கட்டி, திரும்ப அடுப்பில் வைத்து, 2 நிமிடம் கொதிக்க விடவும்.
  • பொடித்து வைத்துள்ள பொடியை அதில் தூவி கட்டியில்லாமல் கிளறவும்.
  • நெய், நல்லெண்ணெய் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கிளறவும்.
  • கையில் ஒட்டாமல் அல்வா போல் வந்ததும் இறக்கி, தேனை விட்டு கிளறி ஆற விடவும்.
  • நன்கு ஆறியதும் பாட்டிலிலோ, மூடி போட்ட பாத்திரத்தில் எடுத்து வைத்தால் மாதக்கணக்கில் கெடாமலிருக்கும்.

பூண்டு லேகியம்

  • பூண்டு - அரைக் கப் உறித்தது
  • பால் விட்டு வேக வைத்து அத்துடன் இஞ்சிச்சாறு, வடிகட்டிய கருப்பட்டிசாறு சேர்த்து அடுப்பில் வைத்து கடைந்து, இறக்கி வைத்து உருட்டி கொடுக்கவும்.
  • மறுநாள்காலை இஞ்சி, மேல்பொடி, தேன் கொடுக்கவும்.

பச்சிளம் குழந்தைக்கான உரை மருந்து

  • குழந்தை பிறந்த 10 - 15 நாட்களிலிருந்து 5 - 7 வயது வரைதொடர்ந்து உரை மருந்து கொடுக்கலாம்.
  • கடுக்காய், சித்தரத்தை, சுக்கு, ஜாதிக்காய், மாசிக்காய், வசம்பு என்ற ஆறு கடைச்சரக்குகள்.
  • நெல்லைப் புழுக்குவதற்கு வேக வைக்கும்போது நெல்லுடன் இவற்றை அப்படியே வெள்ளைத்துணியில் முடித்து வைத்துவிடவும்
  • அரை வேக்காடு ஏற்பட்டதும் (காய்களை அழுத்தினால் அழுந்தும் பதம் வந்தவுடன்) எடுத்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். உரை மருந்து தயார்.
  • கை அகலத்திலுள்ள உரைகல் ஒன்று தேவை.
  • அதில் வெந்நீர், வெற்றிலைச் சாறு, துளசிச் சாறு, ஓமகஷாயம், இஞ்சிச் சாறு இவற்றில் ஒன்றைவிட்டு ஒவ்வொன்றையும் வயதிற்கேற்றபடி 2 - 5 தடவை உரைத்து வந்த விழுதைத்தேன் அல்லது சர்க்கரை சேர்த்துக் கொடுக்கவும்.

கடுக்காய்

நல்ல ஜீரண சக்தி, பசி தரும். மலத்தை இளக்கும். புளிப்பு (வயிற்றில்) அதிகமாவதைத் தடுக்கும். அஜீரண பேதியைத் தடுக்கும். குடல், இரைப்பை, கல்லீரல் சரியே இயங்கச் செய்யும்.

சுக்கு

வயிற்றில் வாயு சேர விடாது. வயிறு உப்புசம், மலஜலம் சரியாக வெளியேறாதிருத்தல், மப்பால் வயிற்றுவலி, அஜீரணம், வாந்தி இவற்றைப் போக்கும். ஆனால் வயிற்றில் அழற்சி, கடுப்புடன் சீதத்துடன் மலம் வெளியாதல் ரத்தப்போக்கு போன்றவை இருந்தால் சுக்கை உரைத்துக் கொடுக்கக்கூடாது.

சித்தரத்தை

எண்ணெய் தேய்த்தால் ஜ்வரம் சளி பிடிக்கும் என்ற நிலையில் இதனைத் தொடர்ந்து கொடுக்கலாம். தொண்டை-வாய்ப்புண், வறட்டிருமல், வயிற்று வேக்காளம் உள்ள நிலையில் சித்திரத்தையைக் கொடுக்கக்கூடாது. கபக்கட்டுள்ள நிலையில் இதனையும், சுக்கையும் அதிகம் உபயோகிக்கலாம்.

ஜாதிக்காய்

இரைப்பையை நன்கு தூண்டி, ருசி சுவை கூட்டி பசி ஜீரண சக்தி தரும். சிடுசிடுப்பு, பரபரப்பு, காரணம் புரியாத அழுகை முதலியதைக் குறைத்து அமைதியாகத் தூக்கம் வரச் செய்யும். இளகிச் சூட்டுடன் அடிக்கடி மலம் போவதை இது தடுக்கும்.

மாசிக்காய்

வேக்காளத்தைக் குறைக்கும். வாய்ப்புண், இரைப்பைப் புண், குடல் புண் இவற்றைக் குறைக்கும். பற்களைக் கெட்டியாக அழகாக வளரச் செய்யும். உடலில் விஷசக்தி பரவாமல் தடுக்கும். சிறுநீர் தாராளமாக வெளியாகும். தொண்டைச் சதை வளர்ச்சி, உள்நாக்கு வளர்ச்சி, சீத ரத்தத்துடன் மலப்போக்கு, வாயில் உமிழ்நீர் அதிகம் பெருகுதல் இவற்றைக் கட்டுப்படுத்தும்.

ஆதாரம் : தினமணி நாளிதழ்

கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate